தமிழகத்தின் உயிர் வாழ்வாதாரமான காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் 1970 ஆம் ஆண்டிலிருந்தே கர்நாடகம் 1924 ஒப்பந்தத்துக்கு எதிராகவும், ஒப்பந்த சரத்துக்களையும், விதிகளையும் காற்றில் பறக்கவிட்டு ஹேமாவதி, ஹேரங்கி, கபினியில் அணைகள் கட்டியது. காங்கிரஸ் தலைமையிலான அன்றைய மத்திய அரசு, அப்போதும் தமிழகத்தை வஞ்சித்தது. இப்பிரச்சினை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா, 1990 ஏப்ரல் 24 ஆம் தேதி, காவிரி நடுவர் மன்றம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு ஆணையிட்டதன் பேரில், 1990 ஜூன் 2 ஆம் தேதி அன்று அன்றைய பிரதமர் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் நடுவர் மன்றம் அமைத்தார்கள்.
காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பாக 1991 ஜூன் 25 ஆம் தேதி, தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று அறிவித்தது.
அன்றைய மத்திய அரசு, இடைக்கால தீர்ப்பினை 1991 டிசம்பரில் அரசிதழில் வெளியிட்டபோது, கர்நாடக அரசு, கன்னட வெறியர்களைத் தூண்டிவிட்டு கலவரம் நடத்தியது. தமிழர்கள் தாக்கப்பட்டனர். தமிழர்களின் வீடுகள், கடைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. உடைமைகள் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு அகதிகளாக தமிழர்கள் வந்தனர்.
காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை 2007 பிப்ரவரி 5ஆம் தேதி அறிவித்தது. அதில் காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசு 2012 இறுதி வரையிலும் அரசிதழில் வெளிடவும் இல்லை, மேலாண்மை வாரியம் அமைக்கவும் இல்லை.
2013 ஜனவரி 4 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின், நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும். அதனைச் செய்ய முடியுமா? முடியாதா? என்று மத்திய அரசுக்குக் கெடு விதித்ததால்தான், வேறு வழியின்றி மத்திய காங்கிரஸ் அரசு 2013 பிப்ரவரி 20 ஆம் தேதி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வரவில்லை.
2014 இல் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நரேந்திர மோடி தலைமையில் அமைந்த உடன், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்க வேண்டும் என வற்புறுத்தி கோரிக்கை மனுவைத் தந்தார். 28 மாதங்கள் கடந்தும் நரேந்திர மோடி அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைத்தது.
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி, செப்டம்பர் 20 ஆம் தேதி வரை 65 டி.எம்.சி. தண்ணீர் மேட்டூருக்குத் திறந்துவிட வேண்டிய கடமை கர்நாடக அரசுக்கு உள்ளது. ஆனால், செப்டம்பர் 5 ஆம் தேதி உச்ச நீதிமன்றம், வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று அறிவித்த பின்னர், தமிழர்களுக்கு எதிராக கர்நாடகத்தில் கன்னட வெறியர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். தமிழர்களுடைய கடைகள், உடைமைகள் சூறையாடப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து சென்ற கே.பி.என். நிறுவனத்தின் 45 சொகுசு பேருந்துகள் கொளுத்தப்பட்டன. 200 க்கும் மேற்பட்ட லாரிகள் நொறுக்கப்பட்டன; தீயிடப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் தாக்கப்பட்டனர். ஒரு சொட்டு தண்ணீரும் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்ற கன்னட வெறிக் கூச்சலுக்கு அம்மாநில முதல்வர் காங்கிரஸ் கட்சியின் சித்தராமய்ய திரைமறைவிலிருந்து ஊக்குவித்தார். பாரதிய ஜனதா கட்சி கலவரத்தின் பின்னணியில் பெரும்பங்கு வகித்தது. ஆனால் தமிழகம் அமைதி காத்தது.
செப்டம்பர் 16 இல் தமிழ்நாட்டில் முழு அடைப்பு அறவழியில் அமைதியாக நடந்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் தினசரி 12 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடச் சொன்னது.
செப்டம்பர் 20 ஆம் தேதி உச்ச நீதிமன்த்தில் தமிழ்நாட்டுக்கு நீதி கிடைத்த முக்கியமான நாளாகும். மத்திய அரசு நான்கு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. தீர்ப்பு வந்த 24 மணி நேரத்திற்குள், ஒரு சொட்டு தண்ணீரும் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட முடியாது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கவும் செய்தார் கார்நாடக முதல்வர் சித்தராமய்யா. முன்னாள் பிரதமரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான தேவேகவுடா தந்த ஆலோசனை இது என்றும் கூறி உள்ளார்.
இந்த தேவேகவுடா எப்படிப்பட்டவர் தெரியுமா? காவிரி நடுவர் மன்றத்தின் நடுவராக இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நேர்மையாளர் சித்ததோஸ் முகர்ஜி தமிழ்நாடு, கர்நாடகம் இரு மாநிலங்களையும் பார்வையிட்டபோது, தமிழ்நாட்டில் கோயிலுக்குச் சென்றார் என்று கூறி, சித்ததோஸ் முகர்ஜி பாரபட்சமாக நடப்பார் என்று தேவேகவுடா குற்றம் சாட்டினார். அதனால் சித்ததோஸ் முகர்ஜி நடுவர் மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 20 ஆம் தேதி தந்த தீர்ப்பில் கர்நாடக அரசு வினாடி 6000 கன அடி தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டும் என்று அறிவித்த ஆணையை ஒருக்காலும் நிறைவேற்றப்போவது இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.
இந்தப் போக்குக்கு என்ன காரணம்? முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்களான சபர்வால், தாக்கர், பாலசுப்பிரமணியம் ஆகியோர் 2006 பிப்ரவரி 26 ஆம் தேதி தமிழ்நாட்டின் சட்டபூர்வ உரிமையை அங்கீகரித்து, 142 அடி வரை தண்ணீர் உயர்த்திக் கொள்ளலாம்; பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு 152 அடி வரையிலும் தண்ணீரை உயர்த்திக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கினார்கள்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை கேரள அரசு குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, முல்லைப் பெரியாறில் 136 அடிக்கு மேல் தண்ணீரை உயர்த்த முடியாது; இந்தியாவில் எந்த நீதிமன்றமும் இதில் தலையிட முடியாது என்று கேரள சட்டமன்றத்தில் சட்டமாக்கியபோதே, இந்திய அரசின் இறையாண்மை கேள்விக்குறியானது. அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு இந்த அக்கிரமத்தைக் கண்டிக்கவும் இல்லை.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் 7, 8 தேதிகளில் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் வீட்டில் நடந்த சதி ஆலோசனைக் கூட்டத்தில், கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.களும் பங்கேற்றனர். கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவும், சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் அதில் பங்கேற்றனர். மேகதாட்டு, ராசி மணலில் அணைகள் கட்ட மத்திய அரசு வெளிப்படையாக அனுமதி கொடுப்பதில்லை என்றும், ஆனால் கர்நாடக அரசு அணைகள் கட்டிக்கொள்ளலாம் என்றும் இந்தக் கூட்டத்தில் ஒரு நயவஞ்சத் திட்டத்தை முடிவு செய்தனர்.
அணை கட்டும் ஆயத்த வேலைகள் நடக்கின்றன. மேகதாட்டுவில் அணை கட்ட முதல் கட்டமாக 1592 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டதாக, ஆகஸ்ட் 15 விடுதலை நாள் உரையில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அறிவித்தார். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, கர்நாடகா மேகதாட்டுவில் அணை கட்டுவது அவர்கள் உரிமை. அந்த அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்று இப்பிரச்சினையைப் பற்றி எதுவும் தெரியாத அறிவீனத்தோடு கூறினார்.
மேகதாட்டு, ராசிமணலில் அணைகள் கட்டிவிட்டால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு உபரி தண்ணீரும் வராது. உச்ச நீதிமன்றம் எந்தத் தீர்ப்புக் கொடுத்தாலும் தமிழகத்தைக் காப்பாற்றாது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பஞ்ச பிரதேசம் ஆகும். தென்னிந்தியாவின் நெல் களஞ்சியம் பிச்சை பாத்திரமாகும்.
இத்தகைய ஆபத்து தமிழகத்தைச் சூழ்ந்த வேளையில், இடிமேல் இடியாக மத்திய அரசு, அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றத் துடிக்கிறது. அம்மசோதா சட்டமானால் கேரளம், கர்நாடகம், ஆந்திரத்திலிருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்காது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் அனுபவித்து வந்த நதி நீர் உரிமைகளை அடியோடு பறிகொடுப்போம்.
தமிழகத்தை காப்பது எப்படி? அபாயமும், சோதனையும் தமிழகத்தைச் சூழ்ந்துவரும் வேளையில், முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினைகளில் முறையான சட்டபூர்வ அணுகுமுறைகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் அவர்கள், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.
சிறுவாணி பிரச்சினையில் தமிழக உரிமை காக்க முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தபோது, திமுக வரவேற்கத்தானே செய்தது. அதுபோல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதில் மேலாண்மை வாரியம் குறித்தும், கர்நாடகத்தின் அக்கிரமத்தைத் தடுப்பது குறித்தும், அணை பாதுகாப்பு மசோதாவை தடுப்பது குறித்தும் முதலமைச்சர் கொண்டு வரும் தீர்மானத்தை அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக்கொள்வர்.
அனைத்துக் கட்சி பிரதிநிதிகளோடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து, தமிழகத்தின் நியாயத்தை வலியுறுத்தும்போது, இப்பிரச்சினையில் இதுவரை துரோகம் இழைத்த பிரதமர், நிலைமை விபரீதமாகக் கூடும் என்று உணர்வார்.
வட துருவம், தென் துருவம் போல ஒருவருக்கொருவர் எதிராக இருந்த அண்ணா திமுகவும், திமுகவும், அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலாக எழுந்து நிற்பதைக் காணும்போது மத்திய அரசு அதிகார வட்டத்தில் அதிர்ச்சி அலைகள் எழும்.
தமிழக நலன்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் கொண்ட தமிழக முதல்வர் அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதே சாலச் சிறந்ததாக அமையும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment