சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக அரசிடம் பேசி, விவசாயிகளைப் பாதிக்காத வகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.
காவிரி பாசனப் பகுதியைப் பாலைவனம் ஆக்கி, சுமார் 50 இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்குவது மட்டுமின்றி, வேளாண்மைத் தொழிலையே அழிக்கும் திட்டம்தான் மீத்தேன் எரிவாயு திட்டம் ஆகும். கிலோ மீட்டர் கணக்கில் துளையிட்டு, வேதி கரைசல்களை உயர் அழுத்தத்தில் பூமிக்குக் கீழ் செலுத்தி பாறைப் படிமங்களை உடைக்க வேண்டும். ‘நீரியல் விரிசல் முறை’ என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்ற வேண்டும். நிலத்தடி நீரை வெளியேற்றி, மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் அந்தப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர்வளம் குறைந்துவிடும். மேலும் பூமியின் கீழே இராசயனக் கழிவுகள் செலுத்தப்படுவதால், பூமியின் மேற்புறம் நஞ்சாக மாறி விடும். இதனால் விவசாய சாகுபடி நிலம் முற்றாக அழிந்து, விவசாயிகள் தங்கள் தொழிலையே கைவிட்டுவிட்டு இடம் பெயரும் பெரும் ஆபத்து சூழும்.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்ட மக்களின் வாழ்வைப் பாதிக்கும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில் நான் தொடுத்த வழக்கைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் தலைமையில் 2015 ஆம் ஆண்டு ஒரு நிபுணர்குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு 2015 அக்டோபர் 8 ஆம் தேதி தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின்படி, மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி கொடுப்பது இல்லை என்று தமிழக அரசு முடிவு எடுத்தது.
இந்நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு, மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை செயல்படுத்த முனைவது தமிழக மக்கள் மீது காட்டும் அக்கறையை பிரதிபலிக்கிறது. மத்திய அரசுக்கு தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்து, மீத்தேன் எரிவாயு திட்டத்தையே முற்றாக இரத்து செய்து, காவிரி பாசனப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment