திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி - ஆவரந்தலை சாலையில் நம்பியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேல்மட்டப் பாலம் பயன்பாட்டுக்கு வந்த 15 மாதங்களுக்குள் 30.11.2017 அன்று இடிந்து விழுந்துவிட்டது. இதனால் ஆவரந்தலை, சந்தோசபுரம், கட்டளை, வடக்கு ஆவரந்தலை, புதுத்தெரு ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மாற்றுப்பாதையின்று பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
பாலத்தை மீண்டும் உடனே கட்டித் தரக் கோரியும், பாலத்தைத் தரமான முறையில் கட்டாத குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, திருநெல்வேலி புறநகர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் (2.12.2017),
டிசம்பர் நான்காம் நாள் நேரில் ஆய்வு,
சென்னையில் இயங்கும் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவத்தில் 05.12.2017 அன்று முறையீட்டு மனு (எண் 235/2017)
திருக்குறுங்குடியில் கோரிக்கை விளக்க விளம்பரங்கள்,
30.12.2017 இல் நடைபெற்ற மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் நடவடிக்கை கோரி தீர்மானம்,
முதன்மைச் செயலாளர் நகராட்சிகள் துறை, சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர், சென்னை மாவட்ட ஆட்சியர், திருநெல்வேலி பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் திருநெல்வேலி ஆகியோருக்குக் கடிதங்கள், (04.01.2018)
02.02.2018 ஆம் நாளன்று மேற்கண்ட நான்கு உயர் அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 06.02.2018 முற்றுகைப் போராட்டம் அறுவடைக் காலத்தை கருத்திற் கொண்டு 21.02.2018 அன்று நடைபெறும் என ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத் தபால் எனப் பல நடவடிக்கைகளை திருநெல்வேலி புறநகர் மாவட்ட மதிமுக மேற்கொண்டுள்ளது.
எனினும் கடந்த மூன்று மாதங்களாகத் தமிழக அரசு, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பாலம் தரமான முறையில் எவ்வித முறைகேடும் இன்றித்தான் கட்டப்பட்டது என்று சொல்லும் துணிச்சலும் அரசுத் துறைகளிடம் இல்லை.
கீழ்மட்டத்தில் இருந்து, மேல்மட்டம் வரை ஊழல் மலிந்து செயல் இழந்து கிடக்கிறது என்பதற்கு ஓர் அவலச் சாட்சியாக இப்பாலம் காட்சி அளிக்கின்றது.
அரசு நிதியைப் பாழாக்கி பாலம் இடிந்து விழக் காரணமான குற்றவாளிகள் அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும்; எவ்வித பதிலையும் தெரிவிக்காத அரசுத் துறைகளின் பொறுப்பற்ற செயலைக் கண்டித்தும்; மறுமலர்ச்சி திமுக நெல்லை புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாவட்டப் பொறுப்பாளர் தி.மு.இராசேந்திரன் தலைமையில் 21.02.2018 காலை 10 மணிக்கு திருக்குறுங்குடி பேரூராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
அறிவிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றுக் கடமை ஆற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
இதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கத் தவறினால், தொடர்புடைய குற்றவாளிகள், அலுவலர்கள் அனைவர் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மறுமலர்ச்சி திமுக வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என வைகோ தனது அறிக்கையில் 20-02-2018 அன்று தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment