ஜெயலலிதா அரசின் 5 ஆண்டுக் காலத்தில் மாநிலத்தின் மொத்தக் கடன் 2 இலட்சத்து 52 ஆயிரத்து 431 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துவிட்டது. தமிழக அரசு கடனுக்காக செலுத்தும் வட்டித் தொகை 24185.86 கோடி ரூபாய் என்ற அளவுக்கு அதிகரித்துவிட்டது. கடனில் மூழ்கி தத்தளிக்கின்ற தமிழக அரசு இதிலிருந்து மீள்வதற்கு நிதிநிலை அறிக்கையில் வழிவகை கூறப்படவில்லை.
வருவாய் பற்றாக்குறை 15854.47 கோடி ரூபாயாகவும், மொத்த நிதி பற்றாக்குறை 40533.84 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ள நிலையில், இலவசத் திட்டங்களுக்கான மானியமாக 68211.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றது. நிதி வருவாய்க்கான ஆதாரம் எங்கே இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. இந்நிலையில், முதல்வர் அறிவித்த தொலைநோக்குத் திட்டம் 2023 என்ற இலக்கை எவ்வாறு அடைய முடியும்?
வேளாண்மைத் துறையில் நீடித்த நிலையான வளர்ச்சி என்பதை கடந்த 5 ஆண்டுகளாகவே இந்த அரசு வெற்று முழக்கமாக சொல்லி வருகின்றது. ஆனால், வேளாண்மைத் துறையின் வளர்சசி விகிதம் தொடர்ந்து சரிவை நோக்கியே போகின்றது. நடப்பு ஆண்டில் 147 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு அடித்தளமாக இருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டு வருகின்றன.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை அரசே செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக அரசு ஏறெடுத்துக்கூடப் பார்க்கத் தயாராக இல்லை. வேளாண் துறைக்காக நிதி ஒதுக்கீடு 1680.73 கோடி ரூபாய் என்பது போதுமானது அல்ல.
நதிநீர் பிரச்சினையில் தமிழகம் அண்டை மாநிலங்களால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றது. முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு பிரச்சினை குறித்தும், காவிரி பாசனப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து மீத்தேன், ஷேல் எரிவாயு திட்டங்களை இரத்து செய்வது குறித்தும், மேற்கு மாவட்டங்களில் கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை மாற்றுவது பற்றியும் மத்திய அரசுக்கு நிதிநிலை அறிக்கையில் அழுத்தம் கொடுக்கப்படவில்லை. அதுபோலவே நாள்தோறும் தாக்குதலுக்கு உள்ளாகும் மீனவர் பிரச்சினை, கச்சத் தீவு பற்றியும் குறிப்பிடப்படவில்லை.
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.24130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தாலும், உயர் கல்விக்காக ஒதுக்கீடு வெறும் ரூ.3679.10 கோடிதான் என்பது குறைவுதான். அதேபோல, சுகாதாரத்துறைக்கு ரூ.9073 கோடி என்பதும் போதுமானது அல்ல.
முதலீட்டுக்கு உகந்த மாநிலமாகத் தமிழகம் இருக்கின்றது என்று நிதி அமைச்சர் கூறி உள்ளார். ஆனால், முதலீடுகள் வெறும் ரூ.23 ஆயிரம் கோடிதான் வந்திருக்கிறது. தமிழகத்தில் 85 இலட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் இன்றித் தவிக்கும் நிலையில், புதிய வேலை வாய்ப்புகளுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை.
மாணவர்களின் கல்விக் கடனை அரசே ஏற்கும் என்று தேர்தல் நேரத்தில் முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது.
அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் சிறு, குறு தொழிலகளின் வளர்ச்சிக்கும், ஊக்குவிப்புக்கும் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
உள்ளாட்சித் துறையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதம் என்கிற அறிவிப்பு வரவேற்கக் கூடியதுதான். ஆனால், சுழற்சி முறையில் தாழ்த்தப்பட்டோர், பெண்கள் இட ஒதுக்கீடு பற்றி அரசின் முடிவு என்ன என்பதை தெரிவிக்கவில்லை. 7 அவது ஊதியக்குழு பரிந்துரைகள் பற்றி ஆராய உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என்று கூறப்பட்டாலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள், குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு என்று அறிவித்திருந்த முதலமைச்சர், அதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. 500 மதுக்கடைகளை மூடியதால், 6636 கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்று கூறுவது சரியல்ல.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், கூலிப்படை கலாச்சாரம் பெருகி வரும் நிலையில், தமிழகத்தில் அமைதி - வளம் - வளர்ச்சிக்காக அதிமுக அரசு பாடுபடுவதாக நிதி அமைச்சர் கூறுவது பற்றி மக்கள் முடிவு செய்வார்கள். அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கை வழக்கமான சடங்கு போல தாக்கல் செய்யப்பட்டுள்ளதே தவிர, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏமாற்றம் அளிப்பதாகவே இருக்கின்றது என வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment