காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் நாசகாரத் திட்டத்திற்கு, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனுமதி வழங்கி, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க. அரசு ஒப்புதல் அளித்து, 04.01.2011 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது.
சுமார் 667 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் மீத்தேன் எடுக்க ஒப்புதல் வழங்கப்பட்டதால், 1 இலட்சத்து 60 ஆயிரத்து 210 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். கhவிரிப் படுகையில் நிலத்திற்கு அடியில் 500 அடி முதல் 1600 அடி ஆழம் வரையுள்ள வளமான நிலக்கரிப் படிமங்ளுக்கு இடையே உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்க, நிலத்திற்குள் 2000 அடி ஆழம் வரை துளைகள் போட்டு, குழாய்களை உள்ளே இறக்க வேண்டும். அதிலிருந்து பக்கவாட்டில் அனைத்துத் திசைகளிலும் 2 கிலோ மீட்டர் வரை குழாய்களைச் செலுத்தி, நிலக்கரிப் பாளங்களை நொறுக்கி, இடுக்கில் தங்கி இருக்கும் மீத்தேன் எரிவாயு எடுக்கப்படும்.
நிலக்கரிப் படிமங்களை நொறுக்க, நீரோடு மணலும், 634 வகை வேதிப்பொருட்களும் கலந்த ஒரு அபாயகரமான கலவை மிக அழுத்தத்துடன் உட்செலுத்தப்படும். இந்த வேதிக் கலவையால், வளமான வேளாண் நிலங்கள் முற்றாக நஞ்சாகிவிடும். நிலத்தடி நீர் முழுமையும் நச்சு வேதிப்பொருட்களால் நாசமாகும். இதனால் சுற்றுச் சூழலும் சீர்கெடும். நிலத்தடி நீர் ஒட்டுமொத்தமாக உறிஞ்சப்படுவதால், வேளாண்மை நிலத்துக்கு நீர் சிறிதளவு கூடக் கிடைக்காது. மீத்தேன் எடுப்பதற்காக உறிஞ்சி வெளியே கொட்டப்படும் நீர் கடல் நீரை விடப் பன்மடங்கு உப்புத்தன்மை உடையது. இந்த நீர் தற்போதுள்ள ஆறுகளிலும், குளங்களிலும் கலக்கும்போது விவசாய நிலம் உப்பளமாக மாறிவிடும்.
மீத்தேன் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மக்கள் இடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக, நாசகார விளைவுகளை ஏற்படுத்தும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து 2014 டிசம்பர் மாதம் 10 நாட்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில் மக்களிடையே விழிப்பு உணர்வுப் பிரச்சாரத்தை நான் மேற்கொண்டேன்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மவாட்டங்களில் மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு விவசாயிகள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் நடந்து வரும் வழக்கில், மீத்தேன் திட்டத்தை ரத்து செய்திடக் கோரி நானே வாதாடினேன். பசுமைத் தீர்ப்பு ஆயம் அறிவித்த உத்தரவின்படி, தமிழக அரசு நிபுணர்குழு ஒன்றை அமைத்தது.
அக்குழுவின் பரிந்துரையை ஏற்று, அன்றைய தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள், மீத்தேன் திட்டத்தைத் தமிழகம் அனுமதிக்காது என்று அறிவித்தார்.
மக்கள் கொந்தளிப்பாலும், விவசாயிகளின் கடும் எதிர்ப்பாலும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மீத்தேன் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
ஆனால், கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி, மத்திய அமைச்சரவை, மீத்தேன் திட்டத்தையே ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டமாகச் செயற்படுத்த முடிவு எடுத்து இருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆய்வு அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் வேறுபாடு இல்லை.
எனவே, தமிழகத்தின் நிலவளத்தையும், நீர்வளத்தையும் நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயற்படுத்த முனையும் மத்திய அரசைக் கண்டித்தும், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், என் தலைமையில், 28.02.2017 செவ்வாய்க்கிழமை நண்பகல் 11 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கழகத் தோழர்களும், விவசாயப் பெருமக்களும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் பெருமளவில் பங்கேற்றுத் தமிழகத்தின் எதிர்ப்பை மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச்செயலாளர் இன்றைய 25.02.201 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் இணையதள அணி
No comments:
Post a Comment