ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அரசியல் ரீதியாக போராட்டங்கள் நடத்தினாலும், அறிக்கை விடுத்தாலும், மக்களுக்கான கோரிக்கைகளுக்காக நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவதிலிருந்து தவறுவது இல்லை. அதில் மிகக்குறிப்பாக, சீமைக்கருவேல மரத்தை ஒழிப்பதற்காக சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு எல்லோராலும் பாராட்டப்படுகிறது. தமிழ்நாடு ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையுள்ள ஒரு மாநிலமாகும். நமக்கு இருக்கும் கொஞ்ச தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில், தமிழ்நாடு முழுவதிலும் பரவியுள்ள நச்சு செடியான சீமைக்கருவேலமரம், இருக்கும் நிலத்தடி தண்ணீரையும் வீணாக உறிஞ்சிவிடுகிறது. 1950–ம் ஆண்டுகளில் வெளிநாடுகளிலிருந்து விறகுக்காக கொண்டு வந்து வளர்க்கப்பட்ட இந்த சீமைக்கருவேலமரத்தின் வேர்கள் மிகஆழமாகச் சென்று தன் கோரக்கரங்களை நீட்டுவது போல, பரவலாகவும் வேர்களை அனுப்பி நிலத்தடிநீரை உறிஞ்சிவிடும் சக்தி கொண்டது. போதாக் குறைக்கு காற்றிலுள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடும். இதனால் எந்த பயனும் இல்லை.
கேரளாவில் இதன் தீமையை நன்றாக அறிந்திருந்த காரணத்தினால்தான், இந்த சீமைக்கருவேல மரத்தை ஒழிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே நடவடிக்கைகளை எடுத்து விட்டார்கள். தமிழ்நாட்டில் வைகோ தொடர்ந்த வழக்கு, மதுரை ஐகோர்ட்டு கிளையில் நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கடந்த டிசம்பர் மாதம் 20–ந்தேதியே நீதிபதிகள் மதுரை கிளையின் அதிகார வரம்புக்குட்பட்ட கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கரூர் மாவட்ட கலெக்டர்களுக்கு சீமைக்கருவேலமரத்தை உடனடியாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றிய தகவலை ஜனவரி 10–ந்தேதியன்று கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்திருந்தனர். இரண்டு விசாரணைகளுக்குப்பிறகு மீண்டும் 31–ந்தேதி இந்த வழக்கு வந்தபோது, இன்னமும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளாத நிலைமைகளைக் கண்டு நீதிபதிகள் மிகத்தீவிர நடவடிக்கைக்கு உத்தர விட்டுள்ளனர்.
ஒரு மாவட்டத்துக்கு 5 வக்கீல் கமிஷனர்களை நியமித்து, மொத்தம் 13 மாவட்டங்களுக்கும், 65 வக்கீல் கமிஷனர்களை நியமித்து, இவர்கள் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, இந்த பணிகளை பார்வையிட வேண்டும். மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட முன்சீப்களும் இந்த கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். தனியாரும் தங்கள் நிலங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றவேண்டும். அப்படி அகற்ற வில்லையென்றால், அரசே அந்த மரங்களை அகற்றி, அதற்கான செலவை அவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளனர். இப்போது இந்தபணி இந்த 13 மாவட்டங்களிலும் வேகமாக நடக்கிறது. ஏற்கனவே 2013–ம் ஆண்டே தமிழக அரசின் ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இது குறித்து தெளிவாக உத்தரவே பிறப்பித்துள்ளது. அரசின் அந்த உத்தரவை அப்போதே மாவட்ட கலெக்டர்கள் நிறை வேற்றியிருந்தால், இன்று சீமைக்கருவேலமரமும் ஒழிக்கப் பட்டிருக்கும். நீதிமன்றத்தின் கடுமையான நடவடிக்கைக்கும் ஆட்பட்டிருக்க வேண்டாம். இப்போதும் அவசர, அவசரமாக சீமைக்கருவேல மரத்தை ஒழிக்கும் நடவடிக்கை எந்த விதபலனும் தராது. ஏனெனில், இந்த மரங்கள் வேரோடும், வேரடி மண்ணோடும் முழுமையாக அகற்றப்படாவிட்டால் மிகவேகமாக மீண்டும் வளர்ந்துவிடும். எனவே, இந்த 13 மாவட்டங்களில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் உள்ள கலெக்டர்கள் இந்த சீமைக்கருவேல மரத்தை ஒழிப்பதை தங்கள் தலையாய கடமையாகக் கொண்டு, ஆழமாக தோண்டி அதை அழித்துவிட வேண்டும். பின்னர், மதுரை கலெக்டர் தற்போது கூறுவதுபோல, இந்த இடங் களில் மா, புளி, பனை, இலந்தை, நாவல், கொடுக்காப்புளி போன்ற பயன்தரும் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். அரசு மட்டுமல்லாமல், பொதுமக்களையும் இந்த சமுதாய கடமையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment