மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மாநில மாநாடு தூத்துக்குடியில் மிகுந்த சிறப்புடன் நடந்தேறியுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். சி.பி.எம். தொண்டர்களால் கே.பி. என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தோழர் கே.பி., அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்த காலகட்டத்தில் பொதுஉடைமை இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக்கொண்டு, கடந்த 45 ஆண்டுகளாக பொதுவாழ்வில் புடம்போட்டத் தலைவராக உயர்ந்துள்ளார். இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர், கடலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர், மாநிலச் செயற்குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளை ஏற்று, திறம்படப் பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக கடந்த முறை தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவராக விவசாயிகளுக்காகவும், விவசாயத் தொழிலாளர்களுக்காவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பெருமை தோழர் கே.பி.க்கு உண்டு.
ஜனநாயக உரிமைகளைக் காக்கவும், காவல்துறை அத்துமீறல்களை எதிர்த்தும் தீரமுடன் பல போராட்டக் களங்களுக்கு தலைமை ஏற்றதுடன், அடக்குமுறை சிறைவாசத்தையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டவர்.
சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவார்ந்த முறையில் கருத்துக்களை எடுத்துரைத்தவர். ஒடுக்கப்பட்டோர், பாட்டாளி வர்க்கத்தின் குரலை ஒலித்தவர் என்ற சிறப்புப் பெற்றவர் கே.பி.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பை ஏற்கும் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளை வீழ்த்த ஜனநாயக சக்திகளுடன் கரம்கோர்த்து, தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், இந்துத்துவ மதவெறி அரசியலை வேரறுக்கவும், சீரிய முறையில் செயலாற்றி தனி முத்திரைப் பதிக்க வேண்டும் என்று இதயமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 21-02-2018 தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment