காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், தமிழகத்தின் உயிர் வாழ்வாதாரங்களில் தலையாயதான காவிரி நதிநீர் உரிமையைப் பாதுகாக்கவும், சட்ட விரோதமாகவும், நீதிக்குப் புறம்பாகவும் கர்நாடக மாநிலத்தில் மேகதாது தாதுமணலில் இரண்டு அணைகளைக் கட்ட முனைந்துவிட்ட கர்நாடக அரசின் வஞ்சகத் திட்டத்தை முற்றாகத் தடுத்து நிறுத்தவும், தஞ்சை மாவட்டத்திலும், சிவகங்கை மாவட்டத்திலும் நிலம், நீர், காற்றுமண்டலம் அனைத்திலும் பலத்த நாசம் விளைவிக்கும் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை தொடங்க விடாமல் தடுத்து நிறுத்தவும் தஞ்சையில் ஜனவரி 20 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், தமிழகத்தில் காவிரி உரிமைக்குப் போராடும் இயக்கங்கள், தமிழ் இன உணர்வு அமைப்புகள், வணிகர் சங்கங்கள், மீனவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புகள் பங்கேற்றுச் சிறப்பித்தன.
காவிரி நதிப் பிரச்சனையில் சட்டப்படி தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறை ஆணையத்தையும் அமைக்க வேண்டிய கடமையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
காவிரி நதிநீர் தாவாவின் மீது உச்ச நீதிமன்ற ஆணையின் பேரில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், 2007 ஆம் ஆண்டில் அளித்த இறுதித் தீர்ப்புக்கு முற்றிலும் எதிராக, கர்நாடக அரசு காவிரியில் மேகதாது, தாதுமணல் ஆகிய இடங்களில் இரண்டு புதிய அணைகளைக் கட்டவும், அவற்றில் 48 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கவும், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது, அந்தப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றிவிட்டு, அணைகளைக் கட்ட உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரி உள்ளது.
நாங்கள் அணை கட்டுவதை எவராலும் தடுக்க முடியாது என்று கர்நாடக அரசின் முதல் அமைச்சர் இறுமாப்போடு பேசுகிறார், மத்திய அரசு அனுமதி எப்படியும் கிடைக்கும் என்கிறது கர்நாடக அரசு, நடுவர் மன்றத் தீர்ப்பின்படி வேளாண்மை செய்யத்தான் அணை கட்டக் கூடாது என்பதால். மைசூரு, பெங்களூரு நகரங்களின் குடிநீர்த் தேவைகளுக்காகத்தான் அணைகளைக் கட்டுகிறோம் என்று அப்பட்டமாகப் பொய் சொல்கிறது. அத்துடன் கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய இடங்களில் புதிதாக நான்கு தடுப்பு அணைகளைக் கட்டவும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. இதன் முலம் நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக புதிதாக 11 இலட்சம் ஏக்கரில் காவிரி நீர்ப் பாசனத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றது.
தற்போதைய திட்டப்படி அணைகள் கட்டப்பட்டுவிட்டால், அதன் பிறகு சொட்டுத் தண்ணீர்கூட மேட்டூருக்கு வரப்போவது இல்லை, இதன் விளைவுகளைக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.
சென்னை மாநகரம் உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களிலும், புதுவை மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திலும் வாழும் 5 கோடி மக்கள் குடிதண்ணீரை இழப்பார்கள், 3 கோடி விவசாயிகள் வேளாண்மையை இழப்பார்கள். நன்செய் பொங்கிய தஞ்சைத் தரணி பஞ்சப் பிரதேசம் ஆகும். பசியும் பட்டினியும் மக்களை வாட்டி வதைக்கும். தமிழகத்தின் பெரும்பகுதி இன்னொரு எத்தியோபியாவாக மாறும்.
இந்தப் பிரச்சினையில்தான் கர்நாடகத்தைச் சேர்ந்தவரும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மிக நெருக்கமானவரும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவருமான மத்திய அமைச்சர் அனந்தகுமார் அவர்களின் டில்லி இல்லத்தில், டிசம்பர் மாதத்தில் இரண்டு நாட்கள் காவிரியில் புதிய அணைகள் கட்டுவது குறித்து ஒரு சதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கர்நாடக பாக்கு உற்பத்தியாளர்கள் அமைச்சருடன் சந்திப்பு என்று வெளி உலகிற்கு அறிவித்துவிட்டு நடைபெற்ற இச்சதிக் கூட்டத்தில், கர்நாடக மாநில எம்.பி.க்கள் மட்டும் அல்லாது, மத்திய சட்ட அமைச்சர் - கர்நாடகத்தைச் சேர்ந்த சதானந்த கவுடா அவர்களும், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களும் கலந்துகொண்டனர். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாநிலத்துக்கு எதிராக இதுபோன்ற அநீதியான நயவஞ்சமான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது இல்லை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குத் தெரிந்தேதான் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், புதிய அணைகள் கட்டுவதற்கான சுற்றுச் சூழல் அனுமதியும், மத்திய நீர்வள ஆணைய அனுமதியும் கொடுக்கப்போவது இல்லை என்று மத்திய அரசு வெளிப்படையாக ஒருபுறத்தில் அறிவித்துக் கொண்டே, மறுபுறத்தில் கர்நாடக அரசு அணைகள் கட்டுவதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது என்று முடிவு செய்து இருப்பதாகத் தெரிகிறது.
தமிழகத்திற்கு நேர இருக்கின்ற இப்பேராபத்தை முன்கூட்டியே தடுக்கவும், கட்சி, சாதி, மத எல்லைகளைக் கடந்து தமிழக மக்கள் ஒருசேர எழுந்து அறவழியில் போராட வேண்டும். கர்நாடகத்தில் காவிரிக்குக் குறுக்கே அணைகள் கட்டுவதை தடுக்க வேண்டிய கடமையை மத்திய அரசுக்கு உணர்த்தவும், தஞ்சைத் தரணியிலும். சிவகங்கைச் சீமையிலும் நிலம், நீர், காற்று மண்டலம் அனைத்தையும் நாசமாக்கி, விவசாயிகளுக்குப் பாசன நிலம் இல்லாமலும், பொதுமக்களுக்கு குடிதண்ணீர் இல்லாமலுமான பெரும் தீங்கான நிலையை ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு இருதயம், நுரையீரல், சரும நோய்களும், புற்று நோயும் ஏற்படுத்தக்கூடிய நாசகார மீத்தேன் எரிவாயுத் திட்டத்தைத் தொடங்க விடாமல் தடுக்க வேண்டிய கடமை தமிழக மக்களுக்கு உண்டு.
இன்றைய தமிழக அரசு 2011 இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், மீத்தேன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தது. இருந்தபோதிலும், மாண்புமிகு நரேந்திரமோடியின் மத்திய அரசு, மீத்தேன் திட்டத்தை நிறைவேற்றுவதில் மிகத் தீவிரம் காட்டுகிறது.
அமெரிக்காவில் நியூயார்க் மாநில ஆளுநர் ஆண்ட்ரு க்வோமா அவர்கள், மீத்தேன் எரிவாயுத் திட்டம் சுற்றுச் சூழலை நச்சுமயமாக்கும் என்பதால் நியூயார்க் மாநிலம் முழுவதிலும் அத்திட்டத்திற்கு தடை விதித்து, அண்மையில் 2014 டிசம்பர் 17 ஆம் தேதி அன்று பிரகடனமே செய்துவிட்டார். உலகில் பல்வேறு நாடுகளில் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.
‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்’ என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறட்பா, வரப்போகிற ஆபத்தை முன்கூட்டியே தடுப்பதுதான் அறிவுடைமை; இல்லையேல், நெருப்பில் சிக்கிய வைக்கோல்போல் அழியும் ஆபத்து நேரும் என்று எச்சரிக்கின்றது.
எனவே, தமிழகத்தைச் சூழ்ந்து வரும் பேராபத்தைத் தடுத்து தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காத்து, வாழும் தலைமுறையினரையும், வரப்போகும் தலைமுறையினரையும் பாதுகாக்க தமிழக மக்கள் சூளுரைக்க வேண்டிய தருணம் இதுவாகும். காவிரிக்குக் குறுக்கே மேகதாட்டு தாதுமணலில் கர்நாடக அரசு கட்ட முனைந்துவிட்ட அணைகளைக் கட்ட விடாமல் தடுக்க வேண்டிய முழுப் பொறுப்பும் இந்தியாவின் மத்திய அரசுக்கு உண்டு என்பதால், அந்தக் கடமையைச் செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தவும், நாசகார மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை தஞ்சை மாவட்டத்திலும், சிவகங்கை மாவட்டத்திலும் செயல்படுத்தும் முடிவை மத்திய அரசு இரத்து செய்யுமாறு வலியுறுத்தியும், பிப்ரவரி 18 ஆம் நாள் அன்று சென்னை மாநகரம் தவிர்த்து காவிரி நதி நீரால் பயன்பெறும் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய தமிழகத்தின் 13 மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் இயங்குவதைத் தடுத்து, அறவழி முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
அதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று மார்ச் 11 ஆம் நாள் புதன் கிழமை தலைநகர் சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சென்னை சுங்க இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இந்த அறப்போராட்டத்தில், காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வைகோ, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், பி.ஆர்.பாண்டியன், லெனின் ராஜப்பா, டாடக்டர் மாசிலாமணி, மல்லை சத்யா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, தி.வேல்முருகன், திருஞானம், தெகலான் பாகாவி, த.வெள்ளையன், பெ.மணியரசன், பசீர் அகமது, தியாகு, அருள்குமார் உள்ளிட்ட தலைவர்களும், இருநூறுக்கு மேற்பட்ட அமைப்புகளும் பங்குகொண்டன.
இந்த முற்றுகை அறப்போர் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை பல கட்டங்களாக நடைபெற்றது.
No comments:
Post a Comment