உலகத்தின் தொன்மை மொழியான தமிழ் மொழியின் உதிரத்தில் இருந்துதான், கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் உதித்தன என்று தன் கவிதை மூலம் அகிலத்திற்கு அறிவித்தவரும், தமிழ்க்குலத்தின் நன்றிக்கு உரியவருமான தமிழ் அறிஞர் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள், திருவனந்தபுரம் மகாராசா கல்லூரி தத்துவப் பேராசிரியராகவும், திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரி முதல்வராகவும் தமிழ்ப்பணி ஆற்றிய பெருமைக்கு உரியவர் ஆவார். மனோன்மணியம் என்ற அரிய நாடகத்தைப் படைத்தார்.
திருவனந்தபுரத்தில் சைவப் பிரகாச சபையை நிறுவி, சைவ சித்தாந்தத்தைப் பரப்பிய மேதகு சுந்தரம்பிள்ளை அவர்கள், சுவாமி விவேகானந்தருக்குச் சைவம் கற்பித்தவர் ஆவார். இவரின் பெருமையைப் பாராட்டி, 1892 இல் அன்றைய திருவிதாங்கூர் அரசு, அதன் தலைநகரான திருவனந்தபுரத்தில் 90 ஏக்கர் மனை நிலத்தை வழங்கியது. அந்த நிலத்தின் ஒரு பகுதியில் சுந்தரம் பிள்ளை ஒரு பெரிய மாளிகையைக் கட்டினார்.
அம்மாளிகைக்கு, தான் மதித்த பேராசிரியர் ஹார்வே பெயரைச் சூட்டினார். இன்றைக்கு ‘ஹார்வேபுரம்’ என்று அழைக்கப்படும் அந்த மாளிகை, இப்போதும் நல்ல நிலையில் உள்ளது. தம்முடைய 42 ஆவது வயதிலேயே 1897 இல் சுந்தரம் பிள்ளை அவர்கள் மறைந்தார். சுந்தரம் பிள்ளை அவர்களின் ஒரே மகன் நடராச பிள்ளைதான் அந்த மாளிகைக்கு ஒரே வாரிசு ஆவார். திருவிதாங்கூர் சட்டமன்றத்தில் ஆறு முறை உறுப்பினராகவும், இரண்டு முறை அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், கேரள மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் பணிபுரிந்தவர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான திவானுக்கு எதிராக, 1916 இல் போராட்டம் நடத்திய காரணத்தால், மனோன்மணியம் சுந்தரம் பிள்ளைக்கு அளிக்கப்பட்ட 90 ஏக்கர் நிலத்தையும், மானியத்தையும் திவான் அரசு பறித்துக் கொண்டது. நடராச பிள்ளையைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
நடராச பிள்ளை மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தார் ஹார்வே மாளிகையைத் திரும்ப அளிக்குமாறு, 1968 இல் அன்றைய கேரள முதல்வர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். தோழர் நம்பூதிரிபாடு அரசு அந்தக் கோரிக்கையை ஏற்று, ஹார்வின் மாளிகையைத் திரும்ப அளிப்பதாக அறிவித்தும், இன்றுவரை, அது திரும்பக் கொடுக்கப்படவில்லை.
கேரள அரசு சுந்தரம் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களைத் தனியார் சட்டக்கல்லூரிக்குக் குத்தகைக்கு விட்டது. முதல்வர் கருணாகர மேனன் காலத்தில், அந்த நிலத்தை நாராயணன் நாயர் என்பவருக்குப் பட்டா மாற்றிக் கொடுத்து விட்டனர்.
இந்தப் பின்னணியில் இன்றைய கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இந்தப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளைக்குக் கொடுத்த நிலங்களையும், ஹார்வின் மாளிகையையும், உயிரோடு இருக்கின்ற அவரது வாரிசுகளுக்குத் திரும்ப அளிக்க வேண்டும் என்று, கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் வித்துவான் மா. பேச்சிமுத்து, பிப்ரவரி 4 ஆம் நாள் கடிதம் எழுதி உள்ளார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, மார்ச் முதல் வாரம், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினர் கேரள அரசு தலைமைச் செயலகம் முன்பு அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
எனவே, கேரள முதல் அமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்கள், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்று, பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் வாரிசுகளுக்கு, நிலத்தையும் மாளிகையையும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். இதுகுறித்து, கேரள முதல்வருக்கு வேண்டுகோள் கடிதமும் அனுப்பி இருக்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment