விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார் வைகோ!
திருமதி.விசாலாட்சி நெடுஞ்செழியன் அவர்கள் நேற்று சென்னையில் காலமானார்கள். அந்த செய்தியை அறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், இன்று 15-11-2016 மதியம் அவரது இல்லத்திற்கு சென்று திருமதி.விசாலாட்சி நெடுஞ்செழியன் அவர்களின் உடலுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பத்திரிகையாளர்களுக்கு இரங்கல் பேட்டியளித்தார் வைகோ அவர்கள். அந்த பேட்டியில் பேசிய வைகோ அவர்கள்,
பேரறிஞர் அண்ணா அவர்களின் இதயத்தில் யாரும் பெற முடியாத இடத்தை பெற்றிருந்த நினைவிலே வாழும் அண்ணன் நடமாடும் பல்கலை கழகம் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை 56 திருச்சி மாநில மாநாட்டில் தம்பி வா, தலைமை ஏற்க வா, உன் ஆணைக்கு கட்டுப்படுகிறோம் என்று கூறினார் பேரறிஞர் அண்ணா. அவர் வெளிநாட்டு பயணத்திற்கு செல்லும்போதும், சிகிச்சைக்கு செல்லும்போதும், முதலமைச்சர் பொறுப்பை அண்ணன் நாவலரிடமே ஒப்படைத்தார்.
குறுந்தாடி நெடுஞ்செழியனாக தமிழகமெங்கும் வலம் வந்து அண்ணாவினுடைய கொள்கைகளை கொண்டு போய் நிறுத்தியவர் அண்ணன் நாவலர் அவர்கள். அவருடைய அருமை துணைவியார் டாக்டர் விசாலாட்சி அம்மையார் மறைந்தார் என்ற செய்தி நேற்று இரவு அறிந்து மிகுந்த வேதனைக்கு உள்ளானேன்.
என்னுடைய திருமணத்தை 1971 ஆம் ஆண்டு அண்ணன் நாவலர் அவர்கள்தான் குற்றாலத்தில் வைத்து நடத்தி வைத்தார்கள். 1998 ல் என் ஒரே மகன் துரை வையாபுரி திருமணத்தையும் அண்ணன் நாவலர் அவர்கள்தான் நடத்தி வைத்தார்கள். எங்கள் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு அவர் கூறிய வாழ்த்துக்கள் இன்றைக்கும் துணை நிற்கின்றன. நான் இந்த இல்லத்திற்கு வந்துதான், என் மகன் திருமணத்திற்கு அழைக்க வந்த போது டாக்டர் விசாலாட்சி அம்மையார் அவர்களும் இருந்தார்கள். இதே இல்லத்தில்தான் 1997 ஜூலை மாதம் அண்ணன் நாவலர் பிறந்த நாளன்று வந்த போது அண்ணா திமுக பொதுச் செயலாளர் அவர்களையும் இங்குதான் சந்திக்க நேர்ந்தது.
அரசியலில் கூட்டணியை விட்டு நான் வெளியேறியதற்கு பின்னரும் கூட என் இல்லத்தில் வந்து திருமணத்தை நடத்தி வைத்தவர் அண்ணன் நாவலர் அவர்கள். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய பொறுப்பு வகித்த அம்மையார் டாக்டர் விசாலாட்சி அவர்கள் மறைவு அவருடைய அருமை மகன் மதிவாணன் குடும்பத்தினர், அண்ணாவினுடைய மனசாட்சியை போல திகழ்ந்த அண்ணன் இரா.செழியன் அவர்கள் உள்ளிட்ட உற்றார் உறவினருக்கும், இந்த துக்கத்தால் வேதனைபடுகிற லட்சோபலட்சம் அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment