தமிழகத்தில், சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்த புதிய விதிகளைத் திரும்பப் பெறக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக இருக்கும் நீதித்துறையின் அங்கமாக இருக்கும் வழக்கறிஞர்களின் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் எடுக்காதது மிகவும் வருத்தம் அளிக்கின்றது.
நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்று தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் போராடி வருகின்றனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அகில இந்திய பார் கவுன்சில் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள 126 வழக்கறிஞர்களை அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றது.
இயற்கை நீதிக்கு முரணாக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் நீதிமன்றம் அங்கீகரிப்பதில்லை. நீதியை நிலைநாட்ட மக்களுக்காகப் போராடும் வழக்கறிஞர்கள் மீதே இயற்கை நீதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம் பெற்ற தமிழக பார் கவுன்சிலும், அதன் பொறுப்பாளர்களும் இருக்கும்போது அகில இந்திய பார் கவுன்சில் ஏன் அவசரமாக நடவடிக்கை எடுத்துள்ளது? உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களைப் பழிவாங்கும் செயலாகவும் இது பார்க்கப்படுகின்றது.
அகில இந்திய பார் கவுன்சில் 126 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்ய எடுத்த நடவடிக்கையை எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாகத் திரும்பப் பெற்று அமைதி ஏற்பட வழிவகை செய்ய வேண்டும்.
ஒரு சில நாட்களிலேயே இந்தப் பிரச்சினையை சென்னை உயர் நீதிமன்றம் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். இன்று கூட மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள், உயர் நீதிமன்றம் இதுவரை புதிய சட்ட விதிகளின்படி வழக்கறிஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருக்கும்போது, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பில் இருக்கும் பார் கவுன்சில், தங்களது உரிமைக்காகப் போராடும் வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து அவசர முடிவாக அறிவித்துள்ளது. எனவே, வழக்கறிஞர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையைத் திரும்பப் பெற்று போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 44 வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையையும் திரும்பப் பெற வேண்டும்; வழக்கறிஞர்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். புதிதாக கொண்டுவரப்பட்ட வழக்கறிஞர் சட்ட விதிகளை உடனடியாக சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெறுவதுதான் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும்.
கடந்த 55 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வழக்கறிஞர்களின் குடும்பங்களும், நீதிமன்றத்தை நாடும் பொது மக்களும் பெரிய சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றங்கள் மூலம் பெற வேண்டிய பாதுகாப்பையும், உரிமையையும் பெறுவதற்கு வழக்கறிஞர்கள் உதவி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களுடைய வாழ்க்கை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment