மக்கள் அவையில் நேற்று உருக்குத்துறை இணை அமைச்சர் விஷ்ணு டியோ சாய் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், சேலம் உருக்காலையை நவீனப்படுத்தவும், விரிவாக்கம் செய்திடவும், ரூபாய் 2200 கோடி முதலீடு செய்த போதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக நட்டத்திலேயே இயங்கி வருகின்றது. இதனால் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்க உருக்காலையின் பங்குகள் 51 விழுக்காட்டிற்கு மேல் தனியாருக்கு விற்க அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவித்து இருக்கின்றார்.
மத்திய கனரகத்துறை அமைச்சர் ஆனந்த் கீதே சென்னைக்கு வந்திருந்தபோது, சேலம் உருக்காலை தனியார் மயம் ஆகாது என்று சொன்னார். அதற்கு மாறாக, இப்போது சேலம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவு அதிர்ச்சி அளிக்கின்றது.
1973 இல் சேலம் உருக்காலை, இந்திய உருக்காலை ஆணையத்தின் சார்பு நிறுவனமாக அறிவிக்கப்பட்டு, முதல் கட்டமாக 136 கோடி ரூபாய் முதலீட்டில், 32 ஆயிரம் டன் திறன்கொண்ட ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உற்பத்திக்கான உருட்டாலை திட்டத்திற்கு 1977 இல் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
உலகச் சந்தையில் சேலம் உருக்காலை உற்பத்தி செய்யும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த உருக்காலை தயாரிக்கும் தகடுகளை உலகின் 37 நாடுகள் வாங்குகின்றன. சேலம் உருக்காலை ரூபாய் 800 கோடி அந்நியச் செலாவணியும், எக்சைஸ் மற்றும் இறக்குமதி என்ற வகையில் ரூபாய் 1200 கோடியும் இதுவரை ஈட்டித் தந்துள்ளது.
1995 இல் வெப்ப உருட்டாலை அமைக்கப்பட்டு, மாதம் ஒன்றுக்கு 15 ஆயிரம் டன் முதல் 25 ஆயிரம் டன் வரை உற்பத்தி செய்து உலகச்சாதனை படைத்துள்ளது.
ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உற்பத்தியில் உலக அளவில் 12 பெரிய உற்பத்தி நிறுவனங்களில் சேலம் உருக்காலையும் ஒன்றாகும்.
இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் ஆகும். பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா சிறப்புத் தகுதி பெற்ற சேலம் உருக்காலை பல்வேறு இடர்பாடுகளை சந்தித்த நிலைலும், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் அளவில் லாபம் ஈட்டி வந்தது.
உலக வங்கியின் மெக்கன்சி குழு பரிந்துரையின்படி துர்காபூர், சேலம், பத்ராவதி, வங்கத்தில் உள்ள இஸ்கோ போன்ற ஆலைகளைத் தனியாருக்கு விற்பனை செய்திட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் இருந்தே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க துடித்துக்கொண்டு இருப்பது கண்டனத்திற்கு உரியது ஆகும்.
மத்திய அரசின் திட்டமிட்ட புறக்கணிப்பு மற்றும் நிர்வாகச் சீர்கேடு போன்ற காரணங்களால்தான் சேலம் உருக்காலை சீர்கேடு அடைந்தது என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிடத்தகுந்த பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையைத் தனியாருக்குத் தாரை வார்த்தால், நேரடியாகவும், மறைமுகமாகவும் அங்கு பணியாற்றும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
சேலம் உருக்காலையை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவையும் மத்திய அரசு கைவிடவேண்டும் என்று வலியுறுத்துகிறே என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment