எங்கள் தலைவனுக்கு ஏளனமும், இருட்டடிப்புகளும் மன பக்குவத்தையும், தைரியத்தையும் மட்டுமே கொடுக்கிறது என சில விபச்சாரி ஊடகங்களுக்கு இன்னுமா புரியவில்லை...
இதோ புரட்சி புயலின், ஆனந்தவிகடன் பேட்டி... "நான் எதையும் இழக்கவில்லை!” என...
நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில் வழக்கறிஞர், விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய வழக்கில் குற்றவாளி, நீதிமன்றத்தில் இரு துருவப் பாத்திரங்களையும் வகித்துவிட்டு, இரவே டெல்லி கிளம்பினார் வைகோ. நில அபகரிப்புச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட வைகோ, வட இந்தியத் தலைவர்களை வரிசைகட்டிப் பார்த்தார். 'என்ன திடீர் பரபரப்பு?’ எனக் கேட்டுப் போனால்... ஏகப்பட்ட விஷயங்களை ஷேர் செய்கிறார் வைகோ.
''மேதா பட்கர் கடந்த மாதம் சென்னை வந்திருந்தபோது, நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து ம.தி.மு.க நடத்தும் போராட்டங்களுக்கு அவரிடம் ஆதரவு கேட்டேன். 'நிச்சயம் ஆதரிக்கிறேன்’ என்ற மேதா, டெல்லியில் நில அபகரிப்புச் சட்டத்தை எதிர்த்து 'மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு’ நடத்தும் போராட்டத்தில் கலந்துகொள்ள அழைத்தார். அதனால், டெல்லி போராட்டத்தில் ம.தி.மு.க தொண்டர்களுடன் கலந்துகொண்டு தரையில் அமர்ந்தேன். 'தரையில் அமரச் செய்வதற்காகவா உங்களை இவ்வளவு தூரம் அழைத்தேன்?’ என என்னை மேடைக்கு அழைத்தார் மேதா பட்கர். அதே நாளில் இதே நில அபகரிப்புச் சட்டத்தை எதிர்த்து, டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு போராட்டத்தை நடத்திய அண்ணா ஹஜாரே, திடீரென மதியத்துக்கு மேல் கிளம்பிவந்து எங்கள் மேடையில் அமர்ந்தார். அவர் இருந்த மேடைக்கு நான் போகவில்லை. நான் இருந்த மேடைக்குத்தான் அவர் வந்து இணைந்துகொண்டார். இதை ஆங்கில ஊடகம் 'அரசியலில் ஓரம் கட்டப்பட்ட வைகோ, ஊர் ஊராகச் சென்று பிரபலத் தலைவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறார்’ எனக் கிண்டலடித்து விஷமப் பிரசாரம் செய்தன. அதைக் கடுமையாக எதிர்த்து நான் அறிக்கை கொடுத்தேன். ஆனால், அதை அவர்கள் யாரும் வெளியிடவில்லை.''
''டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்துப் பேசினீர்களே... தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் இருக்கிறதா?''
''அப்படி ஒரு சிந்தனையே இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் என்ற அந்த மனிதனின் எளிமை என்னை எப்போதும் கவர்ந்த விஷயம். மேதா பட்கர் நடத்திய போராட்டத்துக்கு அவரும் வந்திருந்தார். ஆனால், 'அரசியல்வாதிகள் யாரும் மேடைக்கு வரக் கூடாது’ என அண்ணா ஹஜாரே சொல்லியிருந்ததால், கெஜ்ரிவால் மேடைக்கு வரவில்லை. உடனடியாக நான் அண்ணா ஹஜாரேவிடம், 'அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த காலங்களில் உங்கள் நிழலில் வளர்ந்தவராக இருக்கலாம். ஆனால், இப்போது அவருக்கு டெல்லி மக்கள் தங்கள் மாநில முதலமைச்சராக மகுடம் சூட்டியுள்ளனர். அவரைத் தரையில் அமரவைப்பது சரி அல்ல...’ என்றேன். புரிந்துகொண்ட அண்ணா ஹஜாரே, அதை ஆமோதிப்பதுபோல் தலைஆட்டினார். 'அண்ணா ஹஜாரே சார்பில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை மேடைக்கு அழைக்கிறேன்’ என நான் ஒலிபெருக்கியில் அறிவித்தேன். அதன் பிறகே கெஜ்ரிவால் மேடைக்கு வந்தார். அப்போது அவர் என்னை வீட்டில் வந்து சந்திக்கச் சொன்னார். அதனால் கெஜ்ரிவாலை அவருடைய வீட்டில் சந்தித்தேன். 'ஈழத்தில் இனப்படுகொலை... இதயத்தில் ரத்தம்’ என்ற என் புத்தகத்தையும் குறுந்தகடையும் கொடுத்தேன். அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள உற்சாகப்படுத்தவே, அவரைச் சந்தித்தேன். மற்றபடி ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன். ஏனென்றால், தமிழ்நாட்டில் சில பயலுகள் தான்தான் கெஜ்ரிவால் என அலைந்து கொண்டிருக்கிறார்கள்.''
''முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்திருக்கிறீர்களே..?''
''மன்மோகன் சிங் இந்தியப் பிரதமராகக் கொண்டுவந்த திட்டங்கள் பலவற்றை நான் கடுமையாக விமர்சித்துள்ளேன். ஆனால், மன்மோகன் சிங் என்ற மனிதர் மீது எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு. நான் பொருளாதாரம் படித்தவன். அப்போது என்னுடைய பேராசிரியர்கள், மன்மோகன் சிங் பற்றி மிக உயர்வாகச் சொல்வார்கள். 'அவர் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது, பேருந்தில் தான் பயணம் செய்வார். அவர் கல்லூரிப் பேராசிரியராக இருந்தபோது, மாணவர்களை சைக்கிள் கேரியரில் வைத்து அழைத்துச்செல்வார்’ என்பார்கள். அப்போது முதலே அவர் எனக்கு ஆதர்சம். அதனால் அவரைச் சந்தித்தேன். 'இலங்கையில் இப்போது என்ன நடக்கிறது?’ என என்னிடம் கேட்டார். 'கொடுமைகள் இன்னும் அதிகரித்துள்ளன’ என்றேன்!''
''லாலுபிரசாத் யாதவுடனான சந்திப்பு?''
''லாலு பிரசாத் யாதவ் வசிக்கும் 'சகுந்தலா பண்ணை’ வீட்டுக்குப் போனேன். அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு, 'இவர்தான் நமக்கு வருடா வருடம் பட்டாசுகள் அனுப்பிவைக்கும் தலைவர்’ என அறிமுகம் செய்துவைத்தார். பிறகு, ராம் ஜெத்மலானி, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் பிஸ்வாஸ் இருவரையும் சந்தித்தேன். திகார் சிறையில் இருக்கும் ஓம்பிரகாஷ் சௌதாலா எனக்கு நல்ல நண்பர். அவர் பெரிய குற்றம் எதுவும் இழைத்துவிடவில்லை. ஆசிரியர்கள் நியமனத்தில், அவருடைய கட்சிக்காரர்கள் சிலருக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டார். அவ்வளவுதான். லட்சங்கள், கோடிகளில் கொள்ளையடித்தவர்கள் வசதியாக வாழ, இவரை சிறையில் அடைத்துள்ளனர். திகார் சிறையில் எட்டு சிறைகள் இருக்கின்றன. அதன் மொத்தப் பாதுகாப்பும் அங்கு பணியில் இருக்கும் 12,000 தமிழர்களின் கையில் இருக்கிறது.''
''நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என விரும்பி, அந்தக் கூட்டணியில் இடம்பெற்று, அதற்காகப் பிரசாரம் செய்தீர்கள். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி எப்படி இருக்கிறது?''
'' கார்ப்பரேட் கம்பெனிகளால், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக நடக்கும் கார்ப்பரேட் கம்பெனி அரசாங்கம்தான் இந்த நரேந்திர மோடி அரசு. இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ள நில அபகரிப்புச் சட்டத்தைப் போன்ற
ஒரு கொடுமையான சட்டத்தை, நாடு பிடிக்கவந்த பிரிட்டிஷ்காரன்கூட கொண்டுவந்தது இல்லை. இதுபற்றி இன்னும் மக்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. மக்களுக்குத் தெரியவரும்போது, அவர்கள் எரிமலையாக வெடிப்பார்கள். நிலத்தை அபகரிக்கும் இந்தச் சட்டத்தின் மூலம், ஒரு வழிப்பறிக்காரனின் வேலையை மோடி அரசாங்கம் செய்துள்ளது. நரேந்திர மோடி அரசைப்போல மிக மோசமான அரசை இந்தியா இதுவரை சந்தித்தது இல்லை. அதை மக்கள் புரிந்துகொண்டுவிட்டனர். அதனால்தான், டெல்லி சட்டமன்றத் தேர்தலில், அந்த மக்கள் விளக்குமாற்றால் கூட்டிப்பெருக்கி பாரதிய ஜனதாவை வரலாற்றுக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர்.''
''ஈழப் பிரச்னையிலேனும் மோடி அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறியிருக்கிறதா?''
''கொஞ்சம் மாறி இருக்கிறது. முன்பைவிட கொஞ்சம் கூடுதலாகத் துரோகம் செய்கிறார்கள். அதுதான் அந்த மாற்றம்! புதிதாக வந்த சிறிசேன அரசோடு சேர்ந்துகொண்டு இந்த மோடி அரசாங்கம் செய்யும் பச்சைத் துரோகத்துக்கு உதாரணம்தான், இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி, ஐ.நா சமர்ப்பிக்கும் அறிக்கையை ஆறு மாதங்கள் ஒத்திப்போட்ட விவகாரம்.''
''மோடியை ஆதரித்ததற்காக இப்போது வருத்தப்படுகிறீர்களா?''
''நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? முஸ்லீம்கள் எதிர்ப்பதற்கு முன்பே, கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பதற்கு முன்பே மோடியை நான் எதிர்த்தேன். நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்ஷே வருவதை எதிர்த்து சாஞ்சிக்குச் சென்று போராடினேன். அப்போது என்னைக் கைதுசெய்து நாடாளுமன்றச் சிறைச்சாலையில், பகத் சிங் அடைக்கப்பட்டு இருந்த அறையில் அடைத்தனர். எந்த மோடிக்காக நான் பிரசாரம் செய்தேனோ, அவர் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டிருந்தபோது, அதே நாடாளுமன்றத்தின் சிறைச்சாலையில் நான் அடைக்கப்பட்டிருந்தேன். அதனால், இதில் ஒன்றும் எனக்கு வருத்தம் இல்லை. நான் என் கடமையில் சரியாக இருக்கிறேன்.''
''தொடர்ந்து பயணம் செய்கிறீர்கள். பயணத்தின் மீது அவ்வளவு ஆர்வமா?''
''பயணத்தின் மீது ஆர்வம் என ஒன்றும் கிடையாது. அது என்னுடைய கடமை. அலைந்துதான் ஆக வேண்டும். ஒரு நாளைக்கு சராசரியாக 300 கி.மீ சுற்றவேண்டும். தி.மு.க-வில் இருந்தபோதும் அலைந்துகொண்டே இருப்பேன். என் டிரைவர் துரையின் கணக்குப்படி இதுவரை காரில் 85 லட்சம் கி.மீ அலைந்துள்ளேன். இந்தப் பிரயாணங்கள் மக்களைச் சந்திப்பதற்காக. நடைப்பயணம் எனப் பார்த்தால், 5,000 கி.மீ நடந்துள்ளேன். அதனால்தான் கட்சி இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.''
''நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்? ஆனால், தேர்தலுக்குத் தேர்தல் உங்கள் வாக்கு வங்கி குறைந்துகொண்டே வருகிறதே?''
''எது வாக்கு வங்கி? தி.மு.க. - அதி.மு.க இரண்டு கட்சிகளுக்கும் வாக்கு வங்கி இருக்கிறது என்கிறார்கள். ஆனால், அவர்கள் காசு கொடுத்துத்தான் வாக்குகள் வாங்கி ஜெயிக்கிறார்கள். அதுபற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், இத்தனை தோல்விகளுக்குப் பிறகும், எங்கள் கட்சி உயிர்ப்புடன் இருக்கிறது. முன்பைவிட வலுவாக இருக்கிறோம். ஜெயிக்காமல் அதிகாரத்துக்கு வராமல் இருந்தாலும், இன்னும் கட்சியின் தணல் கொஞ்சம்கூட அணையாமல் இருக்கிறது. மக்கள் பார்வை எங்கள் பக்கம் திரும்பி உள்ளது. விவசாயிகள் பிரச்னை, நியூட்ரினோ எதிர்ப்பு, பூரண மதுவிலக்கு, மாரத்தான் போட்டி, அணு உலை எதிர்ப்பு... என அனைத்து விவகாரங்களிலும் மக்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். தி.மு.க-வின் பக்கமோ அ.தி.மு.க-வின் பக்கமோ இல்லை.''
''முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''ஜெயலலிதா முதலமைச்சர் நாற்காலியில்தான் இல்லை. ஆனால், அவருடைய ஆட்சிதான் நடக்கிறது. அரசாங்கம் அவருடைய பெயரில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. பன்னீர்செல்வம் அறவே செயல்படவில்லை. தமிழக அரசைப் பொறுத்தவரை வனக் கல்லூரி மாணவர் போராட்டத்தை அணுகிய விவகாரம் மனிதாபிமானமற்ற செயல். மீத்தேன் திட்டமும் நியூட்ரினோவும் கூடவே கூடாது என்ற முடிவை இந்த அரசாங்கம் எடுக்க வேண்டும்.''
''அடுத்த தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி யாரோடு?''
''தி.மு.க - அ.திமு.க இரண்டு கட்சிகளும் எங்களை அழிக்கப் பார்த்தவை என்பது கடந்த கால நிகழ்வுகளில் தெளிவாகப் புரிந்துவிட்டது. நாங்கள் சட்டமன்றத்துக்குள்ளேயே நுழையக் கூடாது என நினைப்பவர்களுடன் எப்படி இனி கூட்டணி வைக்க முடியும்?''
''50 வருட அரசியல் வாழ்வில் நீங்கள் பெற்றது என்ன... இழந்தது என்ன?''
''லட்சியங்களுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் போராடுவதில் மனதில் ஒரு சுகம் இருக்கிறது. இதில் இழப்பதற்கு எதுவும் இல்லை!''
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment