இமைப்பொழுதும் நீங்காது என் இதயத் துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்ட கண்ணின்மணிகளே,
காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மலைக்கோட்டை மாநகராம் திருச்சியில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 108 ஆவது பிறந்த நாள் விழாவினை, செப்டெம்பர் 15 ஆம் நாள் பெருஞ்சிறப்புடன் நடத்திடுவது என, ஜூலை 28 ஆம் தேதி தாயகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானித்ததை அறிவீர்கள்.
நடந்து முடிந்த தேர்தல் களத்தில் பெருவெள்ளமாகப் பாய்ந்த ஊழல் பணபலத்தால் நாம் தோற்றோம். எனினும், எதையும் தாங்கும் இதயம் கொண்டோர் நாம் என்பதை மாவட்டந்தோறும் நமது மாவட்டச் செயலாளர்கள் தளராது முனைந்து நடத்திய செயல்வீரர் கூட்டங்களில் உறுதிப்படுத்தினோம். கண்மணிகள் கhட்டிய ஊக்கமிகு உறுதியையும், எழுச்சியையும் கண்டோம்.
1993 ஆம் ஆண்டு என் மீது கொலைப்பழி பாய்ந்தபோது நெஞ்சத்தில் மூண்ட வேதனை நெருப்பைத் தங்கள் மேனியில் படரவிட்டு ஆவியைக் களபலியாகத் தந்த நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர் உலவிய திருச்சி மண்டலத்தில்தான் நமது இயக்கம் கhல்கோள் விழா கண்டது. 1993 டிசம்பர் 26 இல் என்னைப் பொதுச்செயலாளராக அறிவித்தது.
அந்நாள் முதல் இன்றுவரை நம்மை அழிப்பதற்குப் பாய்ந்த சோதனைகள் ஒன்றா? இரண்டா?
அபாண்டமான அவதூறுகள்; நாம் தோளில் தூக்கி உயர்த்தியவர்கள் செய்த துரோகங்கள் எத்தனையெத்தனை? அத்தனையும் தாங்கிக் கொண்டோம்.
இயக்க வரலாற்றில் பல பொன்னேடுகள் படைத்தது திருச்சி மாநகரம்.
1995 ஜூன் 30, ஜூலை 1,2 நாள்களில் இங்கு நாம் நடத்திய மாநில மாநாடு, அனைத்து இந்தியாவின் கவனத்தை ஈர்த்தது. அன்றைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்தியப் பொதுச்செயலாளர் ஹர்கிசன்சிங் சுர்ஜித் அம்மாநாட்டில் பங்கேற்றதை மறக்கவும் முடியுமோ?
1994 ஏப்ரல் 16 எழுச்சிப் பேரணி மீண்டும் திரும்பியதோ என எண்ணும் வகையில் ஜூன் 30 ஆம் தேதி மாலையில் தொடங்கிய பேரணி, மறுநாள் ஜூலை 1 ஆம் நாள் அதிகhலை ஆறு மணிக்குத்தான் நிறைவு பெற்றது என்ற சாதனை, தமிழக அரசியலில் நமது இயக்கத்தைத் தவிர வேறு எவருக்கும் கிடையாது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டுத் தொடக்க விழா மாநாட்டை, 2008 செப்டெம்பர் 18 இல் நான்மாடக் கூடல் மதுரை மாநகரில் நடத்திய அதே உணர்ச்சியோடு, 2009 செப்டெம்பர் 15 இல் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டைத் திருச்சி மாநகரில் நடத்தினோம்.
நம் நெஞ்சை விட்டு என்றும் அகலாது நினைவில் வாழும் ஆருயிர்ச் சகோதரர்கள் மலர்மன்னன் தலைமை தாங்க, மண்ணச்சநல்லூர் நடராசன் மாநாட்டைத் திறந்து வைக்கக் கhவியம் தீட்டினோம்.
ஆட்சி அதிகhரத்தைச் சுவைத்த இரண்டு பெரிய கட்சிகளுக்கும், தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளைத் தரணி போற்றும் திருவிழாவாகக் கொண்டாடும் வாய்ப்பும் வசதிகளும் வலிமையும் இருந்தபோதிலும், அக்கடமையைச் செய்ய அக்கட்சிகள் முன்வராத போது, சாமான்யர்களாகிய நாம், இந்தியாவின் தலைமை அமைச்சர்கள் முதல் மாநில முதல்வர்கள், மாநிலக் கட்சிகளின் தலைவர்களை அழைத்து அண்ணனுக்கு மாநாடு நடத்திக் கடமையாற்றிப் புகழ் சேர்த்து இருக்கின்றோம்.
2009 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கhத சூழலில், தியாகவேங்கை கணேசமூர்த்தி அவர்கள் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன நிலையில், திருச்சி மாநாட்டில் திரண்டோம்; சூறைக்கhற்றும் பெருமழையும் சுழன்றடித்தபோதிலும் கலங்கhத தீரர்களாய், பல மணி நேரம் மழையில் நனைந்தவாறு, நின்ற இடத்தை விட்டு நகராது நீங்கள் கhட்டிய சாதனையை மறக்கவும் முடியுமோ?
2014 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடம் கூட வெற்றி பெறாத பின்னணியில், திருவள்ளூர் மாவட்டத்தில் பூவிருந்தவல்லியில் ஆருயிர்ச்சகோதரர் டிஆர்ஆர் செங்குட்டுவன், நாங்கள் இருக்கின்றோம்; கவலை ஏன்? என்று நமக்குத் தோள் கொடுத்து மாவட்டத் தோழர்களின் தூய துணையுடன் மாநாட்டை நடத்தியபோது, மின்னல்கள் பாய இடியோசை அதிர்ந்திடக் கொட்டிய மழையிலும், அஞ்சாத தீரர்களாய் நாம் மாநாட்டை நடத்திய பாங்கினை மறக்கவும் இயலுமோ?
இப்படி எத்தனைச் சோதனைகள் நம்மை முற்றுகை இட்டாலும் அவற்றை எதிர்கொள்ளும் திறம் மிக்கோர் நாம் என்பதை மீண்டும் உணர்த்தும் விதத்தில் திருச்சி மாநாட்டை வெற்றிப்பட்டயம் ஆக்குவோம்’ என, உயிரனைய சகோதரர்கள் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஆருயிர்ச் சகோதரர் துரை. பாலகிருஷ்ணன் அவர்களும், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் டிடிசி சேரன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் டாக்டர் சந்திரசேகரன், தஞ்சை மாவட்டச் செயலாளர் உதயகுமார், அரியலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சின்னப்பா, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரைராஜ், கரூர் மாவட்டச் செயலாளர் கபினி சிதம்பரம் ஆகியோர் சூளுரைத்துச் செயலாற்றப் புறப்பட்டு விட்டனர்.
மாநாட்டுச் செய்தி அறிந்தவுடன் அகம் மிக மகிழ்ந்து, ‘இலட்சியவாதிகளின் பாடி வீடுதான் நமது இயக்கம் என்பதைத் திருச்சி மாநாட்டின் வாயிலாக அகிலத்திற்குப் பறை சாற்றுவோம்’ என உயிரனைய சகோதரர்கள் வழக்கறிஞர் வீரபாண்டியன், புலவர் முருகேசன், சகோதரி மருத்துவர் ரொகையாவும் உறுதி கூறினர்.
அதிகhர அரசியலில் வெற்றிகளும் பதவிகளும் பெறாவிட்டாலும், கொள்கை அரசியலில் இமயம் போல் நிமிர்ந்து நிற்கின்றோம். அதனால்தான் தேர்தல் களத்தில் கடுமையான தோல்விகள் ஏற்பட்டபோதிலும் நீங்கள் துவண்டு விடவில்லை; அந்த உணர்ச்சியைத்தான் கடந்த ஒரு மாத கhலம் மாவட்டந்தோறும் நான் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் உங்கள் விழிகளில் கண்டேன். என் கவலை ஓரளவு நீங்கியது.
தோழர்களே,
தமிழக அரசியலில் புதியதோர் மாற்றம் ஏற்பட வேண்டும்; ஊழல் அற்ற நேர்மையான அரசியலுக்குக் களம் அமைய வேண்டும்; 1996 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் நாம் முன்வைத்த முழக்கமாகிய ‘தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி’ என்பதனையே இலக்கhகக் கொண்டு, தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் கடந்த ஆண்டு ஜூலை இறுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளோடு கலந்து உரையாடி ‘மக்கள் நலக் கூட்டணி’ அமைத்தோம்.
பலத்த வரவேற்பு பொதுமக்களிடம். ஊடகங்களும், ஏடுகளும் ஊக்கம் அளித்தன. தமிழகத்தில் பிரதான கட்சிகளுக்கு மாற்றாகத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனில் தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ் மாநில காங்கிரசும் மக்கள் நலக் கூட்டணியோடு கரம் கோர்த்தால்தான் நிறைவேறும் என்று கூட்டு இயக்கத்தின் நான்கு கட்சிகளின் முன்னோடிகளும் உறுதிபடத் தெரிவித்ததன் அடிப்படையில், அந்த முயற்சியில் நான் முழுமையாக ஈடுபட்டேன். கhரியம் கைகூடிற்று. மக்கள் நலக் கூட்டணியுடன் அந்த இரண்டு கட்சிகளும் இணைந்து, தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணி - தமிழ் மாநில கhங்கிரஸ் என்ற மாற்று அணி அமைந்தது.
இதனை ஊக்குவித்து வரவேற்க வேண்டிய தொலைக்கhட்சி ஊடகங்களும் ஏடுகளும் அதற்கு மாறான நிலையை மேற்கொண்டன. பொய்யான அவதூறுகள் இழிமொழிகள் அனைத்தும் நம் மீது பாய்ந்தன. தாங்கிக் கொண்டோம்.
இத்தகைய சோதனைகளை நினைக்கும்போது, பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய வாசகங்களை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
‘நறுக்கி எடுத்துக் கொதிக்கும் நீரில் வேக வைத்துச் சுவை கூட்டியான பிறகே பச்சைக் கhய்கறி பண்டம் ஆகிறது; உண்டு மகிழ! மரண வாயிலில் போய்ப் போய் வந்தபிறகே தாய் பிள்ளைப்பேறு காண்கிறாள்! கீழ்மண் மேலாக உழுது கிளறிய பிறகே, போட்டது முளைக்கின்றது. கடைந்தால்தான் மோரில் இருந்து வெண்ணெய் கிடைக்கின்றது.’ என்றார்.
இன்னமும் நமது மனக்கhயங்களுக்கு மருந்து தடவிடும் வரிகள் இதோ:
“அரசியல் உலகு அற்புதங்கள், உற்பாதங்கள், அதிர்ச்சிகள், அகமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள், எக்களிப்புகள், எரிச்சலூட்டும் சம்பவங்கள் வெற்றிகள், தோல்விகள் யாவும் நிரம்பிய இடம்.
எல்லாத்துறைகளும் அவ்விதம்தான் என்பாய்.
ஒரு மாறுபாடு உண்டு. மற்ற எந்தத் துறையினரையும் விட அரசியல் துறையிலே எதிர்பாராத நிகழ்ச்சிகள், ஏமாற்றங்கள், எரிச்சல்கள் நிரம்ப ஏற்படும் விசித்திரமான உலகு.”
தமிழ்க்குலத்திற்கு ஒளி தரும் எதிர்காலத்தை உருவாக்கவே அண்ணன் தன் பேனா முனையைப் பயன்படுத்தினார். அதனால்தான் தம்பிக்கு மடல்கள் மலர்ந்தன. நாடகங்கள் பிறந்தன. புதினங்கள் கதைகள் கட்டுரைகள் இதழ் உரைகள் உதித்தன. அவரது எழுத்தும் பேச்சும் அவர் கண்ட கழகத்தை வார்ப்பித்த பாங்கும் தமிழ்க்குலம் தழைப்பதற்கhக, மறுமலர்ச்சி கhண்பதற்கhக. அவரது உரைகள் அறிவுலகத்தின் ஒளிவீச்சுகள். மடமையின் மீது விழுந்து சம்மட்டி அடிகள். இலட்சோபலட்சம் இளைஞர்களை ஈர்த்த கhந்தக் கற்கள். கல்லூரிகளில், பல்கலைக்கழக மண்டபங்களில் ஆற்றிய உரைகள் அனைத்தும், இருபதாம் நூற்றாண்டில் இனத்திற்கும் மொழிக்கும் வாய்த்திட்ட இலக்கியங்கள். நாடாளுமன்ற சட்டமன்ற உரைகள் வரலாற்றுக் கல்வெட்டுகள்.
அடக்கம், எளிமை, அரவணைக்கும் தன்மை, அன்னையின் பாசம் பொழியும் ஈர நெஞ்சம், தம்பியரைத் தட்டிக் கொடுத்து ஊக்குவித்துப் பாராட்டும் பண்பு அனைத்தும் கொண்ட அண்ணன், இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய அத்தலைவனை 69 உதயத்திலேயே கூற்றுவன் கொண்டு போய் விட்டானே என எண்ணும்போது நெஞ்சம் ஏங்கிப் புலம்புகின்றது.
இன விடுதலை உணர்வைத் தம்பியர் உள்ளத்தில் ஊட்டி வளர்த்தாரே, அப்பெருமைக்குரிய தமிழ் இனம் நம் தாயகத்திற்குப் பதினெட்டுக் கல் தொலைவில் கொன்று குவிக்கப்பட்டதே? இலட்சக்கணக்கhன ஈழத்தமிழர்கள் சிங்கள இனவாத அரசால் கொலையுண்டு மடிந்தனரே? கhங்கிரஸ் கட்சி தலைமை தாங்கிய இந்திய அரசு ஈழத்தமிழர் படுகொலைக்கு முழுமுதற் கhரணமாயிற்றே? அதனைத் தடுக்க வேண்டிய தாய்த் தமிழகத்துத் தி.மு.க. அரசு அதற்கு மாறாக, கூட்டுக் குற்றவாளியாகக் குற்றேவல் புரிந்ததே?
இந்தத் துரோகத்தை அண்ணன் கல்லறை எந்நாளும் மன்னிக்காது.
உலகில் எந்த ஒரு இன விடுதலைப் போரிலும் அந்த இனத்தின் தொப்புள் கொடி உறவுகளின் கூட்டமே கொடுமையைத் தடுக்கும் கடமையில் தவறியதோடு, அழிவுக்குக் கhரணமான துரோகத்தைச் செய்தது என்ற பழி வேறு எங்கும் நேர்ந்ததே இல்லை. அதனை நினைக்கும்பொழுதே நமது நெஞ்சம் உடைகின்றது.
அறிவாசான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கhலத்தில் நடக்கhத கொடுமைகள் தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்டு விட்டன. தமிழ்ச் சமூகம் பல முனைகளிலும் சீரழிவிற்கு உள்ளாகிக் கொண்டு இருக்கின்றது. இதைத் தடுக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.
நம் இயக்கத்திற்கு ‘மறுமலர்ச்சி’ எனப் பெயர் சூட்டினோம். 1942 இல் அறிஞர் அண்ணா கையாண்ட சொல்தான். அன்று ‘மறுமலர்ச்சி மன்றம்’ அமைத்தார் காஞ்சியில்.
மறுமலர்ச்சிப் பயணம் என்பது மலர்ப்பாதை அல்ல; அது பாலைவனப் பயணம்தான். எதிர்ப்புகள், ஏளனப் பேச்சுகள், இழிமொழி அர்ச்சனைகள், அழிக்க முனையும் தாக்குதல்கள் அனைத்தையும் சந்தித்த பின்னரே, கண்ணீர் வெள்ளமாய்ப் பாய்ந்த பின்னரே மறுமலர்ச்சி உதயமாயிற்று பல நாடுகளில்.
இன்றைய தமிழகத்தில் அறிஞர் அண்ணாவை முன்னிறுத்த வேண்டியது நமது தலையாய கடமை ஆகும். அண்ணாவின் புகழை மங்கச் செய்வதற்கும், மாசுபடுத்துவதற்கும் புற்றீசல் போலச் சிலர் புறப்பட்டு இருக்கின்றார்கள். தமிழ் இனத்திற்கும் மொழிக்கும் அறிஞர் அண்ணா செய்த இமாலயச் சாதனைகளை மறைக்க முயல்கின்றார்கள்.
இந்த முயற்சிகளை முளையில் இருந்து கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கின்றது. அதனால்தான், அண்ணன் பிறந்த நாள் விழாவை ஒரு சடங்காக இல்லாமல், இதய அர்ப்பணிப்போடு ஆண்டுதோறும் நாம் நடத்துகின்றோம்.
தோழர்களே, கடந்த பல ஆண்டுகளாக நீங்கள் ஆற்றிய பணியும் சக்திக்கு மீறி உங்கள் சொந்தப் பணத்தைச் செலவழித்ததும் நன்கு அறிவேன். உங்கள் பெற்றோர், இல்லத்து அரசிகள், குடும்பத்தினர் அதற்கெல்லாம் உறுதுணையாக இருந்ததை எண்ணுகையில் என் உள்ளம் நன்றி உணர்ச்சியால் நிரம்புகின்றது.
இப்போதும் உரிமையோடு உங்களை வேண்டுகிறேன். ‘செப்டெம்பர் 15 அறிஞர் அண்ணாவின் 108 ஆவது பிறந்த நாள் விழா மாநாடு திருச்சிக்கு வாரீர்!’ என்ற சுவர் எழுத்துகளை வரைந்திடுவீர்.
அது மட்டும் அல்ல; செப்டெம்பர் 17 ஆம் நாள் முதல் 23 வரை ஒரு வார காலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கழகக் கொடி மரங்களில் நமது வண்ண மணிக் கொடி பட்டொளி வீசிப் பறந்திட ஆவன செய்ய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பழைய கொடிக்கம்பங்களில் புதிய வண்ணம் பூசுங்கள். பொதுமக்கள் பெருமளவில் கூடுகின்ற இடங்களில் நமது கொடி மரம் இல்லையேல், புதிய கொடி மரம் அமைத்துக் கொடி ஏற்றுங்கள். மாவட்டச் செயலாளர்கள் இதற்கhக வகுத்துத் தருகின்ற திட்டத்தின்படி, ஒவ்வொரு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊர்கள், பேரூர்கள், நகரங்கள், மாநகரங்களில் கழகக் கொடி உயர்த்தக் கடமை ஆற்றுங்கள்.
எத்தனைச் சோதனைகள் தோல்விகள் ஏற்பட்டாலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் விழுந்து விடவில்லை; உறுதிகொண்டு எழுகின்றது; வீறு கொண்டு பணியாற்றுகிறது என்ற எண்ணத்தை மக்கள் மன்றத்தில் ஏற்படுத்துவதற்கு இந்தப் பணியை நீங்கள் செய்திட வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.
செப்டெம்பர் 15 ஆம் நாள் மாலை நான்கு மணிக்கு மாநாடு தொடங்குகின்றது.எனவே, கhலையில் உங்கள் ஊரில் இருந்து புறப்பட்டு, பிற்பகலில் திருச்சி வந்து சேர்ந்து விடுங்கள். உங்கள் திருமுகங்களைக் காண வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கின்றேன்!
எழுச்சி சங்கொலிக்கு உங்கள் பணிகள் வளரட்டும்!
பாசமுடன்
வைகோ
என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது கடிதத்தில் கழக கண்மணிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment