நெல்லை மாவட்டத்தில் மீனவ மக்கள் வாழ்கின்ற உவரி, கத்தோலிக்க கிறித்தவப் பெருமக்கள் நிறைந்த ஊராகும். இன்று மாதா பிறந்தநாள் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான கிறித்தவ மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினர். மாதாவுக்குச் சிறப்புச் செய்யும் வகையில் தேர் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது ராஜா, நிமோ, கிளைவ், ராஜ் ஆகிய நான்கு மீனவச் சகோதரர்களை மின்சாரம் தாக்கியது. திசையன்விளை கிறிஸ்டோபர் மருத்துவமனைக்குக் சொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் உயிர் இழந்தனர். மேலும் பதினைந்து பேர் படுகாயமுற்று உயிர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி அறிந்த மாத்திரத்தில் தாங்க முடியாத அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிர் இழந்த நால்வரும் அன்றாட மீன்பிடித் தொழிலுக்குச் சென்று வாழ்கிற ஏழைகளாவர். காயமுற்று மருத்துவமனையில் இருப்போரும் அத்தகையவர்கள்தான். திருவிழா நடைபெறுவது அறிந்திருந்தும் மின்வாரியப் பணியாளர்கள் முறையாக ஒழுங்கு படுத்தாததால் இந்தக் கோர விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழ் நாட்டிலேயே நூறாண்டுகளுக்கு முன்னரே ஊரில் எவரும் மது அருந்துவதில்லை என்று கிறித்தவப் பாதிரியார்கள் முன்னிலையில் உறுதி மேற்கொண்டு, அதனைப் பின்பற்றி வருகிற பண்புள்ள ஊர்தான் உவரி ஆகும்.
உயிர் இழந்த நான்கு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து இலட்ச ரூபாய் இழப்பீடும், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிற சகோதரர்களுக்கு தக்க மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதோடு, அக்குடும்பங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
உயிர் இழந்த மீனவச் சகோதரர்களின் மறைவினால் கண்ணீரில் பரிதவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment