சந்தர்ப்ப சூழ்நிலையால் நிகழ்ந்த சம்பவங்களால், கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தால், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப் படுகின்ற கைதிகள் அனைவரும் திருந்தாத குற்றவாளிகள் அல்ல. அவர்களில் பலர் சிறைச்சாலையில் திருந்தியவர்களாக மாறி, புதிய வாழ்க்கை வாழத் துடிக்கின்றார்கள்.
அண்மைக்காலமாக கோரமான படுகொலைகளைச் செய்கின்ற கூலிப்படையினர் பெரும்பாலும் சட்டத்தின் பிடியில் சிக்குவது இல்லை.அப்படியே கூண்டில் நிறுத்தப்பட்டாலும் அச்சத்தின் காரணமாக எவரும் சாட்சியம் அளிப்பது இல்லை. அத்தகைய கொடியவர்கள் சுதந்திரமாக உலவுகிறார்கள்; மேலும் மேலும் குற்றங்களைச் செய்து கொண்டே இருக்கின்றார்கள்.
ஆனால், ஆயுள் தண்டனை பெற்றோர், பத்து ஆண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்ற காரணத்தால் விடுவிக்கப்படாமலேயே சிறைச்சாலைகளில் வாடுகின்றனர். அவர்களுள் பலர் இருபது ஆண்டுகள் கடந்தும் சிறையில் அல்லல்படுகின்றனர். அவர்களது குடும்பங்கள் சின்னாபின்னம் ஆகின்றன. அதனால், மரணத்தை விடக் கொடுமையான மனத் துன்பங்களுக்குச் சிறைவாசிகள் ஆளாகி உள்ளனர்.
இந்தியக் குற்ற இயல் நடைமுறைச் சட்டத்தில் 14 ஆண்டுகளுக்கு மேல் கைதிகளின் சிறைவாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம், 1978 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் ஆட்சியில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தபோது, இரு அவைகளிலும் எவரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில், நான் ஒருவன் மட்டுமே அதனைக் கடுமையாக எதிர்த்துப் பேசி என் கருத்துகளைப் பதிவு செய்து இருக்கின்றேன்.
மேலும், சிறைவாசிகளைப் பரோல் விடுப்பில் அனுப்புவது ஒரு மனிதாபிமான நடவடிக்கை ஆகும். குடும்பத்தினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது குடும்பத்தில் ஏற்படும் நற்காரியங்களில் பங்கு ஏற்கவோ, குடும்பத்தில் ஏற்படும் துயரச் சம்பவங்களில் அல்லது அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய அவசியம் கருதியோ பரோல் விடுப்பு தரப்படுகின்றது.
அப்படி விடுப்பில் செல்லும் சிறைவாசி, தவிர்க்க இயலாத காரணங்களால் குறிப்பிட்ட நாளில் சிறைக்குத் திரும்பி வர இயலாமல் ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்பட்டு விட்டால் கூட, இந்தியத் தண்டனைச் சட்டம் 224 பிரிவுகளின் கீழ் மேலும் தண்டிக்கப்படுகின்றனர். இதனால் பொது மன்னிப்பில் அவர்கள் விடுவிக்கப்படுவது கிடையாது.
வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு சிறைவாசி, நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தால் பரோல் விடுப்பு கிடையாது என்பதும், எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத மனிதாபிமானம் அற்ற நடவடிக்கை ஆகும். மேல் முறையீடு ஆண்டுக் கணக்கில் நீடித்துக் கொண்டே போகும்.
சிறைச்சாலை என்பது தண்டிக்கும் இடம் அல்ல. சீர்திருத்தும் இடம் என்ற கோட்பாட்டை உலகில் பல நாடுகள் ஏற்றுக் கொண்டு உள்ளன.
எனவே, சிறைவாசத்தில் திருந்திய மனிதர்களுக்கு மறுவாழ்வு அளிக்கின்ற வகையில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 109 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போரையும், பரோல் விடுப்பில் ஒரு சில நாள்கள் தவறியவர்களையும் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 31-08-2017 தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி