தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும என்று கூறிய முதல்வர், முதல் கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். ஆனால், பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை அகற்றக் கோரி பல இடங்களில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டால் காவல்துறையினர் அடக்குமுறையில் இறங்குகின்றனர்.
தமிழக அரசின் இந்த இரட்டை நிலைப்பாடு காரணமாக நேற்று மணப்பாறையில் மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் கடுமையாக நடந்துகொண்டுள்ளனர். மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜூலை 20 ஆம் தேதி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக்குழு ஒறுப்பினர் தோழர் த.இந்திரஜித் அவர்கள் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களும், பொதுமக்களும் மதுக்கடையை அகற்றக் கோரி அமைதியான முறையில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றும்போது புத்தாநத்தம் காவல்துறை துணை ஆய்வாளர் சந்தான லூயிஸ், வையம்பட்டி ஒன்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் செயலாளர் தோழர் ஏ.டி.சண்முகானந்தம் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதுடன், வாய் கூசும் அநாகரிக வார்த்தைகளால் பேசி உள்ளார்.
பொதுமக்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் முன்னிலையில் காவல்துறை துணை ஆய்வாளர் முறைகேடாக நடந்துகொண்டு, கேவலமாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கக்கோரி போராட்டத்தில் பங்கேற்றோர் அனைவரும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைக்கப்பட்டு, நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்த போராட்டக்காரர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல், அலட்சியப்படுத்தி, ஒரு நாள் முழுவதும் அவர்களை பட்டினியால் துன்புறச் செய்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.
மதுக்கடையை அகற்றக் கோரி போராடிய இந்திய கம்யூனிஸ் கட்சி தோழர்கள் மற்றும் பொதுமக்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட காவல்துறை துணை ஆய்வாளர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக
No comments:
Post a Comment