பாறைப் படிம எரிவாயு : துறை சார்ந்த அறிஞர்கள் குழு தமிழக அரசின் கருத்து என்ன? தென் மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் நடைபெற்ற வாதம்!
மத்திய அரசிசன் ஓஎன்ஜிசி நிறுவனம், தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் சேல் கேஸ் பாறைப் படிம எரிவாயு எடுப்பதற்குத் தடை கோரி, தென் மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவின் மீது, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வைகோ இன்று முன்வைத்த வாதம்.
வைகோ:
இந்த வழக்கு தொடர்பாக, மத்திய அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சம் இன்று தீர்ப்பு ஆயத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில்,
‘மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு கிரேட் எனர்ஜி கார்ப்பரேசனுக்குக் கொடுத்த உரிமத்தை, மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டதை எதிர்த்து அந்த நிறுவனம் வழக்குத் தொடுத்து இருப்பதால், பிரச்சினை நிலுவையில் இருக்கின்றது. தற்போது, தமிழ்நாட்டில் சேல் கேஸ் எடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை’ என்று கூறி இருக்கின்றது. இது தந்திரமான வேலை.
தமிழ்நாட்டின் நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியில் பாறைப் படிம எரிவாயு (சேல் கேஸ்) எடுப்பதற்கு உரிமம் கோரிய விண்ணப்பத்தை, ஓஎன்ஜிசி நிறுவனம்,
2016 ஜனவரி 15 இல், மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் கொடுத்தது. தமிழ்நாட்டில் மீத்தேன் எடுப்பதற்கு மத்திய அரசு வரையறுத்துள்ள கொள்கை நெறிமுறைகளின் கீழ் இந்த எரிவாயு எடுக்கும் திட்டத்தையும் வலியுறுத்தி உள்ளது.-அந்தக் கொள்கைத் திட்டத்தில் மாற்றம் செய்யாமல், தற்போது தமிழ்நாட்டில் சேல் கேஸ் எடுக்கும் நடவடிக்கை இல்லை என்று இங்கே பூடகமாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், நாங்கள் அந்தத் திட்டத்தைக் கைவிடவில்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது செய்தி ஏடுகளில் வெளிவந்தது. எனவே ஆபத்து இன்னும் நீங்கவில்லை.
தமிழ்நாடு அரசு இன்று தீர்ப்பு ஆயத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில், ‘தற்போது சேல் கேஸ் எடுக்கின்ற நடவடிக்கை ஏதும் இல்லை; எனவே, இதுகுறித்துத் துறை சார்ந்த நிபுணர் குழுவை அமைப்பது பற்றி யோசித்துக் கொண்டு இருக்கின்றோம்’ என்று தெரிவித்துள்ளது.
மீத்தேன் எரிவாயு திட்டத்தைத் தமிழ்நாட்டில் மத்திய அரசு செயல்படுத்த முனைந்தபோது, அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள், ஒரு நிபுணர் குழுவை அமைத்து, அதன் பரிந்துரையின் பேரில் மீத்தேன் எரிவாயு திட்டத்தைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தார். அதேபோன்று, சேல் கேஸ் குறித்தும் ஒரு துறைசார்ந்த நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும்.
வந்தபின் பார்த்துக் கொள்வோம் என்பது, அபாயத்தைத் தடுக்கும் வழி அல்ல; ஆபத்து வருமுன் காப்பதுதான் அறிவு உடைமை என திருவள்ளுவர் கூறி இருக்கின்றார். சேல் எரிவாயு குறித்து மத்திய அரசு ஒரு கொள்கை முடிவை வகுத்து இருக்கும்போது, இப்பிரச்சினையில் மாநில அரசின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்துவதுதான் நியாயம் ஆகும். எனவே, இதுகுறித்து ஆராய, துறைசார்ந்த நிபுணர்கள் குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும் என்று தீர்ப்பு ஆயம் அறிவிக்க வேண்டுகிறேன்.
நீதியரசர் ஜோதிமணி: நீங்கள் இத்தீர்ப்பு ஆயத்தில் கூறுவதை விட, மக்கள் மன்றத்தில் வலியுறுத்தினாலே அது பயன் கொடுக்கும். இருந்தபோதிலும், சேல் கேஸ் நிபுணர் குழு அமைப்பது பற்றித் தமிழ்நாடு அரசின் திட்டவட்டமான கருத்து என்ன என்பதை தீர்ப்பு ஆயத்தின் அடுத்த அமர்வில் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் மாசிலாமணி அவர்கள், ‘இந்த வழக்கில் வைகோ வெற்றி பெற்று விட்டார்’ என்று குறிப்பிட்டார்.
அதற்கு வைகோ, ‘நான் முழு வெற்றி பெறவில்லை; இன்னும் போராட வேண்டி இருக்கிறது’ என்றார்.
வழக்கு மார்ச் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வைகோ அவர்களுடன், வழக்கறிஞர் சிவ. இராஜசேகரன், மதிமுக சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ், வழக்கறிஞர் ப. சுப்பிரமணி, வழக்கறிஞர் செந்தில்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர் என மதிமுக தலைமை கழகமான தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment