காஞ்சிபுரம் மாவட்டம் - செய்யூர் வட்டம், சூனாம்பேடு அடுத்த வில்லிப்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் பத்மா கெமிக்கல்ஸ் (உப்பளம்) பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த 1989 முதல் இயங்கி வருகின்றது. மத்திய அரசிடம் இருந்து 427.30 ஏக்கர், மாநில அரசிடம் இருந்து 1223 ஏக்கர் உப்பள நிலங்களை குத்தகைக்கு எடுத்து உப்பு விளைவித்து வருகின்றது.
பாத்தி கட்டுதல், உப்பு மிதித்தல், உடைத்தல், சேர்த்தல், அம்பாரம் கட்டுதல் மற்றும் பல பணிகளில் சுமார் 900 தொழிலாளர்கள் கடந்த 27 ஆண்டுகளாக, ஓராண்டில் 9 மாதங்களுக்கும் மேல் பணிபுரிந்து வருகின்றார்கள்.
ஆண்களுக்கு ரூபாய் 290ம், பெண்களுக்கு ரூபாய் 140ம் நாள் ஒன்றுக்கு ஊதியமாக தரப்படுகின்றது. குறைந்தபட்ச ஊதியம் கூட யாருக்கும் தரப்படுவது இல்லை. இதுவரை நு.ளு.ஐ., ஞ.கு. வசதிகள் கிடையாது. காலணி, கையுறை உள்ளிட்ட பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படுவது இல்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, ஓய்வறை என எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடையாது.
வெறும் கால்களாகல் மேற்கண்ட பணிகளைச் செய்வதாலும், தொடர்ச்சியாக 25 டிகிரிக்கு மேல் காரத்தன்மையுள்ள உப்பு நீரில் பணி செய்வதாலும் கால்களிலும், உடலிலும் பல்வேறு தோல் நோய்கள் உருவாகி துன்பப்படுகின்றனர்.
பாண்டிச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் கெம்பாப் ஆல்கலைஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு, அதன் துணை நிறுவனமான வில்லிப்பாக்கம் பத்மா கெமிக்கல்ஸ் உப்பு உற்பத்திப் பிரிவு சராசரியாக ஆண்டுக்கு 80,000 டன் உற்பத்தி செய்து அனுப்புகின்றது. இந் நிறுவனம் ரசாயன வேதிக் கழிவுகளை விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கந்தாடு உப்பளப் பகுதியிலும், அதை ஒட்டியுள்ள விவசாயப் பகுதிகளிலும் பல ஆண்டுகளாகக் கொட்டி வருகின்றனர்.
இதனால் உப்பளத்தில் பணிபுரியும் தொழிலாளிகள், உப்பளத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டத்திற்கும், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்திற்கும் உட்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, மக்கள் தோல் வியாதி உள்ளிட்ட கடுமையான பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். செய்யூர் வட்டத்தில் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாலைவனமாக மாறி வருகின்றது.
குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலம், உப்பு எடுப்பதற்கு மட்டுமே தவிர மாறாகச் பத்மா கெமிக்கல்ஸ் நிர்வாகத்தின் ரசாயனக் கழிவுகள் கொட்டுவதற்கு அல்ல. சட்ட விரோதமாக ரசாயனக் கழிவுகளைக் கொட்டி நீரையும், நிலத்தையும் மாசுபடுத்தி இருப்பின் குத்தகையை ரத்து செய்து கடுமையான, சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
உப்பளத்தில் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை முறையாக வழங்காமல், அதிகாரிகள் துணை கொண்டு தொழிலாளர்களின் உரிமைகளைக் கொடுக்க மறுத்து, காவல்துறை துணை கொண்டு அச்சுறுத்துவது சட்ட விரோதம் ஆகும்.
தொழிலாளர்களின் உரிமைக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்களையும், குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என்று நிர்வாகத்தின் சார்பில் காவல்துறை மிரட்டுவதும் கண்டனத்திற்குரியது.
தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களையும், உப்பள நிர்வாகத்தையும் அழைத்துப் பேசி உரிய தீர்வை எடுத்திட வேண்டும். தவறினால், ஒத்த கருத்துள்ள ஜனநாயக சக்திகளைத் திரட்டிப் போராட வேண்டிய நிலை வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று 22-02-2018 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment