Saturday, November 5, 2016

என்.டி.டி.வி. செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை! கருத்துரிமையைத் தடுக்கிறதா மத்திய அரசு? வைகோ அறிக்கை!

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் இராணுவ முகாம் மீது ஜனவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான செய்திகளை என்.டி.டி.வி. தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பாதுகாப்பு தொடர்பான தகவல்களையும், அரசின் ரகசியமான ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளையும் பகிரங்கமாக ஒளிபரப்பியதாக குற்றம் சாட்டி, மத்திய அமைச்சர்கள் குழு அளித்துள்ள பரிந்துரையை ஏற்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நவம்பர் 9 ஆம் தேதி ஒரு நாள், என்.டி.டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தடை விதித்து இருக்கிறது.


இது தொலைக்காட்சி ஊடகங்கள் மீது மட்டும் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் அல்ல,ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் மீது தொடுத்துள்ள தாக்குதல் ஆகும். நெருக்கடி கால இருண்ட வரலாற்றை மீண்டும் நினைவூட்டுவது போன்ற மோடி அரசின் இந்நடவடிக்கை கடுமையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.

மோடி அரசின் செயல்பாடுகள் அனைத்தும் நாட்டை சர்வாதிகாரப் பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய வகையில்தான் இருக்கின்றன. நாட்டின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் பத்திரிகை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டால் அவற்றின் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் பா.ஜ.க. அரசு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் முயற்சியில் இறங்கி இருப்பது அரசியல் சட்டம் வழங்குகின்ற கருத்துரிமையைப் பறிக்கும் செயல் ஆகும்.

மோடி அரசு இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதைப் பார்த்தால் இந்தியா ஜனநாயகப் பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறதா? என்ற ஐயப்பாடு எழுகிறது. கருத்துரிமைக்கு எதிராக என்.டி.டி.வி. இந்தியா செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு விதித்துள்ள ஒரு நாள் தடையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment