சரவணன் தற்கொலை செய்து கொண்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் அப்போது கூறியதை, அவரது பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் ஏற்கவில்லை. மாணவர் சரவணன் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அவரது மரணத்தின் மூலம் காலியாகும் முதுநிலை மருத்துவ இடத்துக்கு வேறொருவர் படிக்க இடம் கிடைக்கும் என்பதால், விஷ ஊசி ஏற்றப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்று எழுப்பப்பட்ட ஐயப்பாட்டை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஒரு பொருட்டாக கருதாமல் அலட்சியப்படுத்தியது.
ஆனால் மருத்துவ மாணவர் சரவணன் உடலை உடற்கூறு ஆய்வு செய்த, சுதிர் கே.குப்தா தலைமையிலான மருத்துவர் குழு, சரவணன் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. சரவணன் உடலில் யாரோ விஷ ஊசியை செலுத்தியிருக்க வேண்டும். மருத்துவம் தெரிந்தவர்களால்தான் இந்த ஊசியை செலுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. மாணவர் சரவணன் விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்டு இருக்கிறார் என்பது உடற்கூறு ஆய்வின் மூலம் வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது.
மத்திய அரசு உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, மாணவர் திருப்பூர் சரவணன் கொலைக்குக் காரணமானவர்களை கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.
2008 ஆம் ஆண்டு, பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ராகுல்ராஜ் என்ற இளைஞர் மும்பையில் மராட்டிய மாநில காவல்துறையினரல் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது அந்தச் சம்பவம் பீகாரையே உலுக்கியது. பீகார் மாணவர் ராகுல்ராஜ் படுகொலைக்கு நீதி கேட்டு, பீகார் முதல்வர் நிதீஷ்குமார், அப்போதைய மத்திய இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் பீகார் மாநில எம்.பி.க்கள் அனைவரும் ஒருசேர குரல் எழுப்பினார்கள், ஒட்டுமொத்த பீகாரும் கொதித்து எழுந்தது.
ஆனால் தமிழ்நாட்டில் இருந்து தில்லியில் மருத்துவ உயர்படிப்புக்குச் சென்ற திருப்பூர் மாணவர் சரவணன், மருத்துவக் கல்லூரியில் விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்ட கொடூரம் கண்டு தமிழகம் கொந்தளிக்காமல் அமைதி காப்பது வேதனை தருகிறது. தமிழர்கள் நாதி அற்றவர்களா? டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள அதிமுக எம்.பி.க்களுக்கும், திமுக எம்.பி.க்களுக்கும் ‘தமிழர் நலன்’ தவிர மற்ற பணிகள் ஏராளமாக இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் நான் ஒருமுறை சொன்னேன், “டில்லியிலே நாங்கள் அந்நியர்கள்; அப்படித்தான் உணர்கிறேன். இது எங்களின் சொந்த நாடு என்ற உணர்வை இங்குள்ளவர்கள் எங்களுக்கு ஏற்படுத்தவில்லை” என்று. அதே நிலைமைதான் இன்றும் நீடிக்கிறது.
தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு திருப்பூர் மருத்துவ மாணவர் சரவணன் கொலைக்கு பின்னணியில் இருந்தவர்களை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும். எய்ம்Þ மருத்துவக் கல்லூரியில் கொல்லப்பட்ட மாணவர் சரவணன் குடும்பத்திற்கு மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment