மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வை (நீட்) திணித்து, தமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பறித்தது மட்டுமின்றி, சமூக நீதிக்கும் சவக்குழியைத் தோண்டி இருக்கிறது பா.ஜ.க. அரசு. நீட் நுழைவுத் தேர்வு கூடாது என்று தமிழகம் கொந்தளித்துப் போராடியது. ஏழை, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அரியலூர் அனிதா, மருத்துவர் ஆகும் கனவை மத்திய அரசுத் தட்டிப் பறித்துவிட்டதால், தன் உயிரையே பலியிட்டுக் கொண்டார். ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு நாடு முழுவதும் நீட் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுகள் இரண்டையும் மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது.
மாநில பாடத்திட்டத்திலிருந்து நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் இருக்காது என்று மத்திய மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துவிட்டார்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் மூலம்தான் நீட் தேர்வை நடத்துவோம் என்று அறிவித்து இருக்கிறது. இந்தியா முழுவதும் சமச்சீரான ஒரே கல்வி, ஒரே பாடத்திட்டம் என்பது நடைமுறையில் இல்லாதபோது, மத்திய அரசு நீட் தேர்வுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை வலிந்து திணிப்பதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளைக் கனவிலும் நினைக்கக்கூடாது என்பதற்கான ‘தரப்படுத்துதல்’ இது என்றுதான் கருதவேண்டி இருக்கிறது.
மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து ஆதிக்கம் செலுத்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராட வேண்டிய கடமை தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் இருக்கிறது. நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யும் வரை இப்போராட்டம் நீடிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முயற்சியால் உருவாகி உள்ள சமூக நீதிக்கானப் பாதுகாப்புப் பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நீட் எதிர்ப்பு அறப்போராட்டங்கள் நடத்தி வருகின்றன. கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நீட் எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றன.
அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 22 அன்று அனைத்துக் கட்சி மாணவர் அமைப்புகளும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன.
மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டு நீட் எதிர்ப்புப் போராட்டத்தை வெற்றி அடையச் செய்யச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 21-02-2018 தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment