காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம்
அளித்துள்ள தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டப்படியான
கடமைதான் கர்நாடகத்திற்கு
உண்டே தவிர, இனி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.
1974 க்குப் பிறகு இரு மாநிலங்களுக்கும்
இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. எனவேதான், 1990, ஏப்ரல் 24 இல் உச்சநீதிமன்றத்
தலைமை நீதிபதி மாண்புமிகு ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் தலைமையிலான அமர்வு, காவிரி நடுவர்மன்றம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில்தான் வி.பி.சிங் அரசு 1990, ஜூன் 2 ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் அமைத்தது. அம்மன்றம், 1991, ஜூன் 25 ஆம் தேதி இடைக்காலத் தீர்ப்பை அளித்தது.
இத்தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் கர்நாடகாவில் அப்போதைய பங்காரப்பா அரசு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு
எதிராகச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியது.
அதற்கு உச்சநீதிமன்றம்
கர்நாடக மாநில அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் கர்நாடக அரசு கொண்டு வந்த சட்டத்தையும்
இரத்து செய்தது.
அதன் பின்னர் 1991, டிசம்பர் 11 இல் காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டபோது கர்நாடக அரசு தமிழர்களுக்கு எதிரான கலவரத்தைத் தூண்டியது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கர்நாடகாவில் இருந்து அடித்து விரட்டப்பட்டு தமிழகத்திற்கு
அகதிகளாக வரும் நிலைமை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான
கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன.
2007, பிப்ரவரி 5 இல் காவிரி நடுவர்மன்றம்
இறுதித் தீர்ப்பை வழங்கிய பிறகும், அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்று கர்நாடக மாநிலம் அடாவடித்தனமாகச்
செயல்பட்டது.
கர்நாடக மாநிலம் காவிரிப் பிரச்சினையில் அரசியல் சட்டத்தையோ, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையோ நடைமுறைப்படுத்தாமல் காலில் போட்டு மிதித்து வருகின்றது. எனவேதான் தற்போதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியது.
அத்தீர்மானத்தையும் உச்சநீதிமன்றம்
ஏற்கவில்லை.
இந்நிலையில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சில குரல்கள் எழுவது தமிழகத்திற்குப் பெருங்கேடாகத்தான் முடியும். காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக்குழு அமைப்பது மட்டும்தான் ஒரே தீர்வு ஆகும். இதைத்தான் உச்சநீதிமன்றமும்
தெளிவாகத் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கர்நாடக மாநிலம் நிறைவேற்றுவதற்கு
மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு.
அதைத் தவிர, கர்நாடக மாநிலத்தின் சட்ட விரோதப் போக்குகளை அனுமதிப்பதோ, மீண்டும் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் விழுவதோ, காவிரியில் தமிழகத்தின்
உரிமையை நிலைநாட்ட வழி இல்லாமல் போகும் ஆபத்து நேரிடும் என எச்சரிக்கை செய்கின்றேன்.
மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்கு முறைக் குழுவை உடனே அமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என வைகோ தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment