சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு, தமிழ்நாட்டின் வேண்டுகோளைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவித்து ஏற்பு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால், இது வரையில் இந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
இந்நிலையில் மாநிலங்களவையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள மத்திய சட்டத்துறை இணை அமைச்சர். பி.பி.சௌத்ரி, “தமிழ்நாட்டின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது என்றும், உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் அமர்வு 2012 அக்டோபர் 11 இல் கூடி இந்தக் கோரிக்கைக்கு இசைவு அளிக்க முடியாது” என்று அறிவித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தைக் காரணம் காட்டி, உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. ஏனெனில் அரசியலமைப்புச் சட்டம் 348(2)ன் படி, அந்தந்த மாநிலங்களின் மொழியை நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக பயன்படுத்திட ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் இருந்தாலே போதும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 348 ஆவது பிரிவு, உட்கூறு (2) கூறுவது என்ன?
“The Governor of a state may, with the previous consent of the president, authorise the use of the Hindi Language, or any other language used for any official purposes of the state, in proceedings in the High Court having its principal seat in that state..”
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழி ஆக்கிட அரசியல் அமைப்புச் சட்டப்படி உரிமை அளிக்கப்பட்டிருந்தும் மத்திய அரசு ஏற்பு அளிக்காதது டெல்லி ஆதிக்கத்தின் அதிகார ஆணவத்தை வெளிப்படுத்துகிறது. மத்தியப் பிரதேசம், இராஜÞதான், உத்திரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் அந்த மாநிலங்களின் தாய் மொழியான ‘இந்தி’தான் வழக்காடு மொழியாக ஆக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் அநீதி இழைக்கப்படுகிறது.
கடந்த 2017 செப்டம்பர் மாதம் டெல்லியில் இந்தி தினம் கொண்டாட்டத்தின் போது நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தெரிவித்தக் கருத்தை நினைவுகூற விரும்புகிறேன்.
“இந்தியை தேசிய மொழியாக அறிவித்து இருந்தாலும்கூட, அதற்கு இந்தியாவின் சில பகுதிகளில் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது என்பதையும் புறம்தள்ளிவிட முடியாது. அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் முடியாது. இந்தியா என்பது அனைவருக்கும் பொதுவான தேசம்.
இந்தியாவில் வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் பேசும் மொழிகளை சாமானிய மக்கள் புரிந்துகொள்வதில்லை. எல்லோருமே ஆங்கிலம் படித்தவர்கள் அல்ல. நீதிமன்றங்களில் மெல்ல மெல்ல இந்தியும் மற்ற மாநில மொழிகளும் கையாளப்படும் சூழல் உருவாகி வருகிறது. ஆனால் இன்றும்கூட ஆங்கிலம்தான் வழக்காடு மொழியாக இருக்கிறதே தவிர, மாநில மொழிகள் பயன்பாட்டுக்கு வரவில்லை. அதனால் என்ன விவாதிக்கப்படுகிறது என்பதை வழக்குத் தொடுத்தவர் புரிந்துகொள்ள முடியாத நிலைதான் காணப்படுகிறது,”
குடியரசுத் தலைவரின் மேற்கண்ட கருத்து மாநிலங்களில் அந்தந்த தேசிய இனங்களின் தாய்மொழியை உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழி ஆக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுவூட்டுவதாக இருக்கிறது.
எனவே தமிழக அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, தமிழ் மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழி ஆக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மத்தியஅரசு இதற்கான பரிந்துரையை அனுப்பி குடியரசுத் தலைவரின் இசைவைப் பெற துணை புரிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று 05-02-2018 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment