தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல் கர்நாடகம் வஞ்சித்ததாலும், காவிரி பாசனப் பகுதி மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கி இருக்கின்றன.
சம்பா சாகுபடி பயிர்கள் காய்ந்து கருகியதால் ஏற்பட்ட அதிர்ச்சியாலும், தற்கொலை செய்துகொண்டும் காவிரி டெல்டாவில் ஏழு விவசாயிகள் உயிர் இழந்தது தாங்கொணாத வேதனை அளிக்கிறது.
இந்த நிலையில், மஞ்சள் விளையும் கொங்கு மண்ணிலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பேரிடியாகத் தாக்குகின்றது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் உள்ள கரட்டடிப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இராமலிங்கம், மூன்றரை ஏக்கர் நிலத்தில் மஞ்சள் சாகுபடி செய்து இருந்தார். தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடிக் கருகியதைக் கண்ட அவர் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மஞ்சள் பயிர்களைக் காப்பாற்ற காளிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையை ஏற்றுத் தண்ணீர் விட வேண்டும்.
ஈரோடு விவசாயி இராமலிங்கம் உள்ளிட்ட தற்கொலை செய்துகொண்ட 8 விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா 25 இலட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். விவசாயிகள் தற்கொலைகளைத் தடுக்க நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை எந்தவித நிபந்தனையும் இன்றித் தள்ளுபடி செய்ய வேண்டும்.
காவிரி பாசன மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்களில் விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழந்து வறுமையில் வாடுகின்றனர். அவர்களின் வாழ்நிலையைக் கருத்தில் கொண்டு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment