Monday, September 5, 2016

காவிரியில் முறையான நீர்ப் பங்கீட்டை உறுதி செய்திட காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு அமைப்பதுதான் ஒரே தீர்வு-வைகோ!

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில், தமிழகத்தின் நிலைமையை உணர்ந்த உச்ச நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதிஅளித்த தீர்ப்பில், ‘மூன்று மாதங்களாக நீரின்றி தவிக்கும் தமிழகத்துக்குக் கர்நாடக மாநிலம் உடனடியாக காவிரி நீரைத் திறந்து விட வேண்டும். எக்காரணம் கொண்டும் கர்நாடகா, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மீறுவதை அனுமதிக்க முடியாது’ என்று உத்தரவிட்டது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 50.052 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு ஆறுதல் தருவதாக இருந்தது. இதனையடுத்து கர்நாடக மாநிலம் ஆயிரம் கன அடி நீரை மட்டுமே காவிரியில் திறந்து விட்டது.

இன்று (செப்டம்பர் 5) தமிழக அரசு தொடுத்த வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம், ‘காவிரியில் தினமும 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடக மாநிலம் தண்ணீர் திறந்துவிட வேண்டும்; தமிழகம் காவிரி கண்காணிப்புக் குழுவை அணுகி, தமது கோரிக்கைகளை மூன்று நாட்களில் அளிக்க வேண்டும்; கர்நாடக அரசின் நிலையையும் கேட்டறிந்து காவிரி கண்காணிப்புக் குழு நான்கு நாட்களில் ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் தேவையை அறிந்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்த உத்தரவு வரவேற்கக் கூடியதாகும்.

காவிரியில் நீர் இன்றி தஞ்சை உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகும்போது, தமிழகம் உச்ச நீதிமன்றத்தை நாடி தண்ணீர் பெறுவதற்கு போராட வேண்டிய நிலைமைதான் இன்னும் தொடர்கிறது. பிப்ரவரி 5, 2007 இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய இரு அமைப்புகளை மத்திய அரசு அமைத்து இருந்தால் தமிழகம் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்காது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த, கர்நாடக மாநில அரசு முன்வராதபோது, மத்திய அரசு தலையிட்டுத் தட்டிக் கேட்டிருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் கூட்டணி அரசு பிப்ரவரி 5, 2007 இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை மத்திய அரசு இதழில் வெளியிடாமல் ஆறு ஆண்டு காலம் கடத்தி, மீண்டும் உச்ச நீதிமன்றம் இடித்துரைத்த பின்னர் மார்ச் 19, 2013 இல் அரசு இதழில் வெளியிட்டது.

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்று 28 மாதங்கள் ஆன பின்னரும் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முயற்சிக்காமல் வஞ்சித்து வருகின்றது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்காமல் கர்நாடக மாநிலத்துக்குத் துணை போகும் விதத்தில் தமிழகத்திற்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் மோடி அரசின் நிலைப்பாடு கடும கண்டனத்துக்கு உரியதாகும்.

அண்டை மாநிலங்களால் நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் நிலைமை காவிரி மட்டுமின்றி முல்லைப் பெரியாறு, பாலாறு, பாம்பாறு, பவானி ஆறு, சிறுவானி ஆறு என்று நீண்டுகொண்டே போவது ஒருமைப்பாட்டுக்கு வழி வகுக்குமா? என்பதை மோடி அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி. நீரைப் பெறுவதற்கு கர்நாடக மாநிலத்தை வழிக்குக் கொண்டு வரவும், நீர்ப் பற்றாக்குறை காலங்களில் முறையான பங்கீட்டை உறுதி செய்யவும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய இரண்டு அமைப்புகளை சட்டப்படி மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment