மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 25-ஆவது பொதுக்குழு, இன்று 26.02.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு, கோவை - 641 045, வரதராஜபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில், உப்பிலிபாளையம் மெயின் ரோடு, எண். 63 -இல் அமைந்துள்ள ஸ்ரீ சாய் திருமண மஹாலில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...
தீர்மானம்-1:-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிரப்பப்பட வேண்டிய பொறுப்புகளுக்காகத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்ப மனுக்கள் 06.02.2017 அன்று பெறப்பட்டன. போட்டியில் இருந்து விலகிக்கொள்ள 08.02.2017 மாலை 3 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதுவரையிலும் தாக்கல் செய்யப்பட்டு இருந்த விண்ணப்ப மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அறிவிக்கப்பட்டு இருந்த பொறுப்புகளுக்குப் போட்டி எதுவும் இல்லாததால், கழகப் பொருளாளராக திரு அ.கணேசமூர்த்தி, கழகத் துணைப் பொதுச்செயலாளராக திரு ஏ.கே.மணி, ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களாக திரு டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், டாக்டர் க.சந்திரசேகரன், மு.பூமிநாதன், க.ஜெய்சங்கர் ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்குக் கழகப் பொதுக்குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
தீர்மானம்-2:-
தமிழ்நாட்டில் பல்வேறு நீர்நிலைகள், கண்மாய்கள், ஆற்றுப் படுகைகள் மற்றும் தரிசு நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பற்றிப் படர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களால் நீர்வளம், நிலவளம் அழிந்து சுற்றுச் சூழல் வெகுவாகக் கெடுகின்றது.
எனவே, அம்மரங்களை அடியோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பிற துறைகளின் செயலாளர்களுக்கு 08.08.2015 அன்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கடிதம் எழுதினார்.
தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால், செப்டம்பர் 9, 2015 இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வைகோ ரிட் மனு தாக்கல் செய்து, சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து ஒன்றரை ஆண்டுக்காலம் பல்வேறு அமர்வுகளில் தமது கோரிக்கையை வலியுறுத்தி வந்தார்.
2017 ஜனவரி 10 ஆம் தேதியன்று மாண்பமை நிதிபதிகள் செல்வம், கலையரசன் அமர்வில் நடந்த விசாரணையில், தமிழகத்தின் 13 தென் மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் அந்தப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐந்து வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவையும் அமைத்தது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள மற்ற 19 மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அடியோடு வெட்டி அகற்ற ஆணை பிறப்பிக்கக் கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிப்ரவரி 10, 2017 இல் அதற்கான உத்தரவையும் பிறப்பித்து, 19 மாவட்ட ஆட்சியர்களுக்குத் தாக்கீது அனுப்பி உள்ளது.
தமிழகத்தின் நிலவளம், நீர்வளம், மற்றும் சுற்றுச் சூழலைக் காக்கின்ற வகையில், தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக, நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி கண்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இப்பொதுக்குழு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.
இந்தப் பணியைச் செய்து முடித்திடத் தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்களும், மாணவர்களும் ஒரு மக்கள் இயக்கமாக அணிதிரண்டு களத்தில் இறங்க வேண்டுமெனக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று, சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் தமிழக இளைஞர்களும், மாணவர்களும் தங்களை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்டு, வருங்காலத் தமிழகத்தை வளமாக்கிட வேண்டும் என இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கின்றது.
தீர்மானம்-3:-
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் வாழ்வாதரமாக விளங்கும் பவானி ஆற்றின் குறுக்கே, தேக்குவட்டை, மஞ்சக்கண்டி ஆகிய இடங்களில் தடுப்பு அணைகளைக் கட்டும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. மேலும் பாடவயல், சீரக்கடவு, சாவடியூர், சாலையூர் ஆகிய இடங்களிலும் அணைக் கட்டத் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 2003 ஆம் ஆண்டு பவானி ஆற்றின் குறுக்கே முக்காலி என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பு அணை கட்ட முயன்றபோது, தமிழக மக்களின் போராட்டத்தாலும், மத்திய அரசின் சுற்றுச் சூழல் அனுமதி கிடைக்காததாலும் அந்த முயற்சியைக் கைவிட்டது.
அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு ‘அட்டப்பாடி பள்ளத்தாக்கு நீர்ப்பாசனத் திட்டம்’ என்ற பெயரில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே பெரிய அணையைக் கட்டி அதன் மூலம் ஆண்டுக்கு 4.5 டி.எம்.சி. தண்ணீர் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தது.
2016 ஆம் ஆண்டு, இத்திட்டத்திற்கான சுற்றுச் சூழல் ஆய்வு அனுமதியையும் மத்திய அரசு வழங்கியது.
தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் மத்திய அரசு கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. எனவே, இந்தத் திட்டத்தைக் கேரள மாநிலம் நிறுத்தி வைத்துள்ளது.
ஆனால், தற்போது பவானி ஆற்றின் குறுக்கே பல தடுப்பு அணைகளைக் கட்ட கேரள அரசு முற்பட்டுள்ளது.
சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டதால், கோவை மாநகரின் குடிநீர் தேவைக்கு பவானி தண்ணீர்தான் பில்லூர் திட்டத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பவானி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பு அணைகள் அமைக்கப்பட்டால், பில்லூர் திட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுவதுடன் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வேளாண்மைக்கும், குடிநீருக்கும் நீரின்றி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றபோது, கேரள மாநில அரசு பவானியின் குறுக்கே அணைகள் கட்ட முயற்சிப்பது சட்ட விரோதம் ஆகும். எனவே, அத்தகைய கட்டுமான முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமென மத்திய - மாநில அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம்-4:-
திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 60 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கும், 30 கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் பல இலட்சம் மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் அமராவதி அணைக்கு, பாம்பாற்றின் மூலமாகத்தான் தண்ணீர் கிடைக்கின்றது.
இப்போது, பாம்பாற்றின் குறுக்கேயும் கேரள அரசு அணை கட்டும் பணியினைத் தொடங்கி இருக்கின்றது.
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின் சில பகுதிகளை எதிர்த்துத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. மேலும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு இதுவரையில் அமைக்கவில்லை. இந்நிலையில், காவிரியின் துணை ஆறுகளில் எந்த நீர்ப்பாசனத் திட்டங்களையும் தமிழக அரசின் அனுமதி இல்லாமலும், மத்திய அரசின் சுற்றுச் சூழல் அனுமதி இன்றியும் தொடங்கக்கூடாது.
ஆனால் கேரள மாநிலம், சட்ட நியதிகளை எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, பாம்பாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டி, அதன் மூலம் இரண்டு டி.எம்.சி. நீரை தேக்குவதற்காக இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றது.
அமராவதி அணையின் மொத்தக் கொள்ளளவு 4 டி.எம்.சி. தான். தடுப்பு அணை அமைக்கப்பட்டால் திருப்பூர், கரூர் மாவட்டங்கள் முற்றாக வாழ்வாதாரங்களை இழக்கும் நிலைமை ஏற்பட்டுவிடும். எனவே, மத்திய அரசு கேரள மாநிலத்தின் வஞ்சக முயற்சிகளைத் தடுத்து நிறுத்துகின்ற வகையில், பாம்பாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதைத் தடை செய்ய வேண்டும். தமிழக அரசு இதில் மெத்தனம் காட்டாமல் விரைந்து செயல்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம்-5:-
கோவை, திருப்பூர், ஈரோடு அகிய மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளுக்கு பவானி ஆற்றின் உபரித் தண்ணீரைக் கொண்டு வருவதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் தீட்டப்பெற்று நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தியும் மாநில அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆர்வம் காட்டவில்லை.
கடந்த 2015 ஆம் ஆண்டு, இப்பகுதி மக்கள் தன்னெழுச்சியான போராட்டங்களை நடத்தியபோது, தமிழக அரசு அளித்த வாக்குறுதி காற்றில் கரைந்து விட்டது.
எனவே, தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை உடனே தொடங்க வேண்டும் என்று பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம்-6:-
1958 ஆம் ஆண்டு கேரள அரசுடன் ஏற்பட்ட ஒப்பந்தப்படி கேரள மாநிலம் இடைமலை ஆற்றில் அணைகட்டி முடித்தவுடன், தமிழக அரசு ஆனைமலை ஆறு, நல்லாறு திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி கேரள மாநிலம் இடைமலை ஆற்றில் அணையைக் கட்டி முடித்துவிட்டது. எனவே, தமிழக அரசு ஆனைமலை ஆறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றிட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.
தீர்மானம்-7:-
தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பு அணைகள் கட்டுவதற்குக் கர்நாடக மாநில அரசு 5912 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் தடுப்பு அணைகள் மூலம் 66 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம் அமைத்து, குடிநீருக்கும், பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பாசனத் திட்டங்களுக்கும் பயன்படுத்தக் கர்நாடக அரசு திட்டமிடுகின்றது.
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட மறுத்துவிட்ட கர்நாடகம், இப்போது காவிரியின் குறுக்கே புதிய தடுப்பு அணைகள் அமைக்க முயற்சிப்பது சட்ட மீறல் மட்டும் அன்றி, இந்திய ஒற்றுமைக்கே வேட்டு வைக்கும் செயல் ஆகும்.
கர்நாடக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு துணை போவது தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.
எனவே, மத்திய அரசு இனியும் பாரபட்சம் காட்டாமல், காவிரி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பு அணைகள் கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும்; சுற்றுச் சூழல் வனத்துறை அனுமதி வழங்கக் கூடாது. இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் சட்டப்படியான நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, கர்நாடக அரசின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம்-8:-
தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த, 2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க. அரசு அனுமதி வழங்கியது.
பசுமை வளம் கொழிக்கும் சோழமண்டல நிலங்களைப் பாழ்படுத்தி, நிலத்தடி நீரை நஞ்சாக்கி, சுற்றுச் சூழலையும் நாசமாக்கி, வேளாண் தொழிலையே அழிக்கும் நாசகார மீத்தேன் திட்டத்தை எதிர்த்து, விவசாயிகளும், பொதுமக்களும் பல கட்டப் போராட்டங்களை நடத்தினர்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முழுமையும் காவிரி டெல்டா மாவட்டங்களில் விழிப்பு உணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டு, மீத்தேன் திட்டத்திற்கு எதிராக மாபெரும் மக்கள் சக்தியைத் திரட்டினார். தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்திலும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக வாதாடினார்.
பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட நிபுணர் குழு, மீத்தேன் திட்டத்தைப் பற்றி ஆராய்ந்து அளித்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு மீத்தேன் திட்டத்திற்கான அனுமதியை இரத்து செய்தது.
தமிழக மக்களின் கொந்தளிப்பால் பின்வாங்கிய மத்திய அரசு மீத்தேன் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில்தான், மீத்தேன் திட்டத்தையே ஹைட்ரோ கார்பன் என்ற புதிய பெயரில் செயல்படுத்த மத்திய அரசு பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஆய்வு அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது.
பல இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களைப் பாழ்படுத்தியும், நிலத்தடி நீரை நஞ்சாக்கவும் வகை செய்யும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது
.
தீர்மானம்-9:-
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில், பவானி ஆற்றில் இருந்து கேரளாவுக்கு 6 டி.எம்.சி. தண்ணீரும், அமராவதி ஆற்றில் இருந்து 3 டி.எம்.சி. தண்ணீரும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இது தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. பருவமழை பொய்த்ததாலும், அண்டை மாநிலங்களின் வஞ்சக நடவடிக்கைகளாலும் போதிய தண்ணீர் இன்றி, விவசாயமும், குடிநீர் ஆதாரங்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றன.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் சில பகுதிகளை எதிர்த்துத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவில், மேற்கண்ட உத்தரவையும் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம்-10:-
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்திட, உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை ஏற்று மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுச் குழு ஆகிய அமைப்புகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம்-11:-
தமிழகத்தில் பருத்தி விளைச்சல் குறைந்ததால், பஞ்சு ஆலைகளுக்குத் தேவையான பஞ்சு கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்றது. எனவே, பஞ்சு விலை கடுமையாக உயர்ந்து இருக்கின்றது. அதனால் நூல் உற்பத்திச் செலவு அதிகமாகியுள்ள நிலையில், அதற்கு ஏற்ற விலை சந்தையில் கிடைக்கவில்லை. எனவே, தமிழகத்தில் நூற்பு ஆலைகள் நாளுக்குநாள் வெகுவாக நலிவு அடைந்து, நிரந்தரமாக மூடுகின்ற அவல நிலைமை ஏற்பட்டு உள்ளது. அதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு மூடப்பட்ட பஞ்சு ஆலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு தர வேண்டிய மறுவாழ்வு உதவித் தொகை, பல ஆண்டுகளாகியும் வழங்கப்படவில்லை.
அந்த உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும்; நூற்பு ஆலைகளுக்குத் தேவையான பஞ்சு கிடைப்பதற்கு ஆவன செய்வதுடன், மூடிக் கிடக்கின்ற நூற்பு ஆலைகளைத் திறப்பதற்கும் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம்-12:-
அயல்நாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல், குறைந்த சம்பளத்தில் அதிக நேரம் வேலை வாங்குகின்றார்கள். தொழிலாளர் நலச் சட்டப்படித் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய எந்தச் சலுகைகள், பலன்களையும் வழங்குவது இல்லை. சட்டப்படியான பாதுகாப்பும், உரிமைகளும் வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், தொழிற்சாலையை மூடி விடுகின்றார்கள். அதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வேலை இழந்துள்ளனர்.
இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் தவிர்க்கின்ற வகையில், அயல்நாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கும்போதே, தொழிலாளர்களுக்குச் சட்டப்படியான பாதுகாப்பும், உரிமைகளுக்கும், வாழ்க்கைச் சம்பளமும் வழங்கப்படுவதற்கான உத்தரவாதத்தை மத்திய,மாநில அரசுகள் பெற்றுத் தர வேண்டும் என இப்பொழுதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம்-13:-
பருவ மழை பொய்த்ததாலும், அண்டை மாநிலங்கள் வஞ்சித்ததாலும், தமிழ்நாட்டின் ஆறுகள் வறண்டுவிட்டன. போதுமான தண்ணீர் இன்றிப் பயிர்கள் காய்ந்து கருகியதால் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு உயிர் இழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணப் பலன்கள் இரண்டு ஹெக்டேருக்கு அதாவது ஐந்து ஏக்கருக்குக் கீழே உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து விவசாயிகளும் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசு, ஐந்து ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்குத்தான் வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்ற உச்சவரம்பைத் தளர்த்தி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சம் இன்றி வறட்சி நிவாரண நிதி உள்ளிட்ட பயன்கள் வழங்க வகை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம்-14:-
விவசாயிகள் பெற்றுள்ள குறுகிய காலப் பயிர்க் கடன்களை மத்திய காலக் கடன்களாக மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்து இருப்பது, எந்த வகையிலும் விவசாயிகளுக்குப் பயன் அளிக்காது. கடும் வறட்சியால் சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கின்ற நிலையில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது. எனவே, கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் அனைத்தையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம்-15:-
இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு 2000 ஆண்டுக்குப் பின்னர் இதுவரையிலும் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை.
ரூ. 50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் முன்பணம் செலுத்தி விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கும் 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரையிலும் மின் இணைப்பு வழங்கவில்லை.
ஆனால், விவசாயிகள் வணிகப் பயன்பாடு என்ற அடிப்படையில் விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படுகின்றது.
ஏனெனில் இவர்கள் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்காமல் அலைக்கழிக்கும் அரசு, மின் கட்டணம் செலுத்த ஒப்புக்கொண்டால் உடனே மின் இணைப்பு வழங்குகின்றது. இந்த நடைமுறையைக் கைவிட்டு அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் உடனடியாக வழங்கிடத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.
தீர்மானம்-16:-
கரும்பு விவசாயிகளின் தொடர் போராட்டங்களைத் தமிழக அரசு அலட்சியப்படுத்தி வருகின்றது. நடப்புப் பருவத்திற்கான கரும்பு கொள்முதல் விலையை முத்தரப்புக் கூட்டம் நடத்தித் தீர்மானிக்காமல், கடந்த ஆண்டு வழங்கிய அதே தொகையை, டன்னுக்கு ரூ 2650 என்று அறிவித்து இருப்பது ஏமாற்றம் அளிக்கின்றது.
விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, டன்னுக்கு ரூ.4000 தருவதுடன், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.1800 கோடியை உடனடியாகப் பெற்றுத் தரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம்-17:-
காவிரியின் கிளை நதிகளிலும், கொள்ளிடத்திலும், கழிமுகப் பகுதிகளிலும் கடல் நீர் உட்புகாமல் தடுப்பதற்காகத் தடுப்பு அணைகளைக் கட்ட வேண்டும் என்றும், டெல்டா மாவட்டங்களிள் உள்ள ஏரிகள், குளங்களிலும் தூர் வாரும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம்-18:-
தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்கவும், அதற்கு உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரவும் கோரி தமிழகத்தில் பல இலட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் வரலாறு காணாத தன்னெழுச்சிப் போராட்டத்தை நடத்தினர்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், 2016 டிசம்பர் 2 ஆம் நாள், இது தொடர்பாக தமிழக பொறுப்பு ஆளுநர் திரு வித்யாசாகர் ராவ் அவர்களைச் சந்தித்து, ஜல்லிக்கட்டு நடைபெற அனுமதி வேண்டி மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, 2016 டிசம்பர் 15 ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி அவர்களை நேரில் சந்தித்த வைகோ அவர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை உச்சநீதிமன்றம் அகற்ற வேண்டுமானால், 1960 ஆம் ஆண்டு விலங்குகள் வதைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, சிங்கம்,புலி, யானை போன்ற காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் இருந்து விவசாயிகளின் வீட்டு வளர்ப்பு விலங்கான காளையை அகற்ற வேண்டும்; ஏறு தழுவுதல் எனும் வீர விளையாட்டு, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களின் கலாச்சார நிகழ்வாக நடத்தப்பட்டு வருகின்றது என்பதை விளக்கினார்.
‘மெரினா புரட்சி’ என கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வர்ணித்தது போல், இலட்சோபலட்சம் தமிழ் இளைஞர்கள் போராட்டக் களத்தில் இறங்கியதால், ஜல்லிக்கட்டு நடைபெற தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடைகள் உடைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றன. இனி எந்தக் காலத்திலும் ஜல்லிக்கட்டுக்குத் தடை வராத அளவுக்கு, மத்திய அரசு நிரந்தரமான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், உலகம் வியக்கும் வண்ணம் அறப்போர் நடத்தி வெற்றி கண்ட தமிழக இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் மறுமலர்ச்சி திமுக பொதுக்குழு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.
தீர்மானம்-19:-
மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய தகுதி காண் மற்றும் நுழைவுத்தேர்வு (‘நீட்’) National Eligibility cum Entrance Test – NEET நடத்த வேண்டும் என்று மத்திய அரசு தீர்மானித்துள்ளதால், தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு கேள்விக்குறியாகி உள்ளது.
கிராமப்புற பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் ‘நீட்’ நுழைவுத்தேர்வுப் போட்டியில் வெற்றிபெற முடியாத நிலைமையில், சமூக நீதிக் கோட்பாடும் குழிதோண்டிப் புதைக்கப்படும். எனவே ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிப்ரவரி 1, 2017 இல் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றது.
அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, மருத்துவக் கல்விக்கு பொது நுழைவுத்தேர்வு ‘நீட்’ நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
மேலும் 2018 - 19 ஆம் கல்வி ஆண்டு முதல், பொறியியல் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்த இருப்பதாகவும், அதற்கான விதிமுறைகளை வகுக்குமாறு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கு (ஏஐசிடிஇ) மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது.
மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து எழுந்த எதிர்ப்புகளை எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, பொறியியல் கல்விக்கும் பொது நுழைவுத் தேர்வை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பது கண்டனத்திற்கு உரியது.
மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து கல்வித்துறையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் மத்திய அரசின் நிலைப்பாடு, கூட்டு ஆட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும் என்பதை மறுமலர்ச்சி திமுக பொதுக்குழு மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டுகின்றது.
தீர்மானம்-20:-
2016 மே மாதம் ஜெயலலிதா அவர்கள் முதல்வர் பொறுப்பு ஏற்றபோது, ‘தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்’ என்று அறிவித்தார்.
எந்தவித ஐயத்திற்கும் இடம் இன்றி முழு மதுவிலக்கை நிறைவேற்றுகின்ற வகையில், தமிழக அரசு கால நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்; அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம்-21:-
இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்கு எல்லையான கன்னியாகுமரி, உலகப் புகழ் பெற்ற சுற்றுலா மையமாகத் திகழ்கின்றது.
முக்கடல் சங்கமம் என்பதாலும், சுவாமி விவேகானந்தரின் நினைவிடமாகத் திகழ்வதாலும், இந்தியா முழுமையும் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வருகின்றார்கள்.
வான்புகழ் வள்ளுவரின் வானளாவிய சிலை, உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களை ஈர்க்கின்றது.
ஐயப்பன் கோவிலுக்குச் செல்கின்ற இலட்சக்கணக்கான பக்தர்கள், கன்னியாகுமரி அம்மனையும் வழிபட்டுத்தான் செல்கிறார்கள்.
இவ்வாறு, நாளும் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற ஒரு மாபெரும் சுற்றுலா மையமாக கன்னியாகுமரி உருவாகி இருக்கின்றது.
கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள சுவாமித்தோப்பில், அரசுக்குச் சொந்தமான நிலம் பெருமளவில் இருக்கின்றது. அங்கே ஒரு சிறிய பயணிகள் வானூர்தி நிலையத்தை மத்திய அரசு அமைத்துத் தர வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம்-22:-
கோவை மாநகரம் தமிழகத்தின் தொழில் தலைநகராகத் திகழ்கின்றது. மாநகர எல்லைக்குள் தற்போது 25 இலட்சம் மக்கள் வசிக்கின்றார்கள். பன்னாட்டு வானூர்தி நிலையம் இயங்குகின்றது. பன்னாட்டுப் பயணிகள் வந்து செல்கின்றார்கள். அருகில் உள்ள, உலகப் புகழ்பெற்ற மலை வாழிடமான ஊட்டிக்குச் செல்கின்ற பயணிகள் கோவை மாநகரின் வழியாகத்தான் வந்து போகின்றார்கள்.
2011 ஆம் ஆண்டு மத்திய அரசு, கோவை மாநகரம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உகந்த நகரம் என அறிவித்து இருக்கின்றது. ஆனால், தற்போது இங்கே மோனோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாகத் தமிழக அரசு அறிவித்து இருக்கின்றது. மிக வேகமாக வளர்ச்சி பெற்று நான்கு முனைகளிலும் விரிவாகி வருகின்ற கோவை மாநகருக்கு மோனோ ரயில் திட்டம் ஏற்றது அல்ல. எதிர்காலத் தேவையை நிறைவு செய்யாது.
எனவே, கோவை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம்-23:-
2017 மே மாதம் 6 ஆம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 23 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா காட்டிய இலட்சியப் பாதையில் திராவிட இயக்கத்தின் ஒருபெரும் இயக்கமாக வெற்றிகரமாக நடைபோட்டு வருகின்றது. வெகுவாக மாறியுள்ள தமிழக அரசியல் களத்தில், மக்களின் கவனம் கழகத்தை நோக்கித் திரும்பி இருக்கின்ற நிலையில், கழகப் பாசறையை வலுப்படுத்தும் வகையில், கழக உறுப்பினர்கள் சேர்த்தல் - புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது.
தீர்மானம்-24:-
மனித குல வரலாற்றில் ரத்தம் தோய்ந்த அத்தியாயங்களாக ஈழத்தமிழர் வாழ்வு எழுதப்பட்டு இருக்கின்றது. சிங்கள இனவாத, கொலைவெறி அரசின் ராஜபக்சே ஆட்சியில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உரிய நீதியை ஐ.நா. மன்றமும், பன்னாட்டு சமூகமும் வழங்க வேண்டும்.
ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை நடத்திய சிங்கள அரசையும், அதற்குத் துணை போனவர்களையும், பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கின்ற வகையில், ஈழத்தமிழர் படுகொலை குறித்துப் பன்னாட்டு நீதி விசாரணை நடத்த வேண்டும்.
தமிழ் ஈழத்தில் சிங்கள இராணுவமும், காவல்துறையும் கைப்பற்றி இருக்கின்ற நிலங்களை, ஈழத்தமிழர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிங்களக் குடியிருப்புகள் அகற்றுவதுடன், தமிழர்களின் வாழ்விடங்களைச் சுற்றி உள்ள சிங்கள இராணுவ முகாம்களை மூட வேண்டும்.
ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்ற வகையில், தமிழ் ஈழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்தை, 2011 ஆம் ஆண்டு ஜூன் முதல் நாள், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முன்வைத்தார்கள். உலக அரங்கில் இத்தகைய கருத்தை முதன்முதலாக முன்வைத்தது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
ஈழத்தமிழர்களின் தனி இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டியது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் கடமை ஆகும். எனவே, தமிழ் ஈழம் அமையப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. மன்றத்தை இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம்-25:-
விரைவில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுவது என்றும், அதற்கு ஏற்ற வகையில் கழக அமைப்புகள் தீவிரமான களப்பணியில் இறங்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது.
இவ்வாறு மறுமலர்ச்சி தி.மு.க தலைமைக் கழகமான ‘தாயகம்’ சென்னை - 8 இன்று 26.02.2017 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment