உலகின் பல நாடுகளில் பேரினவாத அரசுகளாலும், அடக்குமுறை சர்வாதிகாரத்தாலும் படுகொலைகள் நடைபெற்ற காலங்களில் காணாமல் போனவர்கள் கதி என்ன? ரகசிய சிறைகளில் சித்திரவதை செய்யப்படுகின்றார்களா? அல்லது கொல்லப்பட்டு விட்டார்களா? என்பதை அறிந்து கொள்ள முடியாமல் உற்றார் உறவினர்களும், பாதிக்கப்பட்ட இன மக்களும் எழுப்பிய ஓலக்குரல் மனித உரிமை ஆர்வலர்களின் மனசாட்சியைத் தட்டியதால், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அரசு சாரா அமைப்புகளால் அறிவிக்கப்பட்டதுதான் ஆகஸ்ட் 30 ‘காணாமல் போனோர் நாள்’.
இனப்படுகொலைக்கும், இன அழிப்புக் கொடுமைக்கும் உள்ளாகிய பகுதிகளில் காணாமல் போனவர்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிய வேண்டியது, மனித உரிமைகள் கவுன்சில் ஆணையரின் பொறுப்பு ஆகும்.
அதுபோலவே செஞ்சிலுவைச் சங்கமும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. 189 நாடுகளில் இயங்குகின்ற அவர்கள்தான், செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடங்களுக்கு உள்ளேயும் சென்று தகவல்களைச் சேகரித்துத் தருகின்றார்கள். அதற்கு உரிய அனுமதியை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் வழங்கி இருக்கின்றது.
இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசுக்கும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே போர் மூண்டது. இதில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
1992 டிசம்பர் 18 ஆம் நாள் ஐ.நா. மன்றத்தின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 47/133 இன்படி, காணாமல் போனவர்கள் குறித்து உண்மையைக் கண்டறியவும், அவர்களைப் பாதுகாக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
மனித உரிமைகளை அழித்து, சிறைச்சாலைகளில் ரகசியமாக அடைத்து வைக்கின்ற கொடுமை 30 நாடுகளில் நடைபெற்று வருவதாக, ஐ.நா. மன்றம் தகவல் சேகரித்து உள்ளது.
2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் நாள் அன்று, பிலிப்பைன்ஸ் நாட்டில், அரசாங்கத்தின் உளவுத்துறை இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் குறித்து நீதி கேட்டுப் போராட்டம் நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி, காணாமல் போனோருக்கான அனைத்துலகக் கூட்டு அமைப்பு நீதிகேட்டுப் போராடியது.
2009 ஏப்ரல் மே திங்களில் சிங்கள இனவாத அரசு நடத்திய தமிழ் இன அழிப்புப் போரின் இறுதிக்கட்டத்தில் ஆயுதம் ஏந்தாத அப்பாவித் தமிழர்கள், தாய்மார்கள், முதியோர்கள், குழந்தைகள் உட்பட ஒன்றரை இலட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்ற உண்மையை, ஐ.நா. பொதுச் செயலாளர் அமைத்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு, ஆதார சாட்சியங்களோடு அறிக்கையாகத் தந்தது.
கவிஞர்கள் படைப்பாளிகள் கலைஞர்கள் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் காணவில்லை. அவர்கள் கொல்லப்பட்டார்களா? வதை முகhம்களில் சித்திரவதைக்கு ஆளாகி உள்ளனரா? உண்மை வெளிவர வேண்டும்; ரகசியச் சிறைகளில் இருப்போர் விடுதலையாக வேண்டும் என்று தொடர்ந்து தமிழ் இனக் கொலைக்கு நீதி கேட்கும் நாம் கோரி வருகின்றோம்.
தமிழ் ஈழ செய்தித் தொடர்பாளர் இசைக்கலைஞர் எனச் செயல்பட்ட தமிழ் நங்கை இசைப்பிரியா கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு 2009 இல் செய்தி வெளியிட்டது. ஆனால் அவர் கொடூரமான பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட படங்கள், சேனல் 4 தொலைக்காட்சியின் மூலம் உலகுக்குத் தெரிய வந்தது. அவர் ஆடை எதுவும் இன்றித் துடிக்கும் காட்சிக்கு அருகிலேயே நூற்றுக்கணக்கான ஈழத்தமிழ் இளைஞர்களும் ஒரு குளக்கரையில் அம்மணமாக உட்கார வைக்கப்பட்டு இருக்கும் காட்சியும் வெளியானது.
இறுதிப் போரின் போதுகாணாமல் போனவர்கள் என்று அறிவிக்கப்பட்ட போராளி இயக்கத்தின் முக்கியத் தலைவர் பாலகுமார், நலிந்த நிலையில் தன் மகனுடன் ஒரு மரக்கட்டையில் இராணுவம் சூழ அமர்ந்து இருக்கும் காட்சியும் படங்களாக வந்தன. கவிஞர் புதுவை இரத்தினதுரை, விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்களான யோகி, பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன், அரசியல் செயல்பாட்டாளர் எழிலன் ஆகியோர் மக்கள் முன்னிலையில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். ஏழு ஆண்டுகள் கடந்தும் அவர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. மக்கள் முன்னிலையில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் செயல்பாட்டாளர் சசிதரனின் துணைவியார் வடக்கு மாகாணக் கவுன்சில் உறுப்பினர் ஆனந்தி அவர்கள், தன் கண் முன்னாலேயே நடந்த கொடுமையைச் சுட்டிக்காட்டி ஏழு ஆண்டுக்காலமாக நீதி கேட்டுப் போராடுகிறார்.
உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக, மைத்திரிபால சிறிசேனா, சந்திரிகா, ரணில் மூவர் சதிக்குழு காணாமல் போனோர் குறித்து அவ்வப்போது பொய் அறிக்கைகளைத் தந்து வருகின்றது. காணாமல் போனோர் குறித்து முன்பு ராஜபக்சே ஒரு ஆணையத்தை அறிவித்தது போலவே, இப்போதைய அரசும் ஏமாற்றி வருகின்றது.
பல இடங்களில் ரகசியமாக சிறை வைக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு, ஊசி மருந்துகள் மூலமும், உணவுகளிலும் சிறிது சிறிதாகக் கொல்லும் நஞ்சு ஊட்டப்பட்டு, இதுவரை 107 பேர் உயிர் இழந்திருக்கின்றார்கள். பல இடங்களில் வெளியே தெரியாமல் வதை முகாம்களில் வைக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுகின்ற செய்தியும் வெளியாகி இருக்கின்றது.
உலகில் நாதியற்ற இனம் ஈழத்தமிழ் இனம்தான். 18 கல் தொலைவில் உள்ள தாய்த் தமிழகத்தில் கோடானுகோடித் தமிழர்கள் வாழ்ந்தும், 18 தமிழர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தும்கூட, 2008-2009 ஆம் ஆண்டுகளில் மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க.வின் நயவஞ்சகமான ஒத்துழைப்புடன் ஈழத்தமிழ் இனப்படுகொலையை நடத்தி முடித்தது.
நஞ்சூட்டிக் கொல்லப்பட்ட 107 விடுதலைப்புலிகள் குறித்தும், அத்தகைய உயிர் ஆபத்தில் சிக்கி இருக்கின்ற போராளிகள் குறித்தும், காணாமல் போனவர்கள் கதி என்ன என்பதை அறியும் வகையிலும், அனைத்துலக அமைப்புகளான ஐ.நா. மன்றமும், செஞ்சிலுவைச் சங்கமும், மனித உரிமைகள் கவுன்சிலும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு, இந்திய அரசின் வெளியுறவுத் துறை மூலம் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.
ஐ.நா. வின் பொதுச்செயலாளர் பான் கி மூன் கொழும்புக்குச் செல்கிறார். முன்னர் இவர் அங்கே சென்றபோது என்ன ஏமாற்று வேலைகளைச் செய்தார்களோ, அதைத்தான் இப்போதும் செய்யப் போகின்றார்கள்.
சிங்கள அரசின் மோசடி நாடகத்திற்குத் துணைபோகாமல், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடைபெறுவதற்கும், காணாமல் போனவர்கள் குறித்துத்தக்க நடவடிக்கை எடுப்பதற்கும் ஏற்ற வகையில் பான் கி மூன் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment