நெல்லை மாவட்டம் - பணகுடியில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியான மனோ கல்லூரி 2010 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது.
இக்கல்லூரியில் தற்போது சுமார் 450 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். அனைவருமே ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இக்கல்லூரி தனியார் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் வாடகை இன்றி இயங்கி வந்தது.
தற்சமயம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், பணகுடி மனோ கல்லூரிக்குப் புதிய கட்டடம் கட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.
மாணவ - மாணவியர், பேராசிரியர்கள் சிரமம் இன்றி வந்து செல்லும் வகையில் இக்கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு பொருத்தமான வாய்ப்புள்ள கீழ்க்கண்ட பல இடங்கள் உள்ளன.
1. பணகுடி அரசு மேல்நிலைப்பள்ளி சர்வே எண்கள் 460, 461 இல் இராமலிங்க சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான 5 ஏக்கர் இடமும்,
2. பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகே ஒரு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமும்,
3. பணகுடி காவல்நிலையம் அருகே மூன்று ஏக்கர் அரசு நிலமும்,
4. பணகுடி -சேரன்மகாதேவி சாலை ரோஸ்மியாபுரம் உயர்நிலைப்பள்ளி அருகே சர்வே எண் 146 இல் 5.75 ஏக்கர் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய நிலமும்,
5. பணகுடி பிரதான சாலை சத்திரத்தில் 2 ஏக்கர் நிலமும்,
6. ரோஸ்மியாபுரம் அருகில் பனைவெல்லப் பொருட்கள் நலவாரியத்திற்குப் பாத்தியப்பட்ட 70 ஏக்கர் இடமும்,
7. சர்வோதய சங்கத்திற்கு 18 ஏக்கர் இடத்தில் சிவன் பிள்ளை குடும்பத்தினர் தானமாக வழங்கிய 5.5 ஏக்கர் இடமும்
பொருத்தமான இடங்களாக பொது மக்களாலும், மறுமலர்ச்சி தி.மு.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட அரசுக்குச் சொந்தமான ஏதாவது ஒரு இடத்தைக் கைப்பற்றி மனோ கல்லூரிக்குக் கட்டடம் கட்டுவதற்குப் பதிலாக சாலை வசதியோ, பேருந்து வசதியோ இல்லாத பணகுடி ஊரிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரமுள்ள குத்திரபாஞ்சன் அருவி அருகில் மலை அடிவாரப் பகுதியில் மேய்ச்சல் நிலத்தை அழித்து கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
தவறான இடத் தேர்வைக் கண்டித்து நெல்லை மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க முதல் குரல் கொடுத்தது.
தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா., சி.பி.எம்., சி.பி.ஐ., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., வர்த்தக சங்கம் இணைந்து பணகுடியில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு.அப்பாவு தலைமையில் 21.12.2017 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கையினை வலியுறுத்தி உள்ளனர்.
தற்போது கட்டடப் பணிகள் தொடங்கியுள்ள இடம் புலி, காட்டு யானைகள் அடிக்கடி நடமாடுகின்ற மலை அடிவாரப்பகுதி. பாதுகாப்பற்றது. ஆங்கில, தமிழ் நாளேடுகள் பல சிறப்புச் செய்தியாக இக்குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி உள்ளன.
எனவே, மாணவர்கள் - பொதுமக்ககள் நலன் கருதி, பணகுடி மனோ கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டும் பணியினை உடனடியாக நிறுத்திவிட்டு, உயர்கல்வித் துறைச் செயலாளரும், நெல்லை மாவட்ட ஆட்சியரும் நேரில் சென்று ஆய்வு செய்து, பொருத்தமான இடத்தினைத் தேர்வு செய்து, புதிய கட்டடம் கட்டுவதற்கு ஆவன செய்திட வேண்டுகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 15-02-2018 அன்று தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment