காவிரி நதி நீர்ப் பங்கீட்டு வழக்கில் தமிழ்நாட்டின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்த உச்சநீதிமன்றம், கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், கர்நாடக அரசு, ‘தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
இதனை ஏற்காத உச்சநீதிமன்றம், ‘செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 6 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், அந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்காக, இரு மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது.
செப்டம்பர் 29 ஆம் தேதி டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘தமிழகத்திற்குக் காவிரி நீரைத் திறக்க முடியாது’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இன்று செப்டம்பர் 30 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மாண்பமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கி அமர்வு காவிரி பிரச்சினை குறித்த மனுக்களை விசாரித்தது. ‘கடந்த 20 ஆம் தேதி அளித்த தீர்ப்பின்படி, ‘தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை அக்டோபர் 6ஆம் தேதி வரை காவிரியில் திறந்துவிட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது.
உச்ச நீதிமன்ற உத்தரவுகளைக் கர்நாடக மாநில அரசு தொடர்ந்து அவமதித்து வருகின்றது; இதுவே கர்நாடக மாநிலத்திற்குக் கடைசி எச்சரிக்கை’ என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; இன்று மாலை 5 மணிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும்.
அக்டோபர் 1 ஆம் தேதி மாலைக்குள் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம்பெறும் தங்கள் மாநில பிரதிநிதிகளைப் பரிந்துரைக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, அக்டோபர் 6 ஆம் தேதிக்குள் தமிழக, கர்நாடக அணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உச்சநீதிமன்றத்தில் ஆய்வு அறிக்கை அளிக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்காக உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்கின்றது.
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்பதுடன், உச்ச நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment