புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீனவர்களும், நாகப்பட்டினம் மீனவர்களும் நவம்பர் 7 ஆம் தேதி, கோடியக்கரைக்குத் தென்கிழக்குக் கடற்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இந்தியக் கடற்பகுதிக்குள் வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் விசைப்படகு மீது சரமரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பா என்ற மீனவருக்குச் சொந்தமான விசைப்படகில் இருந்த எட்டு மீனவர்களைக் குறிவைத்துச் சுட்டுள்ளனர்.
காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் நாகை நம்பியார் நகர் நகரைச் சேர்ந்த அரவிந்த் ஆகிய இரு மீனவர்கள் பலத்த காயமடைந்து புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி டெல்லிக்கு வருகை தந்த இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவதால்தான் கடற்படை தாக்குதல் நடத்தி வருகின்றது என்று சொல்லித் தாக்குதலை நியாயப்படுத்தினார். தற்போது இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்து சிங்களக் கடற்படை சுட்டது. இந்திய அரசு கடுமையான கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக டெல்லியில் நவம்பர் 2 மற்றும் 5 ஆம் தேதிகளில் இருநாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைகள் நடந்தன.
5ஆம் தேதி நடந்த பேச்சுவார்தையில், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன்சிங், நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்தியாவின் சார்பிலும், இலங்கை அமைச்சர்கள் மங்கள சமரவீரா, மகிந்த அமரவீரா, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் இலங்கை சார்பிலும் பங்கேற்றனர்.
அப்போது, மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை அமைப்பது என்றும், கைது செய்யப்படும் மீனவர்களைத் தாக்கக் கூடாது என்றும், மீனவர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், இக்கோரிக்கைகளை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டதாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளைத் திருப்பி ஒப்படைக்க முடியாது என்றும் இலங்கை அமைச்சர்கள் டெல்லியிலேயே மமதையோடு கூறி விட்டனர். கொழும்பு திரும்பிய இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீரா அங்குள்ள ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “மன்னார் வளைகுடா, பாக் நீரிணைப்பு ஆழ்கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் இரட்டை மடி, சுருக்கு வலை, இழுவை வலை பயன்படுத்துவதை நிறுத்த மூன்று ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும்; ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும்’ இலங்கைக் கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் 80 நாட்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும். ஆகிய மூன்று கோரிக்கைகளை இந்திய தரப்பு முன்வைத்தது. இவற்றை ஏற்க மறுத்துவிட்டோம்” என்று கூறி இருக்கின்றார்.
ராஜதந்திர முயற்சிகள் மூலம் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று இந்திய அரசு கருதுவது ஒருபோதும் நிறைவேறாது.
இப்போது எல்லை தாண்டி அத்துமீறி நுழைந்து, தமிழக, புதுவை மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதன் மூலம், இலங்கை அரசின் நிலைப்பாடு வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது.
எனவே, இந்திய அரசு தமிழக, புதுவை மீனவர்களுக்கு இந்திய கடற்படையினர் மூலம் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்; சிங்களக் கடற்படை மீனவர்களை தாக்கினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment