மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று 27.07.2016 வியாழக்கிழமை, தலைமைக் கழகம் தாயகத்தில் கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் எண் 1:
கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமய - தனியார் மய - உலக மயமாக்கல் கொள்கை அனைத்துத் துறைகளிலும் சீரழிவை ஏற்படுத்தி இருக்கின்றது. சமச்சீரற்ற வளர்ச்சியால் ஏற்றத் தாழ்வுகள் பெருகிவிட்டன. ஒருபுறம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துகள் ஒரு சிலரிடம் குவிந்து கிடக்கின்றது. மறுபுறம் பெரும்பான்மையான மக்கள் உணவுக்கு வழியின்றித் தவிக்கின்றனர்.
புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், மத்திய அரசு மீண்டும் அதையே தீவிரமாகக் கடைப்பிடித்து வருகின்றது. இரண்டு ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பு வகிக்கும், பா.ஜ.க. அரசு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறி விட்டது. முன்பேர வணிகம், இணையதள வணிகம் (Online Trade) ஆகியவை பொருள்களின் விலையேற்றத்திற்குக் காரணமாக உள்ளன. அவற்றை இரத்து செய்வதற்கு பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளைக் குறைக்கவில்லை. அதனால் விலைவாசி உயர்வு என்ற பெரும் சுமை மக்கள் மீது ஏற்றப்படுகிறது.
சில்லரை வணிகத்திலும் இன்றியமையாத துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கி வருகின்றது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு, மக்கள் சொத்துகள் சூறையாடப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான சிறு, குறு, தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், இலட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதற்கு பா.ஜ.க. அரசு பன்னாட்டு நிறுவங்களின் கைப்பாவைகளாகச் செயல்படுகின்றது. ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றது. சம வேலைக்கு - சம ஊதியம் என்பதை நடைமுறைப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தயாராக இல்லை. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குச் சமூக பாதுகாப்பு இல்லை.
எனவே, புதிய தாராளமயக் கொள்கைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனையை இரத்து செய்யக் கோரியும், 2016 செப்டம்பர் 2 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.
இந்தப் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.கழகம் ஆதரவு தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டில்அனைத்து மத்திய-மாநில அரசு ஊழியர்களும், தொழிலாளர்களும், பொதுமக்களும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் எண் 2:
தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர்களை நேரிடையாகத் தேர்வு செய்யும் முறையை மாற்றி, மாநகராட்சி உறுப்பினர்களின் மூலம் தேர்வு செய்கின்ற வகையில் தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது மக்களின் வாக்கு அளிக்கும் உரிமையைப் பறிக்கின்ற ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும். எனவே இந்தத் திருத்தத்தை இரத்து செய்து, மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பது வரவேற்கத்தக்கது. எனினும் சுழற்சி முறையில் பெண்கள் மற்றும் பட்டியல் இனத்தவர் உள்ளாட்சிப் பதவிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் எண் 3:
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் தமிழகம் அண்டை மாநிலங்களால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றது. வட தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர் சாகுபடிக்கும், இலட்சக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் பாலாற்றில் வரும் சொற்ப நீரையும் தடுக்கும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபட்டு வருவது கண்டனத்திற்கு உரியது ஆகும்.
1892 ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசுக்கும், மைசூரு மாகாண அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி காவிரி, பாலாறு உள்ளிட்ட 15 ஆறுகளில் நீரின் போக்கைத் தடுக்கும் வகையில் கட்டுமானங்களை ஏற்படுத்த வேண்டுமெனில் அதற்குத் தமிழ்நாடு அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும். ஆனால் ஆந்திர அரசு, அம்மாநிலத்தில் பாலாறு பாயும் மொத்தம் 33 கிலோ மீட்டர் தூரத்திற்குள் 22 தடுப்பு அணைகளைக் கட்டி தமிழகத்திற்கு வருகின்ற நீரைத் தடுத்து இருக்கின்றது. தற்போது வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் புல்லூரில் கட்டப்பட்டுள்ள தடுப்பு அணையின் உயரத்தை 5 அடியில் இருந்து 15 அடியாக உயர்த்தி உள்ளது. மேலும், பெகிலிரேவு, கங்குந்தி போன்ற இடங்களிலும் தடுப்பு அணையின் உயரத்தை அதிகரிக்கும் வகையில் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. இதே நிலை தொடருமானால் பாலாற்றில் ஒரு சொட்டு நீர் கூடத் தமிழ்நாட்டுக்கு வரும் வாய்ப்பு இல்லை. எனவே ஆந்திர மாநில அரசின் சட்டவிரோத நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த மத்திய -மாநில அரசுகள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண் 4:
காவிரி பாசனப் பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம், விவசாயிகளைப் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து இருக்கின்றார். தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை அழித்து மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தொடர்ந்த வழக்கையடுத்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் தலைமையில் 2015 ஆம் ஆண்டு ஒரு நிபுணர்குழு அமைக்கப்பட்டது. அக்குழு 2015 அக்டோபர் 8 ஆம் தேதி தாக்கல் செய்த அறிக்கையின்படி, மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு முடிவு எடுத்தது.
ஆனால், தற்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மீத்தேன் திட்டத்தைத் திட்டமிட்டவாறு செயல்படுத்துவோம் என்று தெரிவித்து இருப்பது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மீத்தேன் திட்டத்தால் சோழ மண்டலமே முற்றிலும் சீரழியும் நிலைமை உருவாகும் என்று எச்சரிக்கை செய்வதுடன், தமிழக அரசு மீத்தேன் எரிவாயு மற்றும் ஷேல் எரிவாயு திட்டங்களுக்கு அனுமதி வழங்காமல், காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க., வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண் 5:
தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கல்விக் கடன் பெற்று பொறியியல் பட்டப் படிப்பு பயின்ற மதுரையைச் சேர்ந்த மாணவர் லெனின், கல்விக்கடனைச் ஒட்டுமொத்தமாகச் செலுத்துமாறு வங்கியின் சார்பில் முகவர்கள் நெருக்கடி கொடுத்ததால் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு, தமிழ்நாட்டில் கல்விக் கடன் பெற்ற மாணவர்களையும், அவர்தம் பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.
தமிழகத்தில் சுமார் 10 இலட்சம் மாணவர்கள், 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் கல்விக் கடன் பெற்றுள்ளனர். நிலுவையில் உள்ள இத்தொகையில் சுமார் 1875 கோடி ரூபாய் வாராக் கடன்கள் என்று வங்கிகள் மதிப்பீடு செய்துள்ளன. இதில் பாரத Þடேட் வங்கி 872 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை ரிலையன்Þ நிறுவனத்திற்கு அதன் 45 சதவீத விலையில் விற்பனை செய்து இருக்கின்றது. எனவே, அக்கடன்களை வசூலிப்பதற்கு ரிலையன்Þ நிறுவனம் அடியாட்களை ஏவி கல்விக் கடன் பெற்றவர்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றது. இதனால் கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகித் தவிக்கின்றனர். எனவே, தேர்தலின்போது முதல்வர் அளித்த வாக்குறுதியின்படி கல்விக் கடன் பெற்ற அனைத்து மாணவர்களின் கடன்களையும் தமிழக அரசே செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண் 6:
விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி குறித்த தமிழக அரசு அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எனினும் சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடி என்பதை பாரபட்சம் இல்லாமல் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் தமிழக அரசு இரத்து செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண் 7:
தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகின்றது. கூலிப்படைகள் புற்றீசல் போல் பரவி வருகின்றன. படுகொலைகள் அன்றாட நிகழ்வுகள் ஆகி விட்டன. வீடு புகுந்து கொள்ளையடித்தல், பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய சட்டம் ஒழுங்கு சீரழிவுகளைக் கண்டு பொதுமக்கள் அஞ்சி நடுங்குகின்ற நிலைமை ஏற்பட்டு உள்ளது.
கூலிப்படைகளை இரும்புக் கரம்கொண்டு ஒடுக்கவும், கொலை, கொள்ளைகள், பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண் 8:
புதியக் கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அரசு அமைத்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு தனது அறிக்கையை அளித்துள்ளது. அதன் ஒருசில பகுதிகளை மட்டும் வெளியிட்டு, ஜூலை 31 ஆம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்து இருக்கின்றது.
கல்வியாளர்கள், பல்துறை அறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் விரிவான கருத்துக்கேட்பு நடத்தாமலும், மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்காமலும் புதிய கல்விக்கொள்கையை டி.எÞ.ஆர்.சுப்பிரமணியம் குழு வரைந்துள்ளது.
மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் கல்வித்துறையை மத்திய அரசின் வரம்புக்குள் முழுமையாகக் கொண்டு செல்ல புதிய கல்விக் கொள்கை பரிந்துரை செய்கின்றது. பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்து, அரசுக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு நிதி உதவியை நிறுத்தவும், பன்னாட்டுக் கல்வி நிறுவனங்கள் தங்கு தடையின்றி ஊடுருவவும் புதிய கல்விக் கொள்கை வழிவகை செய்கின்றது.
திறன் பயிற்சி என்ற பெயரால் எட்டாம் வகுப்பில் இருந்தே தொழிற்கல்வியைக் கற்றுத் தர வேண்டும் என்று, குலக்கல்வித் திட்டத்திற்கு நவீன முறையில் உயிரூட்டவும், அரசியல் சட்டம் வழங்குகின்ற இட ஒதுக்கீடு, சமூக நீதி உரிமையைப் பறிக்கவும் புதியக் கல்விக் கொள்கை இடம் அளிக்கின்றது. நாட்டின் விடுதலைக்குப் பின்னர் கடந்த 69 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கையை முற்றிலும் மாற்றி அமைத்து, இந்துத்துவா செயல்திட்டத்தைப் புகுத்த முயற்சிக்கும் வகையில், புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
தமிழக அரசு இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதை உறுதியாக தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண் 9:
தமிழ்நாட்டில் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் அரசு கலைக் கல்லூரிகளில்தான் பயின்று வருகின்றனர். ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள மொத்தம் 87 அரசு கலைக் கல்லூரிகளில் 46 கல்லூரிகளில் முதல்வர் பணி இடங்கள் காலியாக உள்ளன; ஆறாயிரம் ஆசிரியர் பணி இடங்களில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இதனால் அரசு கல்லூரிகளின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன. கௌரவ விரிவுரையாளர்களாக 1800 பேரை நியமனம் செய்து, அவர்களுக்கு சொற்ப ஊதியமே அளிக்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையும், உயர்கல்வித்துறையும் சீர்குலைந்து கிடக்கும் நிலையில், மூன்று பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவியும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. உயர் கல்வித்துறைச் செயலாளர் பதவியும் காலியாக இருக்கின்றது.
அதிமுக அரசின் கல்வித்துறை செயல்பாடுகளுக்கு இவை சான்றாக உள்ளன. எனவே, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகின்றது.வேண்டுமென மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண் 10:
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட பொருளாதார கொள்கைகளையே பா.ஜ.க. அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பட்டு வருகின்ற பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டத்தை மோடி அரசு தீவிரமாக்கி வருகிறது. மத்திய அரசு 2015 -16 நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் 41,000 ஆயிரம் கோடி ரூபாயும், பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாக தனியாரிடம் தாரை வார்ப்பதன் மூலம் 28,500 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 69,500 கோடி ரூபாய் நிதி மூலதனத்தைத் திரட்டுவதற்கு அறிவிப்பு வெளியிட்டது. லாபத்தில் இயங்கும் பொதுத்துறைகளையும் தனியார் மயமாக்கும் திட்டத்தின்படி தமிழ்நாட்டில் இயங்கி வரும் சேலம் உருக்கு ஆலையை தனியாருக்குத் தாரை வார்க்கும் நடவடிக்கையில் மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது.
2010 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ரூ.100 கோடி லாபம் ஈட்டிய சேலம் உருக்காலையில் நிரந்தரப் பணியாளர்கள் 1300 பேரும், ஒப்பந்தத் தொழிலாளர்கள்1,200 பேரும் பணியாற்றுகின்றனர். மேலும் மறைமுகமாகசுமார் 5,000 பேருக்கு இந்நிறுவனம் வேலை வாய்ப்பு அளித்து வருகிறது.
எஃகு உற்பத்திக் கூடம் அமைப்பதற்கு ரூபாய் 2000 கோடி முதலீடு செய்யப்பட்டதால் தற்போது சேலம் உருக்காலை நிறுவனம் கடன் சுமையில் இருக்கின்றது. மத்திய அரசு இந்நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, சேலம் உருக்காலையைத் தொடர்ந்து இயங்கிட வழிவகை செய்யாமல், தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சிப்பது கண்டனத்துக்கு உரியது. தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு சேலம் உருக்காலை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்தியஅரசின் முடிவை தடுக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 11:
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவை தொடர்ந்து மாநாடு நடத்தி மிக சிறப்புடன் கொண்டாடி வரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்த ஆண்டு செப்டம்பர் 15 இல் அறிஞர் அண்ணாவின் 108 ஆவது பிறந்த வாள் விழா மாநாட்டை காவிரி நதிக்கரையில், திருச்சி மாநகரில் சீரும் சிறப்புடனும் வெற்றிகரமாக நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது என தலைமை கழகமான தாயகம் தெரிவித்துள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment