இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் இன்று (01.02.2017) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மத்திய அரசின் 2017-18 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கும், போக்குவரத்து வசதிகளைப் பெருக்குவதற்கும் முன்னுரிமை அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
கிராமப்புறங்களில் ஐந்து இலட்சம் குளங்கள் வெட்டுதல்; 60 விழுக்கhடு கிராமங்களுக்குக் கழிப்பிட வசதி 100 விழுக்கhடு கிராமங்களுக்கு மின்வசதி போன்ற திட்டங்கள், கிராமங்கள் பெரிதும் மேம்பாடு அடைய உதவும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குக் கடந்த ஆண்டு 38,500 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு 48,000 கோடியாக உயர்த்தி இருக்கின்றார்கள்.
பண மதிப்புக் குறைப்புக்குப் பின்னர் வீட்டுக் கடன் வட்டி ஏற்கனவே குறைக்கப்பட்டது; இப்போது மேலும் குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம், வீட்டு வசதி பெருகும்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒரு நாளைக்கு 73 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு நாளைக்கு 133 கிலோமீட்டர் அமைப்பதற்கான வழி காணப்பட்டுள்ளது.
விவசாயம்:
விவசாயப் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் (கிஸான் பீமா
யோஜனா) கடந்த ஆண்டு 5500 கோடியாக இருந்தது இந்த ஆண்டு 13,424 கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கின்றது. விவசாயிகளுக்கான கடன் உதவி, கடந்த ஆண்டு 9 இலட்சம் கோடி என்ற அளவில் இருந்து இந்த ஆண்டு பத்து இலட்சம் கோடியாக வழங்கப்படுகின்றது. ஆனால், நதி நீர் இணைப்புப் பற்றிய அறிவிப்பு இல்லை.
போக்குவரத்து
தொடரித்துறையில் பயணிகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இருக்கின்றார்கள். 2020 ஆம் ஆண்டுக்குள் ஆள் இல்லாத லெவல் கிராசிங்குகள் இல்லை என்ற நிலையை உருவாக்க வழி காணப்பட்டுள்ளது. தொடரி பயணச்சீட்டுகள் முன்பதிவுக்கு சேவை வரி கிடையாது; 500 தொடரி நிலையங்களில் ஊனமுற்றோருக்கு லிப்ட் வசதி; நெடுஞ்சாலைகள் மற்றும் தொடரித்துறை போக்குவரத்துத் திட்டங்களுக்கு 2.41 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது; பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்திற்கு இந்த ஆண்டு 19000 கோடி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள், போக்குவரத்து மேம்பட வெகுவாக உதவும்.
கடவுச்சீட்டுகள் வழங்குவதை எளிதாக்கிட, இனி தலைமை அஞ்சல் நிலையங்கள் அனைத்தும் பாஸ்போர்ட் அலுவலகக் கிளைகளாகச் செயல்படும் என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது.
வருமான வரி
தனிநபர் வருமான வரி வரம்பு உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றாலும், 2.5 லட்சம் 2.5 முதல் 5 இலட்சத்திற்கு இடைப்பட்ட வருமானம் காட்டுவோருக்கு முன்பு விதிக்கப்பட்டு இருந்த பத்து விழுக்காடு வரி இப்போது ஐந்து விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது ஆறுதல் அளிக்கின்றது. ஐம்பது இலட்சம் முதல் ஒரு கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
பண மதிப்புக் குறைப்பினால் மூன்று மடங்கு பெருகியுள்ள பண அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு சேவை வரி ரத்து செய்யப்படும் என்று மக்கள் எதிர்பார்ப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய இதுவரை சட்டம் கிடையாது. அதற்காகப் புதிய சட்டம் கொண்டு வரப்படுவது வரவேற்கத்தக்கது.
முத்ரா வங்கித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு சிறுதொழில் கடன்கள் ரூ 1.22 இலட்சம் கோடி என்பது இந்த ஆண்டு இரு மடங்காக, 2.44 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய சூரிய மின்சக்தித் திட்டங்களின் மூலம் புதிதாக 20000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது, தொழில்துறை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
கல்வி
இளைஞர்கள் அயல்நாடுகளில் வேலை வாய்ப்புகளைப் பெற்றிட உதவிடும் வகையில், அயல்நாட்டு மொழிகளைக் கற்பிக்கும் மையங்கள் (Foreign Languages Study Centre) அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது.
ஒட்டுமொத்தத்தில், இது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வரவு செலவுத் திட்டம்.
மேற்க்கண்டவாறு மதிமுக தலைமை கழகமான தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment