மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில், தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் கடந்த 230 ஆண்டுகளாக பினாங்கு தமிழ் மக்களால் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றது. தமிழர்கள் வழிபடும் முருகக் கடவுளை அறக்கட்டளை பராமரித்து வருகின்றது. ஆலயக் குழுத் தலைவராக பினாங்கு மாநிலத் துணை முதல் அமைச்சரும், ஈழத் தமிழர்களின் காவல் அரணுமான பேராசிரியர் இராமசாமி அவர்கள் சிறப்பாகத் தொண்டு ஆற்றி வருகின்றார். தங்க ரதம் அமைத்து, தமிழர்கள் வாழும் பகுதியில் சுற்றிவர ஏற்பாடு செய்துள்ளார்.
தமிழர்களுடைய பலவீனமே ஒற்றுமை இன்மைதான் என்பதற்கு இணங்க, ஒரு சிறு குழுவினர் இந்தத் தங்க ரத ஊர்வலத்துக்கு இடையூறு செய்யும் நோக்கத்தோடு, தமிழ்நாட்டில் உள்ள ‘ஆறுபடை வீடு அறக்கட்டளை’ என்ற அமைப்பை அனுகியுள்ளனர். அதன் செயலாளர் திருமதி அலமேலு அருணாச்சலம், தங்க ரதம் கோயில் சுற்றுப் பிரகாரத்தில் மட்டும்தான் சுற்றி வர வேண்டும் என்று தந்துள்ள அறிக்கை தவறு.
இலங்கைத் தீவில், தமிழ் ஈழத்தில் நூற்றுக்கணக்கான முருகன் கோயில்கள் சிங்களர்களால் உடைத்து நொறுக்கப்பட்டபோது, இந்த ஆறுபடை வீடு அறக்கட்டளை எங்கே போனது? அதை எதிர்த்துக் குரல் கொடுத்ததா? அல்லது இன்றுவரை அதைப் பற்றி வாய்திறந்து பேசி இருக்கின்றார்களா? ஆலய ஆகம விதிகளை வகுப்பதற்கு இந்த அமைப்பு அதிகாரம் பெற்று இருக்கின்றதா? மக்களுக்காகத்தான் ஆலயம். மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தங்க ரதம் சுற்றி வருவதில் தவறு எதுவும் இல்லை.
மலேசிய நாட்டில் பினாங்கு மாநிலத்தில் தண்ணீர்மலை முருகன் கோயில் குறித்து முடிவு எடுக்கும் முழு அதிகாரமும் அந்த ஆலயக்குழு நிர்வாகத்திற்கும், திருப்பணிக் குழுத் தலைவர் துணை முதல்வர் பேராசியர் இராமசாமி அவர்களுக்கு மட்டுமே உண்டு. எனவே தமிழ்நாட்டின் ஆறுபடை வீடு அறக்கட்டளை, மலேசிய நாட்டுக்குள் தேவை இன்றி மூக்கை நுழைக்க வேண்டாம் கேட்டுக் கொள்கின்றேன் என வைகோ குறிப்பிட்டுள்ளதாக மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment