காவிரி நீர் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் நேற்று 22-02-2018 அன்று கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதில் பேசியதாவது,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே,
மதிப்புமிக்க அரசியல் கட்சிகளின் தலைவர்களே,
விவசாய சங்கங்களின் தலைவர்களே,
வணக்கம்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தின் காவிரி தீரத்தை, வளம் கொழிக்கும் இயற்கைச் செல்வமாக, ஆசியக் கண்டத்தின் நெற்களஞ்சியமாக ஆக்கிய நமது காவிரி நதியின் உரிமையைப் பறித்து, தஞ்சை மண்டலத்தைப் பஞ்சப் பிரதேசம் ஆக்கும் வகையில்,
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவ ராய், கன்வில்கர் அமர்வு, 2018 பிப்ரவரி 16 ஆம் நாள், தமிழகத்திற்குக் கேடு விளைவிக்கும் ஓர வஞ்சகமான அநீதியான தீர்ப்பை வழங்கி இருக்கின்றது.
தமிழகத்தின் உயிர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக ஆக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல் அமைச்சர் ஏற்பாடு செய்து இருப்பதை மனதார வரவேற்கின்றேன்.
126 ஆண்டுகளாக பேசப்பட்டு வருகின்ற பிரச்சினையில்,
1892 பின்னர் 1924 ஒப்பந்தங்கள்,
74 ல் கர்நாடகம் மேற்கொண்ட அநீதியான போக்கு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு,
1990 ஜூன் 2 ல் மத்திய அரசு அமைத்த காவிரி நடுவர் மன்றம்,
91 ஜூன் 25 ல் 205 டிஎம்சி என இடைக்கால ஆணை,
அதனைச் செல்லாது என்று ஜூலை 25 ல் கர்நாடகம் கொண்டு வந்த அவசரச் சட்டம், அதனை ரத்து செய்த உச்சநீதிமன்றம்,
2007 பிப்ரவரி 5 ல் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, அதில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி;
சுற்றுச் சூழலுக்கு 10 டிஎம்சி; கடலில் விழுந்து ஆவியாதல் 4 டிஎம்சி; புதுவைக்கு 7 டிஎம்சி கழித்து, தமிழகத்திற்குக் கிடைப்பது வெறும் 171 டிஎம்சிதான்.
இந்நிலையில் இப்போது வந்திருக்கும் தீர்ப்பில்
முன்பு கொடுத்ததும் பறிக்கப்பட்டு விட்டது.
இப்போது அதிலும் 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டு விட்டதால், கிடைத்து இருப்பது வெறும் 156.25 டிஎம்சிதான்.
இது கர்நாடகத்தின் கோரிக்கை.
அதனைத்தான் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, மத்திய அரசு,
2013 பிப்ரவரி 19 இல், அரசு இதழில் வெளியிட்டது.
மார்ச் 19 ல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
மே 10 ஆம் நாள், கர்நாடகம் சார்பாக வாதாடிய பாலி நாரிமன், தந்திரமாக, மேலாண்மை வாரியம் அமைக்க நாள் ஆகும்; ஒரு மேற்பார்வைக்குழு அமைத்துக் கொள்ளலாம் என்ற தமிழ்நாட்டுக்குப் பாதகமான கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இது மிகப்பெரிய ஏமாற்று வேலை.
இத்தனை ஆண்டுகளாக நாம் கண்ட காட்சி, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகம் நமக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை.
நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடகம் 11 இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கர்தான் பாசனம் செய்ய வேண்டும் என்றது; இறுதித் தீர்ப்பில் அதை 18 இலட்சம் ஏக்கராக உயர்த்தியது. ஆனால், கர்நாடகம் தற்போது 22 இலட்சம் ஏக்கர் பாசனம் செய்கின்றது.
தமிழகத்தின் பாசனப் பரப்பு 1.75 லட்சம் ஏக்கர் குறைந்துவிட்டது.
இந்தத் தீர்ப்பில் பெங்களூரு நகரத்தை வானளாவப் புகழ்ந்து, அதற்குக் குடிநீர்த் தேவையைக் கணக்கில் எடுக்க வேண்டும் என்றுசொல்லி இருக்கின்றார்கள். அதன் மூன்றில் ஒரு பங்கு பரப்புதான் கணக்கில் எடுக்கப்படும் என்று நடுவர் மன்றம் சொன்னதை நிராகரித்து விட்டு, 10 டிஎம்சி கொடுக்க வேண்டும் என்று சொல்வது திட்டமிட்ட அநீதி ஆகும்.
இங்கே 16 மாவட்டங்கள், சென்னை மாநகரமும் குடிதண்ணீருக்கும் காவிரியைத்தான் நம்பி இருக்கின்றார்கள்.
காவிரித் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது குறித்துத்தான் வழக்கு.
இதில் நிலத்தடி நீரைப் பற்றிப் பேச வேண்டியதே இல்லை.
மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் 2017 ஜூன் மாதம் வெளியிடப்பட்ட இந்தியாவின் மாறுகின்ற நிலத்தடி நீர் வளங்கள் என்ற விரிவான அறிக்கை, காவிரி பாசனம் பெறும் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்பட்டு வருவதாகக் கூறுகின்றது.
எதிர்காலத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் இருக்காது என்றும் கூறுகின்றது. ஆற்றில் தண்ணீர் ஓடாவிடில், நிலத்தடி நீர் மண்ணுக்குள் எப்படித் தேங்கும்.
இந்தத் தீர்ப்பின் 434 பக்கம் தொடங்கி 438 பக்கம் வரையிலும், நிலத்தடி நீர் குறித்துத் தமிழ்நாட்டுக்கு ஓர வஞ்சகம் செய்யும் கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும்; பின்னர் நாடாளுமன்றத்தில் திருத்தங்களோடு கூட மாறுதல் செய்து ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறுகின்றது.
பக்கம் 457 ல்,
We direct that a scheme shall be framed by the Central Government within a span of six weeks from today so that the authorities under the scheme can see to it that the present decision which has modified the award passed by the tribunal is smoothly made functional and the rights of the States as determined by us are appositely carried out.
காவிரி நடுவர் மன்றம் வெளியிட்ட இறுதித் தீர்ப்பில், பாரா 290 இல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டது. அதன் தலைப்பே இதுதான்:
Mechanism (Cauvery Management Board) for implementation of Tribunal’s decisions.
பக்கம் 336 வாசிக்கின்றேன்.
It thus, recommended that the Cauvery Management Board be constituted on the lines of Bhakra Beas Management Board by the Central Government. It underlined that unless an appropriate mechanism was set up, the prospect of implementation of its decision would not be secured.
It also recommended the composition of the Cauvery Water Regulatory Committee and outlined its functions.
அதாவது, காவிரி நடுவர் மன்றம் கூறிய காவிரி மேலாண்மை வாரியம் Cauvery Management Board என்ற சொல்லே இந்தத் தீர்ப்பில் இல்லை. உயர்நீதிமன்றம் திட்டமிட்டு இந்தச் சொற்களைத் தவிர்த்து இருக்கின்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாலும் ஏற்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா சொல்லி விட்டார்.
நடுவர் மன்றம் அறிவித்தபடி கர்நாடகம் தண்ணீர் தரவில்லை. இப்போது உச்சநீதிமன்றம் நமக்கு அநீதியாக அறிவித்து இருக்கின்ற இந்த அளவுத் தண்ணீரையாவது கொடுப்பார்களா? இல்லை.
அடுத்து வரப்போகின்ற அபாயம் என்ன?
மேகேதாட்டு, ராசிமணலில் கர்நாடகம் புதிய அணைகளைக் கட்டப்போகின்றது.
2015 டிசம்பர் முதல் வாரத்திலேயே பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர் அனந்தகுமார் வீட்டில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய ரகசிய சதி ஆலோசனைக் கூட்டத்தில், சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் கலந்துகொண்டார். ‘வெளிப்படையாக நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம்; ஆனால் நீங்கள் அணைகளைக் கட்டிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டார்கள்.
இந்த அணைகள் கட்டப்பட்டால், கபினி, கிருஷ்ணராஜ சாகருக்கு உபரித்தண்ணீர் வராது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும் தண்ணீர் கொடுக்கப் போவது இல்லை.
எனவே, தமிழக முதல்வர், அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகளுடன் இந்தியப் பிரதமரைச் சந்திக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும்; கர்நாடகம் புதிய அணைகளைக் கட்டுவதை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்த வேண்டும்.
உச்சநீதிமன்றம் தந்து இருக்கின்ற இந்த அநீதியான தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும்; அரசியல் சட்ட அமர்வில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதியாகத் தமிழகம் முன்வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் வைகோ அந்த கூட்டத்தில் பேசினார்.
No comments:
Post a Comment