அகிலத்தின் அருட்கொடையாக வந்திட்ட பெருமானார் நபிகள் நாயகம் அவர்கள் ஏக இறைக் கொள்கையை பகிரங்கமாக மக்களிடம் ஓங்கி உரைத்து அழைத்தபோது, அதனை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் சொல்லொணா துன்பங்களுக்கு ஆளானார்கள். மக்காவை விட்டு வெளியேற நேர்ந்தது. எண்ணற்ற அல்லல்களையும், போர்க்களங்களையும் சந்தித்து அண்ணலார் இறுதி வெற்றி பெற்றார்கள்.
இசுலாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகிய ரமலான் நோன்பு நோற்றலை உன்னதமான ரமலான் மாதத்தில் முப்பது நாட்களும் கடைப்பிடித்து, அதன் நிறைவு நாள்தான் விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திருநாளாம் ரமலான் ஈது பெருநாளாகும்.
அண்ணலார் நபிகள் நாயகம் கடைப்பிடித்துக் காட்டிய வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றும் இசுலாமிய பெருமக்கள் விருந்தோம்பும் உயர்ந்த பண்புடன், பிறர் பசி போக்கும் மனிதநேயத்துடன் அனைவரிடத்திலும் அன்பு காட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும் அடித்தளம்தான் மதச்சார்பின்மையாகும். அந்த அடித்தளத்தை தகர்க்கின்ற நோக்கத்தில் பொது சிவில் சட்டம் என்ற விபரீத முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அரசு, அந்த முயற்சியை முற்றாகக் கைவிட வேண்டும்.
சமய நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அனைவரும் உறுதி கொள்வோம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இசுலாமியப் பெருமக்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என வைகோ ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment