ஜெர்மனிய பிரதமரால், அம்னெஸ்டி இன்டர்நேசனல் வழங்கிய மனித உரிமைகள் விருதினை பெற்றார் வழக்கறிஞரும் மனித உரிமைகள் ஆர்வலருமான ஹென்றி திபேன் அவர்கள். இதனால் திபேன் அவர்களு க்கு பாராட்டு விழா நேற்று 13-07-2016 மாலை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.
இந்த மனித உரிமை ஆர்வலர் பாராட்டு விழாவிற்கு தலைவர் வைகோ, முன்னாள் நீதியரசர் சந்துரு அவர்கள் மற்றும் மற்ற தலைவர்கள், நிகழ்வின் கதாநாயகன் திரு.ஹென்றி திபேன் ஆகியோர் வருகை தந்தார்கள். அனைவரையும் வைகோ வரவேற்றார்.
பாராட்டு விழாவிற்கு வருகை தந்த திரு.ஹென்றி திபேன் அவர்களை தலைவர் வைகோ வரவேற்ற போது உடன் வந்திருந்த அவர் துணைவியார், அவருக்கு (திபேன்) இன்று நல்ல காய்ச்சல் என்றார். தலைவர் அப்படி யா என திபேனிடத்தில் வினவ, அவரோ அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. நலமாக இருக்கிறேன். உங்கள் விழாவிற்கு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் எனச் சொல்லி சிரித்தார்.
நிகழ்விற்கு தலைமைத் தாங்க தலைவர் வைகோ அவர்கள் முன்மொழிய படுகிறார். தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்டுள்ள சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக உரையாற்ற அழைக்கப்படுகிறார்கள்.
வழக்கறிஞர் அஜிதா உரை:-
வழக்கறிஞர் அஜிதா அவர்கள் பேசும்போது, மனித உரிமை ஆர்வலர்களும் அமைப்புகளும் செய்ய வேண்டியதை ஒரு அரசியல் கட்சியின் தலைவரான அய்யா வைகோ அவர்கள் முன்னெடுத்திருக்கிறார்.
மனித உரிமைக்காகப் போராடுபவர்கள் மட்டுமே அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் பொறுப்பானவர்கள் அல்ல. அனைவரும் இணைந்து பணியாற்றினால்தான் மனித உரிமை மீறல்களைத் தடுக்கமுடியும். ஒரு ஹென்றி திபேன் பத்து பேராக, நூறு பேராக, ஆயிரம் பேராக உயர்ந்தால்தான் மனித உரிமை மீறல்களைத் தடுக்க முடியும் என்றார்.
வழக்கறிஞர் சுதா இராமலிங்கம்:-
வழக்கறிஞர் சுதா இராமலிங்கம் அவர்கள் பேசும்போது, நான் இறுதியாகப் பேசலாம், அனைவரும் கூறியதை வழி மொழிகிறேன் என்று சொல்லி இறங்கிவிடலாம் என நினைத்தேன். ஆனால் அய்யா வைகோ அவர்கள், பெண்களுக்கு முன்னுரிமை தரும்வகையில் முதலில் பெண்களைப் பேச வைத்துவிட்டார் என்றார்.
நீதியரசர் சந்துரு அவர்களை மேடைக்கு அழைக்கும்போது என்னை நீதியரசர் என்று அழைக்க வேண்டாம், தோழர் என்றே அழையுங்கள் என்றார். நான் ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் தோழமையுள்ள நீதியரசர் சந்துரு அவர்களைப் பேச அழைக்கிறேன் என்று சந்துரு அவர்களை பேச அழைத்தார் வைகோ.
நீதியரசர் சந்துரு அவர்கள் உரை:-
அப்போது பேசிய நீதியரசர் சந்துரு அவர்கள், ஹென்றி திபேன் அவர்களின் நடவடிக்கைகளைத் தடுக்க நினைத்து அவரது கணக்குகளை முடக்கியுள்ள மோடி அரசின் சதிகளை முறியடித்து செயல்பட்டு வருகிறார்.
ஏன் மனித உரிமை ஆர்வலர்களைப் பாராட்ட வேண்டும்? இந்தியாவின் ஜனநாயகம் அவசர நிலையின் போது நசுக்கப்பட்டபோது மனித உரிமை அமைப்புகளின் தேவை அதிகமானது. மனித உரிமைகளைக் காப்பதில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி கண்ணாமூச்சி காட்டுவதுதான் வழக்கம். மனித உரிமைப் போராளிகளை முடக்கவே இன்றைய காவல்துறை முயற்சி செய்கிறது.
மனித உரிமை வழக்குகளில் கட்டணம் வாங்காமல்தான் வாதாடுகிறோம். மனித உரிமைப் போராளிகள் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருப்பதுபோல சித்தரிக்க அரசும் காவல்துறையும் முயற்சி செய்கின்றன. ஹென்றியின் பணிகள் உள்நாட்டில் பாராட்டப்படாவிட்டாலும் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அவரின் பெருமை தெரிந்து பாராட்டுகிறார்கள்.
பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தை முடக்க நினைத்தார்கள். இன்று புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்பனையான புத்தகங்கள், பெரியார், அண்ணா, அம்பேத்கரின் புத்தகங்கள்தான். மனித உரிமை மீறல்களைத் தடுக்க வேண்டுமானால் நூற்றுக்கணக்கான ஹென்றிகள் தேவை. அவர்களை ஆதரிக்கும் வைகோகளும் தேவை என்றார்.
நீதியரசர் சுரேஷ் உரை:-
நீதியரசர் சுரேஷ் அவர்கள் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையாற்றும்போது, நீதிபதிகளை லார்ட்ஷிப் என்று அழைக்க வேண்டாம், ஹானர் போதும். ஓய்வு பெற்றவர்களை அதுவும் சொல்லி அழைக்கத் தேவையில்லை. திரு போதும்.
நான் ஓய்வு பெற்று 25 ஆண்டுகள் ஓடிவிட்டன. வைகோ அவர்களின் அன்பான அழைப்பின் பேரில் இங்கே வந்துள்ளேன். தமிழ்நாட்டில் நானறிந்த வரையில் சிறந்த மனித உரிமைப் போராளிகள் இருவர். ஒருவர் தற்போது உயிருடன் இல்லை. மற்றவர் திரு.ஹென்றி.
தமிழ்நாட்டில் பரமக்குடி துப்பாக்கிச் சூடு, சங்கரலிங்கபுரத்தில் 159 தலித்துகள் மீதான கொடூரத் தாக்குதல் போன்ற கொடூரமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன. மனித உரிமை மீறல்கள் எங்கு நடைபெற்றாலும் அரசாங்கங்கள்தான் அதற்கு முழுப் பொறுப்பாகும். ஆசிய மனுத உரிமை அமைப்பின் இதழின் பெயரே Article 2, காரணம் Article 2 மனித உரிமைகளை நிலை நாட்டுவதை உணர்த்துகிறது.
பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள், ஆனால் அப்பாவிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். அப்பாவிகளைக் கைது செய்து தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து அடைக்கிறார்கள், ஐந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் சாட்சிகள் இல்லை என்று சொல்லி விடுவிக்கப் படுகிறார்கள்.
குஜராத் அக்சர்தாம் வழக்கிலும் சுமார் இருபது பேர் சாட்சிகள் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப் படுவதில்லை. சத்தீஸ்கரில் ஒரு பெண்மணி ஆறு ஆண்டுகள் பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வாறு அனைத்து மாநிலங்களிலும் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. இந்தியாவின் அனைத்து காவல் நிலையங்களிலும் கொடூரமான சித்தரவதைகள் நடைபெறுகின்றன. இதில் ஒரு காவல்நிலையம் கூட விதிவிலக்கல்ல.
ஒப்புதல் வாக்குமூலம் வாங்க துன்புறுத்தப்படுகிறார்கள். அடி, உதை மட்டுமல்லாது சொல்ல முடியாத கொடுமைகள் நிகழ்கின்றன. வெகுசில காவல்துறை அதிகாரிகளே சட்டத்திற்குட்பட்டு முறையான விசாரணையை மேற்கொள்கின்றனர்.
மணிப்பூரில் ஒரு மாஜிஸ்ட்ரேட்டையே தீவிரவாதியை மறைத்து வைத்திருப்பதாகப் பிடித்துச் சென்று மூன்று நாட்கள் கொடுமைப் படுத்தினர். பின்னர் அவர் உயர்நீதி மன்றம் சென்று முறையிட்டபோது நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த ஆண்டில் மட்டும் 1200க்கும் மேற்பட்ட போலி என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளன. அப்சல் குரு பற்றிப் பேசினாலே நீங்கள் குற்றவாளி ஆக்கப்படுவீர்கள். இப்படிப்பட்ட நிலைதான் இந்தியாவில் நிலவுகிறது. கண்ணையா குமார் விவகாரத்தில் அதனைப் பார்த்தோம்.
நான் பதவியில் இருக்கும்போதே மனித உரிமை மீறல்களை நான் கண்டித்துள்ளேன். நீதிபதிகளே, உங்கள் மனசாட்சிக்கு விரோதமான தீர்ப்புகளை எழுதாதீர்கள். சமூகப் பொருளாதாரத் தேவைகளை அரசாங்கம் சமமாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை article 2 வலியுறுத்துகிறது.
மேதா பட்கர் சமூகப் பணிகளுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்துள்ளார். மும்பையில் 300 சதுர அடி வீடு 65 இலட்சத்திற்கு விற்கிறது. அரசு எப்படி இதை அனுமதிக்கிறது?
சமூகப் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்ற ஐரோப்பிய நாடுகள் GDP ல் 30%, 50% செலவழிக்கின்றன. ஆனால் இந்தியாவில் வெறும் 1.7% மட்டுமே மோடி அரசு ஒதுக்கியுள்ளது.
மனித உரிமைகளுக்காகப் போராடிவரும் ஹென்றி அவர்களை வாழ்த்துகிறேன். இந்த விழாவிற்கு என்னை அழைத்த வைகோ அவர்களுக்கு நன்றி. ஓய்வு பெற்ற நீதிபதிகள், சந்துருவைப் போல மக்களுக்காகப் பாடுபடவேண்டும். மும்பையில் ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி கூட மனித உரிமைக்காகப் போராட வரவில்லை. மாறாக பஞ்சாயத்துகளில் ஈடுபடுகிறார்கள். திரு. சந்துரு அவர்களின் பணியை மனதாரப் பாராட்டுகிறேன். அனைவருக்கும் நன்றி என்றார்.
ஹென்றி திபேன் அவர்கள் உரை:-
மனித உரிமைகள் விருது பெற்ற ஹென்றி அவர்கள் உரையாற்றியபோது, விருது பெற்றபோது இருந்த பதட்டத்தைவிட வைகோ அவர்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த மேடையில் நிற்கும்போது ஏற்படுகிறது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு வைகோ அவர்கள் ஒரு சிறந்த மனித உரிமைப் போராளி. நான் பெற்ற விருதை நீதியரசர் சுரேஷ், சந்துரு, வைகோ போன்றவர்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. தமிழ்நாட்டில் நீதிபதிகளைப் பற்றிப் பேசாமல் இருப்பது நல்லது. இந்தியா முழுதும் அப்படித்தான். விதிவிலக்குகளாக திரு. சந்துரு போன்றவர்கள் இருக்கிறார்கள்.
இலவச சட்ட உதவி மையத்தை திரு சந்துரு அவர்களும் திரு இராஜா அவர்களும் சிறப்பாக நடத்தினார்கள். நீதிபதிகள் யாரும் பேசாத செய்திகளை திரு சுரேஷ் அவர்கள் பேசுகிறார். மேடைகளில் உரத்தக் குரலில் பேசுவது எனது வழக்கம். காரணம் செய்திகள் சென்று சேருவதோடு வீரமும் சென்று சேரும்.
நீதிமன்றத்திற்கு நீங்கள் கொண்டு செல்லும் வழக்குகள் நியாயமானதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியவர் திரு கண்ணபிரான் அவர்கள். வீரப்பன் வழக்கில் தனது வாதத்தின் மூலம் 117 பேரை விடுவித்தவர் அவர். வழக்கறிஞர் சுதா இராமலிங்கம் அவர்கள், அவரது வழக்குக்காகக் கிடைத்த கட்டணத்தை எனது அலுவலகத்தில் சம்பளமில்லாமல் பணியாற்றியவர்களுக்காகக் கொடுத்தவர்.
அய்யா வைகோ அவர்களையும், மதிமுக கட்சியையும் மனதாரப் பாராட்டுகிறேன். அரசின் இலவச சட்ட உதவி மையம் செய்ய வேண்டிய பணிகளை நாங்கள் செய்திருக்கிறோம். இதில் பல்வேறு மனித உரிமை சவால்களை எதிர்கொண்டோம். இதனால் 2012ல் எங்களை அரசு முடக்கியது.
பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் கணக்கு வழக்குகளை பொதுவில் காட்டவேண்டும். NGO க்களின் கணக்குகளும் RTI கீழ் கொண்டுவரப் பட வேண்டும். காலை நான்கு மணிக்கு எங்கள் அலுவலகத்தில் ராஜலட்சுமி என்ற பெண்ணைத் தேடிவந்து புத்தக அலமாரியில் தேசியது போலீஸ். எங்கே அவர்கள் கஞ்சா பொட்டலத்தை வைத்து விடுவார்களோ என்று பயந்தேன். அவர்களை வீடியோ எடுத்தவுடன் கிளம்பி விட்டார்கள். அரசின் தவறுகளை எதிர்க்கிறோம் என்பதால் எங்களை முடக்க முயன்றார்கள்.
குஜராத், ஜம்மு, குவஹாட்டி போன்ற இடங்களில் மனித உரிமைக் கூட்டங்களை நடத்தினோம். கூடங்குளத்தில் 25000 பொய் வழக்குகள் போடப்பட்டது என்பதைப் பதிவு செய்தேன். எதிர்ப்புகள் இல்லாமல் மனித உரிமைப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று அரசுகள் நினைக்கின்றன.
போராட்டங்கள் இல்லாமல் மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. மனித உரிமைப் பணிகளைச் செய்வதில் சவால்கள் நிறைந்துள்ளன. அரசியல் கட்சிகளில் மனித உரிமைப் பிரிவுகள் ஏன் இல்லை என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துள்ளது. மதிமுக மனித உரிமைக்கான அமைப்பைத் துவங்க உள்ளதைப் பாராட்டுகிறேன்.
மதுரையில் ஒரு வழக்கில் தவறான முறையில் சிலரைக் கைது செய்த காவல் உதவி ஆய்வாளர் விஜயன் என்பவர் ஒரு முன்னாள் சமையல்காரார். முறைகேடாக மூன்று பதவி உயர்வுகள் அளிக்கப்பட்டு பதவிக்கு வந்தவர்.
மதிமுகவின் மனித உரிமை அமைப்பு மகத்தான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கம்பீரம் மனித உரிமைப் பணிக்கானது. கூட்டுப் பணி, நேர்மையான பணி, அகங்காரம் இல்லாத பணி, அரசியல் தொடர்புடைய ஆனால் அரசியல்வாதியாக இல்லாத பணி மனித உரிமைப் பணி.
மனித உரிமை ஆர்வலர்கள் துணிவாகவும் அகம்பாவம் இல்லாமலும் செயல்பட வேண்டும். இளைஞர்கள் நிறைய இப்பணிக்கு வர வேண்டும். ஏழு ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனைக்குரிய வழக்குகளில் கைது செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது அரசு அதிகாரிகளுக்குத் தெரிவதில்லை. மனித உரிமைகள் அமைப்புக்குத் தலைமை தாங்கும் தகுதி அய்யா வைகோ அவர்களுக்கு உள்ளது என்றார்.
தொடர்ந்து திருமதி.சிந்தியா திபேன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார் மதிமுக மகளிரணி துணை செயலாளர் மல்லிகா தயாளன் அவர்கள்.
தமிழின முதல்வர் வைகோ உரை:
வைகோ அவர்களின் தலைமை உரையாற்றியபோது, பிறந்தபோதே தாயை இழந்தவர் ஹென்றி திபேன். பிரான்சிலிருந்து வந்து தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு சேவை புரிந்த இவேட் திபேன் அவர்கள் ஹென்றியை தத்து எடுத்து வளர்த்தார். ஆறு குழந்தைகளை அவர் தத்து எடுத்து வளர்த்தார். சேலம் மாவட்டத்தில் தொழு நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்து பணியாற்றினார். சிறைக் கைதிகளுக்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக சேலம் மத்திய சிறையில் அவர் நினைவாக திபேன் பிளாக் உள்ளது.
அவர் மனைவியோடு இணைந்து ஏழைகளுக்கு சேவை புரிந்தார். திண்டுக்கல் வேடசந்தூரில் அணை உடைந்தபோது மக்களுக்கு சேவையாற்றினார். மனித உரிமை மீறல்களை எதிர்த்து களத்திற்குச் சென்று போராடுகிறார். ஆந்திராவில் கொல்லப்பட்ட இருபது தமிழர்களுக்காக காத்மாண்டுவில் இருந்து வந்து போராடினார். அந்த வழக்கில் சாட்சிகளை டெல்லிக்கும் பாண்டிச்சேரிக்கும் அழைத்துச் சென்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பாக நிறுத்தினார்.
வீரப்பன் வழக்கில் தூக்கில் போடப்பட இருந்த நால்வரைக் காப்பாற்ற ராம் ஜெத்மலானியைக் கொண்டு வாதாட வேண்டும் என்று நள்ளிரவில் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். விஷ வாயு அறையில் அடைத்து யூதர்களைக் கொன்ற ஜெர்மனியில் இன்று மனித உரிமைக் குரல் ஒலிக்கிறது.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்மேனியாவில் துருக்கி நடத்தியது இனப்படுகொலை என ஜெர்மனி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி இல்லை. இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலை என்று முதல்முறையாக நாடாளுமன்றத்திலேயே இந்திராகாந்தி அறிவித்தார்.
ஈழத்தில் இந்திய அரசின் உடன்பாட்டோடு இனப்படுகொலை நடைபெற்றது. ஹென்றி திபேன் அவர்களுக்கு தனது கரங்களால் விருது கொடுத்த ஜெர்மனி ஜனாதிபதி ஆர்மேனியாவில் நடைபெற்றது இனப்படுகொலை என அறிவித்தார். ஜெர்மனி ஜனாதிபதி விருது கொடுத்தார். ஆனால் விழாவுக்கு இந்திய தூதரகத்தில் இருந்து யாரும் செல்லவில்லை. நான் இந்திய அரசைப் பார்த்து வெட்கப்படுகிறேன்.
இந்திய தூதர் ஹென்றி அவர்களைச் சந்திக்கக் கூட நேரம் ஒதுக்கவில்லை. உண்மையான மனித உரிமை ஆர்வலர்கள் அதிகரிக்க வேண்டும். பண்ணைபுரத்து இளையராஜா சிம்பொனி அமைத்துத் திரும்பியபோது கண்டுகொள்ளாத இந்திய அரசு, அம்னெஸ்டி அமைப்பின் விருதை முதன்முதலாகப் பெற்ற ஹென்றி அவர்களும் இந்திய அரசால் நிராகரிக்கப்பட்டார்.
மனித உரிமைப் போராளிக்கு விருது வழங்கும் விழாவில் எப்படி இவர்கள் பங்கேற்பார்கள்? பல நேரங்களில் இவர்கள் அல்லவா கூண்டில் நிற்கிறார்கள்.
சாணை பிடிக்கும் தொழில் செய்பவர்களைப் பிடித்து சித்திரவதை செய்கிறார்கள். திருவண்ணாமலையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் காவல்துறை கொடூரமாகத் தாக்குகிறது. இது என்ன இடி அமீன் அரசா?
சமூகம் மதுவால் நரகப் படுகுழியை நோக்கி சென்று கொண்டுள்ளது. இந்த விழாவை ஏற்பாடு செய்தததற்கு மனித உரிமைப் போராளிகளுக்கு ஊக்கம் தரவேண்டும் என்பதற்காகத்தான்.
வள்ளுவர் கோட்ட உண்ணாவிரத்தில் கலந்துகொள்ள வேண்டிய நேரத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரை பூட்டான் அரசு சிறப்பாகப் பணி செய்து காப்பாற்றியது. இவரும் ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கிறார். மனித உரிமைக்காகப் போராடுபவர்களுக்கு ஹென்றி திபேன் வாழ்க்கை ஒரு பாடமாகும் என்று வைகோ அவர்கள் உரையாற்றினார்.
செய்தி, புகைப்படம்: நல்லு லிங்கம், இணையதள நேரலை கருணாகரன்
No comments:
Post a Comment