Wednesday, July 27, 2016

பழங்குடி மக்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட வனச்சரக காவலர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்க! வைகோ அறிக்கை!

தேனி -மாவட்டம் கடமலைக்குண்டு அருகே பளியர் குடியிருப்பில் முப்பது குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலையில் விளையும் பொருட்களை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர்.


கடந்த ஜூலை 16 ஆம் தேதி, கம்பம் கிழக்கு வனச்சரகம் பெரிய சுருளி மலைப்பகுதியில் தேன் மற்றும் வேர்க்கிழங்குகளைச் சேகரித்துகொண்டு பழங்குடிகளான ஐந்து ஆண்களும், நான்கு பெண்களும் திரும்பி வந்துகொண்டு இருந்தனர். அப்போது சுருளிப்பட்டிக்கு அருகே வனச்சரகக் காவலர்கள் ஐந்து பேர் அவர்களை மறித்து, அவர்களிடம் இருந்த தேன், கடுக்காய், நன்னாரி வேர் மற்றும் இதர மலைப் பொருட்களைப் பறித்துக் கொண்டனர். சோதனை செய்வதாகக் கூறி பெண்கள் கட்டியிருந்த சேலையை அவிழ்க்கச் செய்தனர். மேலாடையுடன் நின்றிருந்த அவர்களிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர். ஆண்களையும் சட்டை, வேட்டிகளை அவிழ்த்து உள்ளாடையுடன் நிற்க வைத்துக் கேவலப்படுத்தியுள்ளனர். நியாயம் கேட்ட பழங்குடியின ஆண்களை அடித்துத் துன்புறுத்தி இருக்கின்றனர்.

வனச்சரகக் காலவர்களின் அத்துமீறலைக் கண்டித்து பழங்குடியின ஆண்கள் வருசநாடு வனச்சரக அலுவலகத்தில் நியாயம் கேட்கப் போனபோது, அவர்களைத் தகாத வார்த்தைகளால் பேசி இழிவுபடுத்தியது மட்டுமின்றி, வனச்சரக அலுவலகத்தைத் தாக்க வந்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, வருசநாடு காவல்நிலையத்தில் அடைத்து வைத்து அடித்து உதைத்துள்ளனர்.

வனச்சட்டத்தின்படி பழங்குடி மக்களுக்கு வனப்பகுதிகளில் பொருட்கள் சேகரிக்க உரிமை உண்டு என்பதை அறிந்திருந்தும், வனச்சரகக் காவலர்கள் சோதனை என்கிற பெயரில், பழங்குடிப் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததும், ஆண்களை அடித்து உதைத்து இரத்தக் காயம் ஏற்படுத்தியதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.

அப்பாவி ஏழை, எளிய பழங்குடியின மக்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட வனச்சரகக் காவலர்களை தமிழக அரசு உடனடியாக பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment