தமிழீழ விடுதலைக்காக
தினமும் போராடிக்கொண்டிருக்கிற, தமிழீழ அழிப்பை திரையில் முதலில் வெளியிட்ட இனமான இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் எழுதிய தமிழீழம் பற்றிய நூலான விடுதலையின் முகவரி, நெருப்பு பூச்சாண்டி நூல் வெளியீட்டு விழா இன்று 09-07-2016 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடந்தது.
விழாவின் தொடக்கத்தில் சகோதரி இசைப்பிரியா மற்றும் தமிழீழ தேசிய தலைவரின் புதல்வன் பாலச்சந்திரன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திரு.வந்தியத்தேவன் அவர்கள் நிகழ்ச்சி வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து நிகழ்வுகள் தொடர்ந்தன.
ஓவியர் வீர சந்தானம் அவர்கள் உரை:-
டெல்லிக்குக் காவடி தூக்குவதை இங்குள்ளவர்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள். தமிழினம் தலை நிமிரும். தமிழீழம் மலரும். வன்னிக் காட்டில் குடியேரும். அங்கே தலைவர் பிரபாகரன் தோன்றுவார்.
தேர்தலுக்கு அப்பாற்பட்டு, வெற்றியைப் பற்றிக் கவலைப்படாமல் ஈழப் பிரச்சினையைப் பேசிய ஒரே தலைவர் அண்ணன் வைகோ. நான் செத்துப் பிழைத்தவன்,என்னைக் காப்பாற்றிய இரண்டு மூன்று பேர் களில் வைகோ அவர்கள் முதல்வர்.
சிங்களவன் ஒற்றுமை யாக இருக்கிறான். தமிழன் தான் தன் முனைப்பு காரணமாக பிரிந்து கிடக்கிறான் என்று உணர்ச்சியுரையாற்றினார்.
பூங்குழலி அவர்களின் உரை:-
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் தூக்கி வளர்க்கப்பட்ட சகோதரி பூங்குழலி அவர்களின் உரையில், தமிழர்கள் ஒன்று சேரக்கூட வேண்டாம். ஒருங்கிணையக்கூடவா முடியாது? என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இனப்படுகொலையை போர்க்குற்றம் என்று மட்டுமே சொல்லி சிலர் ஏமாற்றப்பார்கிறார்கள். உலக நாடுகள் அனைத்திலும் உள்ள தமிழர் அமைப்புகள் இனப்படுகொலைக் கொடுமையை உரக்கப் பேச வேண்டும் என்றார்.
மருத்துவர் தாயப்பன் உரை:-
தலைவர் பிரபாகரன் அவர்களின் கரங்களில் தவழ்ந்த மருத்துவர் தாயப்பன் அவர்களின் உரையாற்றும்போது, செப்டம்பர் 11 தாக்குதலில் உயிரிழந்த 3000 சகோதரர்களுக்காக வேறொரு நாட்டின்மீது படையெடுத்து தன் வசமாக்கியது அமெரிக்கா. நீதியை நிலைநாட்டிவிட்டோம் என அமெரிக்கா அறிவித்தது. ஆனால் இலட்சக்கணக்கான உயிர்களைப் பறி கொடுத்த எம் இனத்திற்கான நீதியை யார் பெற்றுத் தருவார்? என கேள்வி எழுப்பினார்.
ராஜபக்சே, சிறிசேனா, ரணில், சந்திரிகா இவர்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது.
ஜனநாயகத்தின் தூண்கள் என்று சொல்லப்படும், அதிகார வர்க்கம், நீதித்துறை, ஊடகம் அனைத்திலும் பார்ப்பனீயத்தின் ஆதிக்கம். விவசாயிகளுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதவர்கள் யோகாவுக்காக நிதி ஒதுக்குகிறார்கள் என வேதனை தெரிவித்தார்.
ஈழம் அமைவதற்கு இந்தியர்கள் யாரும் எதிராக இல்லை. இந்தியாவை ஆளும் ஆதிக்க வர்க்கம்தான் ஈழம் அமைவதற்கு எதிராக உள்ளது. தமிழன் சாதியால் பிரிந்து கிடக்கிறான். ஈழத்திற்காக அழும் அனைத்துக் கண்களும் உடுமலை சங்கருக்காகவும் அழ வேண்டும். இசைப்பிரியாவுக்கு கண்ணீர் சிந்தும் அனைவரும் இளவரசனுக்காகவும் கண்ணீர் சிந்த வேண்டும்.
எத்தனை பேர் சேர்ந்தாலும், இன்னும் 500 வருடங்கள் ஆனாலும் எங்கள் ஈரோட்டுக் கிழவனின் தாடியிலிருக்கும் ஒரு முடியைக் கூட யாராலும் நீக்க முடியாது.
ஜெயவர்த்தனா மட்டும் உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் எம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி இருக்க மாட்டார்கள் என்று சொன்னவர் தலைவர் பிரபாகரன் என்ற உண்மையை எடுத்து வைத்தார்.
இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் உரை:-
ஈழத்தில் எம் மக்கள் கொல்லப்பட்டபோது
முதுகில் அறுவை சிகிச்சை என்று சொல்லி இராமச்சந்திரா மருத்துவமனையில் ஓடிப்போய் ஒளிந்துகொண்டார் கருணாநிதி. முதுகெலும்பே
இல்லாத ஒருவருக்கு முதுகில் எதற்கு அறுவை சிகிச்சை? என கருணாநிதி தமிழீழ மக்களுக்கு செய்த துரோகத்தை விளக்கினார்.
இன்றைக்கு சுவாதி வீட்டில் சென்று பேட்டி கொடுக்கும் ஸ்டாலின், அன்று ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்படும்போது தீக்குளித்து
மாண்ட தம்பி முத்துக்குமார் வீட்டுக்கு வராதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.
பௌத்தர்களில் இருக்கும் மிருகங்களைத்தான் நான் பௌத்தப் பொறுக்கிகள் என்று குறிப்பிடுகிறேன். போர் நிறுத்தத்திற்கு ராஜபக்சேவே கொடுத்த வாய்ப்பை நிராகரித்து ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்படஜ் காரணமானவர் ஸ்டாலின் எனவும் குற்றம்சாட்டினார்.
போரை இந்தியா மறைமுகமாக நடத்தவில்லை. நேரடியாக நடத்தியது என்று குற்றம் சாட்டியவர் யஷ்வந்த் சின்ஹா. கொன்ற இனமும் கொல்லப்பட்ட இனமும் எக்காலத்திலும் ஒன்றாக வாழ முடியாது என் உரக்க சொன்னார்.
எட்டு கோடி மக்களும் ஒருங்கிணைந்து போராடினால் தமிழ் ஈழம் மலரும். மனசாட்சியுள்ள பாஜக தலைவர்கள் அனைவரோடும் தொடர்புடைய ஒரே தலைவர் அன்ணன் வைகோ என்று பேசினார்.
தமிழீழ உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் உரை:-
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை முதன்முதலில் திரையில் கொண்டுவந்தவர் புகழேந்தி தங்கராஜ். தங்கராஜின் படங்களைத் தணிக்கை செய்தீர்களே, இந்த நூல்களை எப்படி தணிக்கை செய்வீர்கள்? என கேள்வி எழுப்பினார். ஈழத்தில் பிறந்த பாலு மகேந்திரா கூட ஈழம் பற்றி படம் எடுக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் பிறந்த தங்கராஜ் எடுத்தார்.
உலகில் வாழும் தமிழர்கள் மனங்களில் எல்லாம் வாழும் தலைவர் வைகோ அவர்கள். முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிந்தைய நிலையை அறிந்து கொள்ள இந்த இரண்டு நூல்களும் போதும். அனைத்து முக்கிய நிகழ்வுகளும் இந்த நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புகழேந்தி அவர்களுக்குக் கோபம் வருவது இயற்கை. கோபம் இல்லாமல் புகழேந்தி இல்லை. கொடுமைகளுக்கு
எதிரான துடிப்பு அவரது எழுத்துக்களில் தெரிகிறது. ஈழத்திற்கு வந்து பதவி ஏற்றபின் விக்னேஸ்வரன் அவர்களது போக்கில் பெருத்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழீழத்தைக் கைவிட்டுவிட்டோம்
என்று கூற சம்பந்தனுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. நாங்கள் மாகாணங்கள் அல்ல. தமிழீழம் எங்கள் தாயகம்.
தமிழீழத்தைப்
பார்த்து மகிழ்வேன் என்றான் திலீபன். 68000 புலிகள் தாயகத்திற்காக உயிர் தந்து மாவீரர்கள் ஆனார்கள். தமிழ் இனத்தின் ஒரே தலைவர் வைகோ அவர்கள் பிரஸ்ஸல்சில்
பொது வாக்கெடுப்பு
ஒன்றே தீர்வு என்று முன் மொழிந்தாரே அதுதான் தமிழீழம். எட்டு கோடி மக்களின் பிரதிநிதிகள்
தமிழக சட்ட மன்றத்தில் ஜெயலலிதா தீர்மானம் இயற்றினாரே அதுதான் தமிழீழம். அந்தத் தமிழ் ஈழத்தைக் கை விட்டுவிட்டோம் என்று சொல்ல சம்பந்தன் யார்?
தந்தை செல்வாவின் அறப் போராட்டத்தில்
உயிரிழந்தவர்கள் மூன்று பேர் மட்டுமே. ஆனால் மாவீரன் பிரபாகரனின் போராட்டக் களத்தில் உயிரிழந்தவர்கள் 68000 பேர். ஈழத்திலும் தேர்தல் அரசியலின் சொகுசு வாழ்க்கைக்குப் பலர் பழகிவிட்டார்கள்.
3500 ஆண்டுகளுக்கு முன்பே வட இந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை பாவாணர் மொழி ஆய்வு செய்து நிறுவி இருக்கிறார். முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், பூலான் தேவி போன்றவர்கள்
ஆரியர்கள் அல்ல. உலகின் மூத்த குடியான தமிழினம் 3% பார்ப்பனர்களை எதிர்க்க இயலாதா? இந்து பத்திரிகை தினத்தந்தியை ஆதிக்கம் செய்கிறது என்பது வெட்கமாக இல்லையா? எனவும் கேள்வி எழுப்பினார்.
யஷ்வந்த் சின்ஹாவை தமிழ் ஈழமே சரி என்று சொல்ல வைத்தவர் தலைவர் வைகோ. ராம்விலாஸ் பஸ்வான் பொது வாக்கெடுப்பு ஒன்றே தீர்வு என்று சொன்னார். சொல்ல வைத்தவர் தலைவர் வைகோ. ராம்ஜெத்மலானியை தமிழ் ஈழத்திற்காக
குரல் கொடுக்க வைத்தவர் தலைவர் வைகோ.
சிங்களவன் நாங்களும் ஆரியகள், நீங்களும் ஆரியர்கள் என்று வடக்கே உள்ளவர்களை ஏமாற்றுகிறான். சிங்களவன் ஆரியன் அல்ல. திராவிடன். தமிழும், பாலியும், சமஸ்கிருதமும்
கலந்து உருவானது சிங்களம். நமது பயணம் வடக்கு நோக்கி இருக்க வேண்டும். சிங்களவனின் பொய் முகத்தை வடக்கே உள்ள மக்களிடம் பதிவு செய்ய வேண்டும். நமது அணுகுமுறையில்
மாற்றம் தேவை எனவும் தெளிவுபடுத்தினார்.
நீங்கள்தான்
போரை நடத்தினீர்கள்,
ஆயுதம் கொடுத்தீர்கள்,
எம் இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது பக்கத்தில் நின்றீர்கள்.
ஆனாலும் நீங்கள்தான்
(இந்தியா) எங்களுக்குத்
துணை நிற்க வேண்டும்.
ஒரு திரௌபதி ஆடை களையப்பட்டதற்கு
ஒரு போரை நடத்தியது பாரதம். பத்தாயிரம் பெண்கள் ஆடை களைந்து வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்கு
போர் இல்லையா? அது மகாபாரதம். இது மகா பாதகம்.
இலங்கையின் கடற்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு ஈழத்தில் உள்ளது. ஈழத்தில் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்கள் தொடருமானால் இந்தியாவுக்கு
பாதுகாப்பு இருக்காது. நாங்கள் இருக்கும் வரை தான் உங்களுக்குப் பாதுகாப்பு. சிங்கள இனம் என்றைக்கும்
இந்தியாவுக்கு எதிரிதான். புலிகள் இருந்தவரை தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழீழ மக்கள் என்றைக்கும் உங்கள் பக்கம். எங்களைப் பயன்படுத்திக்
கொள்ளுங்கள். புகழேந்தி தங்கராஜ் அவர்களின் நூல் எங்களைப் பேச வைக்கிறது. எங்களுக்கு அரணாக இருக்கிறது என்று உணர்வுபூர்வமாக பேசினார்.
தமிழின முதல்வர் வைகோ உரை:-
"பிரபாகரன் என்பது ஒரு மனிதனின் பெயரல்ல. அது ஒரு இனத்தின் அடையாளம்" இலட்சியவாதிகளுக்கும், போராளிகளுக்கும்
சலிப்பும் இல்லை, தோல்வியும் இல்லை என்ற வரிகளோடு உரையை தொடங்கிய வைகோ அவர்கள், இந்த இரண்டு நூல்களிலும் இழையோடிக் கிடப்பது ஒரு இனத்தின் விம்மல், போராட்டம், மகத்தான தியாகம். தனது எழுத்துக்கள்
அனைத்திலும் ஈழ வேட்கை ஒன்றையே குறிக்கோளாகக்
கொண்டவர் புகழேந்தி தங்கராஜ். எழுதுவது மட்டுமல்ல, அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்பவர்
புகழேந்தி தங்கராஜ் என புகழாரம் சூட்டினார் வைகோ.
பெரியார் அண்ணா காமராசர் காலத்தில் எல்லாம் ஏற்படாத ஒரு இழிவு நமது காலத்தில் இந்த இனத்திற்கு நேர்ந்துள்ளது. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை
என ஜெர்மனியின்
பிரமன் தீர்ப்பாயம்
ஏற்றுக் கொண்டுள்ளது. செம்மணிப் புதை குழியில் இருந்த 400 எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டதற்கு அடியேன் காரணம் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். நாங்கள் தமிழர்கள் சர்வதேச அநாதைகள், உங்கள் கதவுகளைத் தட்ட வந்திருக்கிறேன் என்று நான் வைத்த கோரிக்கையை ஏற்றுத்தான்
செம்மணி புதைகுழியில்
புதைக்கப்பட்டவர்கள் பற்றி உலகம் அறியச் செய்தது.
ஈழத்தில் இனப்படுகொலை, இதயத்தில் இரத்தம் என்ற குறுந்தட்டை ஆங்கிலம், இந்தி, மராத்தியில் வெளியிட்டோம். ஜார்ஜ் பெர்னான்டஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றபோது
அங்கே அனைத்துத் தலைவர்களும் என்னைப் புலிகளின் ஆதரவாளர் என்று குறிப்பிட்டே
வரவேற்றார்கள்.
2004க்குப் பிறகு நடந்த கொடுமைகள் அனைத்தையும்
ஆவணப்படுத்தி இருக்கிறார். உச்சிதனை முகர்ந்தால் இந்தச் சந்தையில் எடுபடவில்லை. தமிழக மக்களைப் பார்த்து நான் வேதனைப்படுகிறேன். பதுங்கு குழிகளில் தமிழ்குழந்தைகள் ஒரு வேளை கஞ்சிக்காகப் பட்ட வேதனையையும்,
கொல்லப்பட்டதையும் கண்ணீர் மல்க விவரிக்கிறார்.
கெல்லம் மெக்ரேவின் காணொளியைப் பார்த்து இங்கிலாந்து பாராளுமன்றமே கண்ணீர் வடித்தது. அரசியலுக்கு அப்பாற்பட்டவர்
புகழேந்தி தங்கராஜ். அவருக்கு யார்மீதும் விருப்பு வெறுப்பு கிடையாது என்றார் வைகோ.
தொடர்ந்து பேசிய வைகோ அவர்கள், நான் எந்த நாட்டுக்கும்
போக முடியாது. அனந்தி ஒரு வீரப்பெண்மணி.
ஜெனிவாவில் முழங்கி இருக்கிறார். முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர் தீக்குளித்து மாண்டார்கள்.
ஏழரை கோடி பேரும் திரள வேண்டாம், பத்து இலட்சம் பேர் திரண்டிருந்தால் கூட போதும். ஆனாலும் நான் நம்பிக்கை இழக்கவில்லை.
இந்தியா பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் மறுக்கவில்லை. நான் இந்தியர்களைக்
குற்றம் சொல்லவில்லை.
ஆட்சியாளர்களைச் சொல்கிறேன். முந்தைய அரசும் கூட்டுக் குற்றவாளி, மோடி அரசும் ஜெனிவாவில் அதே பாதையில் செல்கிறது.
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழன் ஒற்றுமையாக இருக்கமாட்டான்.
அது இரத்தத்தோடு
கலந்தது. ஊடகங்களின் பார்வையில் மறைக்கப்பட்ட ஈழச் செய்திகள் அனைத்தும் தங்கராஜின் பேனா முனையில் இருக்கிறது.
எங்கள் சாம்ராஜ்யத்தில் இருந்து ஆதவன் மறைவதே இல்லை என்ற ஆணவத்தோடு உலகத்தைக் கட்டி ஆண்ட அதே கிரேட் பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு
நடந்தது. நார்தன் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, லண்டன் ஆகியவை தனி நாடுகளாகப் போக போகிறது.
உலகெங்கிலும்
சுயநிர்ணய உரிமையை மறுக்க முடியாது. இந்தியாவிலேயே
பொதுவாக்கெடுப்பு நடந்துள்ளது.
காஷ்மீரில் இந்திய அரசு ஏமாற்றியது. ஈழ வரலாற்றில் பொதுவாக்கெடுப்பை முதலில் முன்மொழிந்தவன் என்று ஒரு வரி எனக்கும் கிடைக்கும். என் வாழ்நாளில் நான் சாதித்தது ஒன்று உண்டென்றால்
அது இதுதான் என உணர்ச்சியுரையாற்றினார் வைகோ அவர்கள்.
விடுதலையின்
முகவரி, நெருப்பு பூச்சாண்டி நூல்களைவைகோ அவர்கள் வெளியிட்டார்.
செய்தி: நல்லு லிங்கம்
No comments:
Post a Comment