சென்னை, நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி காலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இளம் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று சிறைத்துறையினர் கூறுவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அவருடைய சொந்த ஊரில் ஜூலை 1 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினர் ராம்குமாரை கைது செய்த போதே, கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. நாட்டையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி என்று கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் தக்க பாதுகாப்புடன்தான் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். ராம்குமார் சிறையின் உள்ளே கட்டுக்காவல்களை மீறி, சமையல் அறைக்குச் சென்று மின் கம்பியை கடித்து, தன் உடலில் தானே மின்சாரத்தைப் பாய்ச்சி தற்கொலைக்கு முயன்றார் என்று கூறப்படுவது நம்பும் படியாக இல்லை.
அப்படி எனில் புழல் சிறையில் கண்காணிப்புகள் இல்லாமல்தான் கைதிகள் இருக்கின்றனரா? சிறைக் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் வரை காவலர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்களா? சிறையில் நடந்த இந்தச் செயலுக்கு சிறைத்துறை அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஒரு முக்கியமான கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் சிறையில் தற்சொலை செய்து கொண்டார் என்று அரசு தரப்பில் கூறப்படுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. சுவாதி கொலை வழக்கின் பின்னணி குறித்தும், சிறையில் ராம்குமார் தற்கொலை குறித்தும், உயர்நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டு முழு விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment