உலகப் புராதனச் சின்னங்களான தமிழகத்தின் இரண்டு நகரங்களுள் முதன்மையான மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு 6 கோடியே 8 இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் தயார் செய்து, 29.09.2007 அன்று ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, திட்டப் பணிகள் 28.11.2012க்குள்முடித்துக் கொடுக்க ஒப்புக்கொண்டு பணிகள் தொடங்கின.
தரமற்ற குழாய்களைப் பதித்தனர்; அதன்பிறகும், இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதவில்லை என்று மறுகூட்டுத் திட்ட மதிப்பீடு செய்தனர். கூடுதலாக 2 கோடியே 64 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் முடிந்ததாகச் சொல்லப்படும் நிலையில், மக்களின் பயன்பாட்டுக்கு இன்று வரும், நாளை வரும் என்று வருடங்கள் கடந்துகொண்டே செல்கிறது.
ஆனால், 8 கோடியே 72 இலட்சம் ரூபாய் திட்டத்திற்குப் பெறப்பட்ட பணத்துக்கு தவணை ஒன்றுக்கு 8 இலட்சம் ரூபாய் வீதம் மாமல்லபுரம் மக்களின் வரிப்பணம் வீணாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.
எனவே பாதாள சாக்கடைத் திட்டத்தின் இன்றைய உண்மையான நிலை என்ன? இத்திட்டம் மக்களின் பயன்பாட்டுக்கு வருமா? அல்லது தில்லு முல்லு முறைகேடுகள் நடந்து இத்திட்டம் தோல்வியில் முடிந்துவிட்டதா? என்பதனை சம்மந்தப்பட்ட துறையினர் மக்கள் மன்றத்துக்கு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
முறைகேடு நடந்து இருந்தால் அதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி பாதாள சாக்கடைத் திட்டம் உடனடியாகப் பயன்பாட்டுக்கு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண்டிகை மற்றும் திருவிழா காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் மாமல்லபுரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுட்டு பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகள் விழிபிதுங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது.
மாமல்லபுரம் பேரூராட்சி எல்லைக்கு உள்ளேயே இருக்கும் பூஞ்சேரி, பவளக்காரசத்திரம், பகுதியில் இருந்து, புராதனச் சின்னங்கள் அமைந்து இருக்கின்ற பகுதிக்குச் செல்லும் அரை கிலோ மீட்டர் கிழக்குக் கடற்கரைச் சாலையைக் கடப்பதற்கு, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் (கூசூசுனுஊ) சிறிய வாகனம் ஒன்று சென்று வர சுங்க வரி 45 ரூபாய் வசூலிக்கின்றது; அடுத்த அரை கிலோ மீட்டர் தூரத்தில் பேரூராட்சியின் சார்பில் வாகன நுழைவு வரி 40 ரூபாயும், அடுத்த அரை கிலோ மீட்டரில் பேரூராட்சி வாகன நிறுத்தக் கட்டணம் 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது; அடுத்த 10 அடி தூரத்தில் புராதன சின்னங்களைப் பார்வையிட மத்திய தொல்லியல்துறை நபர் ஒன்றுக்கு இந்தியர்களுக்கு 10 ரூபாய் கட்டணமும், வெளிநாட்டு பயணிகளுக்கு 250 ரூபாயும் வசூலிக்கின்றது.
இவ்வாறு இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் நான்கு இடங்களில் வரி வசூல் செய்வதால், மாமல்லபுரத்துக்கு ஏன் வந்தோம் என சுற்றுலாப் பயணிகள் மனம் வருந்தும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய செயல் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவிற்கும், அன்னியச் செலாவணி இழப்பிற்கும் காரணமாகி விடும்.
எனவே, தமிழக அரசும், சுற்றுலாத் துறையும், மாவட்ட நிர்வாகமும் வரிவசூலை முறைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் வசூலிப்பதை இரத்து செய்ய வேண்டும்;
பேரூராட்சி சார்பில் இரண்டு இடத்தில் ஒப்பந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதை ஒன்றாக மாற்றி அமைக்க வேண்டும்;
இரட்டைக் குட்டைப் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக அப்பகுதியில் குடியிருந்த சுமார் 50 ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களை அவகாசம் இன்றி காவல்துறையின் உதவியுடன் அவசர கதியில் செங்கல்பட்டு வட்டாட்சியர் தலைமையில் 2012 ஆம் ஆண்டு அப்புறப்படுத்தி கையகப்படுத்திய நிலத்தில் மூன்று ஆண்டுகளாகியும் அமைக்கப்படாத பேருந்து நிலையத்தை உடனே அமைக்க வேண்டும்;
மாமல்லபுரம் பேரூராட்சி 13 ஆவது வார்டு அண்ணா நகர் புலன் எண் 160/2 கிராம நத்தத்தில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் மக்களுக்குப் பட்டா வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment