108-ஆவது அண்ணா பிறந்தநாள் விழா செப் 15, மதிமுக மாநாட்டு தீர்மானங்கள்!
தீர்மானம் : 1
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில், கர்நாடகம் தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 192 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாதந்தோறும் திறந்து விடப்படும் நீரின் அளவு, பற்றாக்குறை காலங்களில் காவிரி நீர் பங்கீடு பற்றியும் தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடக மாநில அரசு கhவிரியில் நீர் திறந்து விடாமல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அலட்சியப்படுத்தி வருகின்றது.
எனவே, தமிழக அரசு ஆகஸ்டு 22-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவில், “நடப்பு நீர்ப்பாசனப் பருவ ஆண்டில் (2016-17) ஆகஸ்டு 19-ஆம் தேதிக்குள் கர்நாடக மாநிலம் காவிரியில் 74.645 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விட வேண்டும். ஆனால் 24.593 டி.எம்.சி. நீரை மட்டுமே திறந்து விட்டுள்ளது. எனவே, காவிரி நீரை நம்பி தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. சுமார் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, ஆகÞடு 19-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 50.052 டி.எம்.சி. நீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கையை அலசி ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், “காவிரியில் 10 நாட்களுக்கு நாள்தோறும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும்,” என்று கர்நாடக மாநில அரசுக்கு செப்டம்பர் 5, 2016 அன்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், மீதி உள்ள நாட்களில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கும் வகையில் திருத்தம் கோரியும் கர்நாடக அரசு ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனு, செப்டம்பர் 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் செப்டம்பர் 20 ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கர்நாடக மாநிலத்தில் அரசியல் கட்சிகளும், பல்வேறு கன்னட இனவெறி அமைப்புகளும் செப்டம்பர் 9-ஆம் தேதி முழு அமைப்புப் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்குச் சென்ற வாகனங்களைத் தாக்கினர்; தீ வைத்து எரித்தனர். கர்நாடகாவில் வன்முறை வெறியாட்டம் தலைதூக்கியது. 40 க்கும் மேற்பட்ட பேருந்துகள் உட்பட, 200 வாகனங்கள் கன்னட இனவெறியர்களால் தீ வைத்து எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வரின் உருவ பொம்மையைக் கொளுத்தி வெறியாட்டம் ஆடி உள்ளனர்.
இவை அனைத்தையும் கர்நாடக மாநில அரசு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பது வேதனை அளிக்கின்றது. கர்நாடக மாநில அரசின் இத்தகைய போக்கினை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் செயல் என இம்மாநாடு எச்சரிக்கின்றது.
தீர்மானம் : 2
கhவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பிப்ரவரி 5, 2007-இல் வெளியானது. மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கhங்கிரஸ் கூட்டணி அரசு இத்தீர்ப்பை மத்திய அரசு இதழில் வெளியிடாமல் ஆறு ஆண்டுகள் இழுத்தடித்து, பின்னர் உச்ச நீதிமன்றத்தினுடைய அறிவுறுத்தலின் பேரில் மார்ச் 19, 2013 அரசிதழில் வெளியிட்டது.
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளவாறு தமிழகத்திற்குக் காவிரி நீரைப் பெற்றுத் தரவும், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, ஹேமாவதி, கிருஷ்ணராஜ சாகர் மற்றும் ஹேரங்கி அணைகளில் உள்ள நீரின் அளவைக் கண்காணித்து, தமிழ்நாட்டுக்கு முறையான நீர்ப் பங்கீட்டை அளிக்கவும், அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய இரு சட்ட அமைப்புகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், கhங்கிரஸ் கூட்டணி அரசு பொறுப்பில் இருந்தபோதும், மோடி தலைமையிலான பா.ஜ.. அரசு பொறுப்பு ஏற்று 28 மாதங்களிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தமிழகத்திற்குப் பச்சைத் துரோகம் இழைத்துள்ள மத்திய அரசுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக்குழு ஆகிய இரு அதிகhரமிக்க சட்ட அமைப்புகளை உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது.
தீர்மானம் : 3
காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டு, இராசிமணல் ஆகிய இடங்களில் புதிதாக இரண்டு தடுப்பு அணைகள் கட்டுவதற்குக் கர்நாடக அரசு 5192 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதாக, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா ஆகஸ்டு 15, விடுதலை நாள் விழாவில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டு இருக்கின்றார். தமிழகத்தின் எதிர்காலத்தை முற்றிலும் அழித்துவிடும் போக்கில் கர்நாடக மாநிலம் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. புதிய தடுப்பு அணைகள் கட்டுவதைத் தடுத்து நிறுத்தாவிடில், காவிரியில் இருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் வருவது முயற்கொம்பாகி விடும். அரசியல் அமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அலட்சியப்படுத்தும் வகையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வரும் கர்நாடக மாநிலத்தைக் கண்டிக்க வேண்டிய மத்திய அரசு இப்பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்து, கர்நாடக மாநிலத்தின் வஞ்சகத்திற்குத் துணை போவது கண்டனத்திற்குரியது ஆகும்.
2014 டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் கர்நாடகத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர் அனந்தகுமார் அவர்களுடைய புது தில்லி இல்லத்தில், கர்நாடகாவில் புதிய அணைகள் கட்டுவதற்கhன சதி ஆலோசனை நடந்தது. அக்கூட்டத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கர்நாடகத்தைச் சேர்ந்த அப்போதைய மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் பங்கேற்றனர். புதிய அணைகள் கட்டுவதற்கு மத்திய அரசு வெளிப்படையாக அனுமதி கொடுக்காது என்றாலும், கர்நாடகம் புதிய அணைகள் கட்டும் முயற்சியை மோடி அரசு தடுக்காது என அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மத்திய அரசின் கண் அசைவில்தான் கர்நாடக மாநில அரசு மேகதாட்டு, இராசிமணலில் காவிரியின் குறுக்கே தடுப்பு அணைகள் கட்டுவதற்கhன சட்டவிரோத முயற்சியை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் எவ்வித வேறுபாடுகளும் இன்றி ஒட்டுமொத்தமாக ஓரணியில் திரண்டு நின்று, கர்நாடகாவின் தடுப்பு அணைகள் கட்டும் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.கழக மாநாடு அறைகூவல் விடுக்கின்றது.
தீர்மானம் : 4
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகியவற்றின் வேளாண்மைத் தொழிலுக்கு ஆதாரமாகவும், கோவை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாகவும் திகழும் சிறுவாணி ஆற்றில் “அட்டப்பாடி பள்ளத்தாக்கு நீர்ப்பாசனத் திட்டம்” என்ற பெயரில் புவிஈர்ப்பு அணை ஒன்றை கட்டுவதற்கு கேரள மாநில அரசு நீண்டகாலமாகவே திட்டம் தீட்டிச் செயற்படுத்த முயற்சித்து வருகின்றது.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு எதிர்த்து வரும் நிலையில் கடந்த ஆகÞடு 11, 12 ஆகிய நாட்களில் நடைபெற்ற நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்டங்களுக்கhன மத்திய நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கி உள்ளது. தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் அலட்சியப்படுத்திவிட்டு, கேரள மாநிலம் சிறுவாணி நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தொழில்நுட்ப அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு இந்த மாநாடு கண்டனம் தெரிவித்துக் கொள்வது மட்டுமின்றி, தமிழக நலனுக்கு எதிராக எக்காரணம் கொண்டும் சிறுவாணியின் குறுக்கே அணை கட்டுவதற்குக் கேரள மாநிலத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே வழங்கியுள்ள தொழில்நுட்ப அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் : 5
முல்லைப் பெரியாறு, காவிரி, பாம்பாறு, சிறுவாணி உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்சினைகளில் அண்டை மாநிலங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படும் போக்கு தொடர்ந்து கொண்டு இருப்பது வேதனை தருகின்றது. இந்நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களின் நீராதாரமான பாலாற்றில், ஆந்திர மாநில அரசு சட்டவிரோதமாக 22 அணைகளைக் கட்டி உள்ளது. தற்போது மேலும், புல்லூர், கங்குந்தி, பெகிலிரேவு உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பு அணைகளின் உயரத்தை அதிகரிக்கவும், புதிய தடுப்பு அணைகள் கட்டவும் திட்டமிட்டுள்ளது.
2006-ஆம் ஆண்டு சித்தூர் மாவட்டத்தில் குப்பம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டும் பணிகளை ஆந்திர அரசு தொடங்கியபோது, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. எனவே, அந்தத் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவிட்ட ஆந்திர அரசு, உச்ச நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளபோது பாலாற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதற்கும் ஏற்கனவே உள்ள தடுப்பு அணைகளின் உயரத்தை அதிகரித்து வருவதும் சட்டவிரோதம் ஆகும்.
ஆந்திர மாநில அரசின் இத்தகைய சட்டவிரோத போக்கைத் தடுத்து நிறுத்தி, தடுப்பு அணையில் உயர்த்தி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் : 6
கூட்டுறவுச் சங்கங்களில் சிறுகுறு விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் பயிர்க்கடன் 5,780 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். சிறு, குறு விவசாயிகள் என்று பாரபட்சம் காட்டாமல் அனைத்து விவசாயிகளின் கூட்டுறவுக் கடனையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 11.5 இலட்சம் விவசாயிகள் மட்டுமே கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்றுள்ளனர். 78.5 இலட்சம் விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றுள்ளார்கள். எனவே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள கடனையும் தள்ளுபடி செய்து, தமிழக அரசே அக்கடனைச் செலுத்த வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் : 7
தமிழக அரசு அறிவித்த கரும்பு கொள்முதல் விலையில் 2013 -14, 2014 -15, 2015 -16 கரும்பு பருவத்தில் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 2,000 கோடியை சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் உறுதி அளித்தபடி சர்க்கரை ஆலைகளிடம் இருந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2015-16 ஆம் ஆண்டு கரும்பு பருவத்திற்கு அறிவிக்கப்பட்ட கொள்முதல் விலையையே, 2016-17 கரும்பு பருவத்திற்கும் மத்திய அரசு அறிவித்துள்ளது. கரும்பு உற்பத்திச் செலவுகள் அதிகரித்து விட்டதால், தமிழக அரசு முத்தரப்புக் கூட்டம் நடத்தி, கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் என கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் : 8
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து முதற்கட்டமாக 500 மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்தது. அடுத்த கட்டமாக சில டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயம் செய்து, அதற்கான அறிவிப்பைத் தமிழக முதல்வர் வெளியிட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் : 9
தமிழகத்தில் நாள்தோறும் கூலிப்படைகள் நடத்தும் கொடூரக் கொலைகள், ஆணவக் கொலைகள், ஆதாயக் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எங்கும் பாதுகhப்பு இல்லாத சூழல் போன்றவை அதிகரித்துக் கொண்டு இருப்பது தமிழக மக்களைப் பீதி அடையச் செய்துள்ளது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; குற்றச் செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் : 10
காவிரி பாசனப் பகுதிகளைப் பாலைவனம் ஆக்கும் நாசகார மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர். தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தொடுத்த வழக்கைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் தலைமையில் 2015 ஆம் ஆண்டு ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு 2015 அக்டோபர் 8 இல் தாக்கல் செய்த அறிக்கையின்படி மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி கொடுப்பது இல்லை என்று தமிழக அரசு முடிவு எடுத்தது. ஆனால், சென்னை பெட்ரோலியம் நிறுவன பொன்விழாவில் பங்கேற்க வருகை தந்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், விவசாயிகளைப் பாதிக்காத வகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அத்துடன் சேல் கேஸ் எனப்படும் படிம எரிவாயு எடுக்கும் திட்டத்தையும் செயல்படுத்த முனைப்பு காட்டி வருகின்றது.
காவிரி பாசனப் பகுதிகளில் எக்காரணம் கொண்டும் மீத்தேன் எரிவாயு மற்றும் படிம எரிவாயுத் திட்டங்களுக்குத் தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது; காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகhக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் : 11
மத்திய பா.ஜ.க. அரசு, புதிய கல்விக் கொள்கையை உருவாக்க டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் அமைத்த குழு அளித்துள்ள பரிந்துரைகள், கல்வியை முழுக்க முழுக்க சந்தைப் பொருளாக விற்பனைப் பண்டமாக மாற்றும் வகையில் இருக்கின்றன. உலக வர்த்தக நிறுவனத்தின் (WTO) சேவை வர்த்தக பொது ஒப்பந்தத்தை (GATS) நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கைக்கு வடிவம் தரப்பட்டுள்ளது.
இந்தியா விடுதலை பெற்ற பின்னர், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி வளர்ச்சிக்காகப் பல ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. டாக்டர் இராதாகிருஷ்ணன் ஆணையம், கோத்தாரி ஆணையம் போன்றவற்றின் கல்விக் கொள்கை பரிந்துரைகள், யஷ்பால் குழு பரிந்துரைகள், 1986 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்விக் கொள்கை, இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் அறிக்கைகள் எதையும் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளவில்லை.
தற்போதைய கல்விக் கட்டமைப்பு உழைப்புச் சந்தைக்குத் தேவையான திறன் கொண்ட மனித வளத்தைத் தயாரித்து வழங்கும் திறனை இழந்து தோல்வி அடைந்துவிட்டது என்றும், கட்டமைப்பு ரீதியிலான சிந்தனைக் குறைபாடுகள் இருப்பதாகவும் புதியக் கல்விக் கொள்கை வரைவுக்குழு தெரிவித்துள்ளது.
கல்வித்துறையில் மாநிலங்களின் அதிகhரத்தை முற்றிலும் பறித்தல், நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்து பல்கலைக் கழக மானியக்குழுவைக் கலைத்தல், பல்கலைக் கழகங்களின் சிண்டிகேட், செனட் அதிகாரத்தை இரத்து செய்தல், கல்லூரிகளை, பல்கலைக் கழகங்களில் இருந்து பிரித்து, அவற்றைத் திறன்சார் சமூகக் கல்லூரிகளாக மாற்றுவது, திறமையானவர்கள் மற்றும் தேவைப்படுபவர்கள் எனப்படும் ஒரு விழுக்கhடு பிரிவினர் மட்டுமே கட்டணமற்ற கல்வி பெறுதல், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகளைத் தாராளமயமாக்குதல், கட்டுப்பாடுகள் அனைத்தையும் முற்றாக நீக்கிவிட்டு, பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களை அனுமதித்தல், தொழில்துறை மற்றும் வெளிநாட்டுக் கல்வித்துறை நிபுணர்களை இறக்குமதி செய்தல், உள்நாட்டு ஆசிரியர்களின் வேலை உரிமையைப் பறித்து வெளியேற்றுதல், இணையத்தின் வழி பிரம்மாண்டமான முறையில் பாடங்களை வழங்குதல், கல்வியை கணினிமயமாக்கி, வெளிநாட்டுப் பல்கலைக் கழங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் பெரு முதலாளித்துவ தனியார் கல்வி நிறுவனங்களின் பிடிக்குள் கொண்டு செல்கின்ற வகையில், புதிய கல்விக் கொள்கை வடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி உள்ள கல்வி உரிமையைப் பறிப்பதோடு, இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்து, சமூக நீதியைக் குழிதோண்டி புதைக்கவும், இந்தியவியல் ஆய்வுகள் என்ற பெயரால் செத்துப்போன சமஸ்கிருத மொழித் திணிப்பை சட்டபூர்வமாக்குவதும் புதிய கல்விக் கொள்கையின் பேராபத்துகள் ஆகும்.
எனவே, புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும், தமிழக அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றும் மறுமலர்ச்சி திமுக மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் : 12
நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க அரசு அமைந்த 28 மாத காலமாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படியான அரசுதான் இந்தியாவில் இயங்குகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்துத்துவ அமைப்புகளின் மதவெறி ஆட்டங்கள் எல்லையற்றுப் போய்க்கொண்டு இருக்கின்றன. இந்துத்துவக் கருத்தியலை எதிர்த்துக் குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோர் மத வெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உ.பி. மாநிலம் தாத்ரியில் பசு மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக முகமது அக்லக் என்பவர் சங் பரிவார் மதவெறி அமைப்புகளால் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்டார். குஜராத் மாநிலத்தில் உனா நகரில் செத்துப்போன மாட்டின் தோலை உரித்ததாகக் கூறி ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்கள் மிருகத்தனமாகத் தாக்கினர்.
மாட்டு இறைச்சியின் பெயரால் சங் பரிவார் அமைப்புகள் நாடு முழுவதும் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீது நடத்தி வரும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதுடன், மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து இந்துத்துவா மதவெறிக் கூட்டத்தின் செயல்பாடுகளை முறியடிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது.
தீர்மானம் : 13
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்துவதும், மீனவர்களைக் கைது செய்து இலங்கைச் சிறையில் அடைப்பதும், மீனவர்களின் படகுகள் மீன்பிடிக் கருவிகள் உள்ளிட்ட உடைமைகளைப் பறித்துக் கொண்டு போவதும் தொடர் நிகழ்வுகள் ஆகிவிட்டன. சிங்களக் கடற்படையினர் பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 103 படகுகள் மீட்கப்படாமல், இலங்கையில் சேதமடைந்து கிடக்கின்றன. படகுகளை மீட்கக் கோரி இராமேசுவரம் மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இப்பிரச்சினையில் மத்திய அரசு அலட்சியப் போக்குடன் நடந்துகொள்வதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழ மீனவர்களின் படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் : 14
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மாணவர்களுக்கு வழங்கி உள்ள கல்விக் கடனை வசூலிப்பதற்குத் தனியார் முகவர்களை ஏவி விட்டு மாணவர்களை மிரட்டி அச்சுறுத்தி வருகின்றன. இதனால் மதுரையில் பொறியியல் பட்டம் படித்த மாணவர் லெனின் தற்கொலை செய்துகொண்ட துயரம் நிகழ்ந்துள்ளது. தமிழக முதல்வர், சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி, மாணவர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கல்விக் கடன்களைத் தமிழக அரசே செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் : 15
தமிழகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகர்மன்றத் தலைவர் மற்றும் பேரூராட்சித் தலைவர் பொறுப்புகளுக்கு மக்களால் நேரடியாக தேர்வு செய்யும் முறையை மாற்றி, மறைமுகமாகத் தேர்வு செய்யப்படும் வகையில் தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளது ஜனநாயகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படையையே இது தகர்த்து விடுவது மட்டுமின்றி, பண பலத்தின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடும் நிலையை உருவாக்கி விடும் என மறுமலர்ச்சி தி.மு.க. கருதுகின்றது.
உள்ளாட்சித் தேர்தல் முறையாவும், நேர்மையாகவும் நடப்பதைத் தமிழகத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் : 16
‘மேக் இன் இந்தியா’ என்று பிரதமர் நரேந்திர மோடி பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு மேல் அழைப்பு விடுக்கும் நிலையில், திருச்சிக்குப் பெருமை சேர்க்கும் பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) நலிவடையும் நிலை உருவாக்கப்படுகிறது. திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் பணி செய்யக் கோரும் உற்பத்தி ஆர்டர் குறைந்து, அதன் தொடர்பான 400 துணைத் தொழிற்சாலைகளும் மூடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மத்திய அரசு திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தைப் பாதுகhக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றும் 1200 தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதோடு, லாபம் ஈட்டும் பொதுத்துறையான பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவையும் கைவிட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் : 17
2009 ஏப்ரல், மே திங்களில் சிங்கள இனவாத அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தில் ஆயுதம் ஏந்தாத அப்பாவித் தமிழர்கள், தாய்மார்கள், முதியோர்கள், குழந்தைகள் உட்பட ஒன்றரை இலட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்ற உண்மையை ஐ.நா. பொதுச்செயலாளர் அமைத்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு ஆதாரங்களோடு வெளிப்படுத்தியது. மேலும், போராளிகள், கவிஞர்கள், படைப்பாளிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் காணவில்லை. அவர்கள் கொல்லப்பட்டார்களா? வதை முகாம்களில் சித்ரவதைக்கு ஆளாகி உள்ளனரா? என்ற உண்மை வெளிவர வேண்டும் என்றும், ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டோர் விடுதலை ஆக வேண்டும் என்றும் தமிழ் இனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக மைத்திரிபால சிறிசேனா, சந்திரகா, ரணில் விக்கிரமசிங்கே மூவர் சதிக்குழு, கhணாமல் போனோர் குறித்து அவ்வப்போது பொய் அறிக்கைகளைத் தந்து வருகின்றது. கhணாமல் போனோர் குறித்து முன்பு ராஜபக்சே ஒரு கண்துடைப்பு ஆணையத்தை அறிவித்தது போலவே மைத்திரிபால அரசும் ஏமாற்றி வருகின்றது.
இந்நிலையில், தற்போது இலங்கைச் சிறைகளில் ரகசியமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த விடுதலைப் புலிகளுக்கு ஊசி மருந்துகள் மூலமும், உணவுகளிலும் சிறிது சிறிதாக உயிர்க்கொல்லி நஞ்சு கொடுக்கப்பட்டதாகவும், இதுவரையில் 107 போராளிகள் உயிர் இழந்துள்ளனர் என்றும், பல இடங்களில் விடுதலைப் புலிகள் வெளியே தெரியாமல் வதை முகாம்களில் வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்ற செய்திகளும் வெளியாகி இருப்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது.
உயிர்க்கொல்லி நஞ்சு கொடுத்து கொல்லப்பட்ட 107 விடுதலைப் புலிகள் குறித்தும், அத்தகைய உயிர் ஆபத்தில் சிக்கியுள்ள போராளிகள் குறித்தும், காணாமல் போனவர்களின் கதி என்ன என்பதை அறியும் வகையிலும் ஐ.நா.மன்றமும், செஞ்சிலுவைச் சங்கமும், மனித உரிமைகள் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் : 18
கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய அண்டை மாநிலங்கள் தமிழகத்துக்கு உரிய சட்டப்படியான தண்ணீரைத் தர மறுப்பதும், அம்மாநிலங்களில் புதிய அணைகளைக் கட்ட முற்படுவதுமான ஆபத்து சூழ்ந்து வருகின்ற வேளையில், அணை பாதுகாப்பு என்ற பெயரில், மத்திய அரசில் பணியாற்றுகின்ற கேரள அதிகாரிகள் தயாரித்துக் கொடுத்த ஒரு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம் வகுத்துக் கொண்டு இருக்கின்றது.
இந்த மசோதா சட்டமாக ஆக்கப்பட்டால், ஒரு மாநிலத்திற்குள் அமைந்து இருக்கின்ற நீர்த்தேக்கங்களை, அம்மாநில அரசே பராமரிக்கவோ, ஏன் உடைக்கவும் அதிகாரம் பெற்று விடும். இது அந்த நதிநீரைப் பயன்படுத்தும் அண்டை மாநிலங்களின் உரிமையை அடியோடு பறிப்பதாகும்.
2011 ஆம் ஆண்டு டிசம்பர் 5 இல் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை கழகப் பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து, இதுபோன்ற மசோதாவை சட்டமாக ஆக்கக்கூடாது; அப்படிச் சட்டமாக்கினால், அந்தந்த மாநில அரசுகள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட மத்திய அரசு நிறுவனங்களைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக் கொள்ளும் ஆபத்து நேரிடும்; சோவியத் ஒன்றியம் சிதறியது போல் இந்தியாவும் உடைய நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
எனவே அணை பாதுகhப்பு மசோதாவை மத்திய அரசு எக்கhரணம் கொண்டும் சட்டமாக்க முயற்சிக்கக் கூடாது; மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் : 19
உச்ச நீதிமன்றத்தின் இடைக்கhல உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய நீரை காவிரியில் திறந்துவிட வலியுறுத்தியும், கர்நாடகhவில் தமிழ்நாட்டுக்கு எதிராக நடந்துவரும் வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு அமைக்க வலியுறுத்தியும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் செப்டம்பர் 16 அன்று தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றது.
அன்று நடைபெற இருக்கின்ற தொடர் வண்டி மறியல் போராட்டம், சாலை மறியல் அறப்போராட்டங்களில் மறுமலர்ச்சி திமுக தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமெனவும், தமிழ் நாட்டின் உயிர் ஆதாரமான காவிரியில் நமது உரிமையை நிலைநாட்ட முழு அடைப்புப் போராட்டத்தைத் தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகமான தாயகம் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment