டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்து இருக்கின்றது. கல்விக் கொள்கையில் முற்போக்கு என்ற முகமூடியுடன், பிற்போக்குத்தனமான அம்சங்கள் வரைவு அறிக்கையில் இடம் பெற்று இருக்கின்றன.
அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள 14 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் தொடக்கக் கல்வி பெறுவது கட்டாயம் என்பதை ‘தேசியக் கல்விக் கொள்கை 2016’ மாற்றுகிறது.
கல்வியின் விழுமியங்களை புறந்தள்ள்ளிவிட்டு கல்வி என்பதே வேலைவாய்ப்புக்கhன திறன் வளர்ச்சி என்றும், வாழ்வாதாரத்தைத் தேடுவதற்கhன திறன் பயிற்சி என்றும், குழந்தைப் பருவத்தின் காலத்தை 14 ஆகக் குறைத்து, 15 வயதுக்கு மேற்பட்டவரைப் பெரியவர்கள் என அறிவிக்கிறது. குழந்தைத் தொழிலை அங்கீகரிக்கும் விதமாக குழந்தைத் தொழிலாளர்களுக்குத் திறந்தவெளிப் பள்ளி என்றும், வேலைக்குச் செல்லும் குழந்தைகள் பள்ளிக்கு வராமலேயே படிக்கலாம் என்றும் கூறுகிறது. இது தொடக்கக் கல்வியை அடிப்படை உரிமையாக்கி உள்ள அரசியல் சட்டத்தையே தகர்க்கும் முயற்சி ஆகும்.
10 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது நிரம்பிய மாணவர்கள் தங்கள் எதிர்கால உயர்கல்வி குறித்து அப்போதே முடிவு செய்ய வேண்டும் என்றும், உயர் கல்வியில் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை படிக்க விரும்பாத மாணவர்களை ஆ- பிரிவு என்றும், மற்றவர்கள் அ -பிரிவு என்றும் வகைப்படுத்தி, 10 ஆம் வகுப்பிலேயே உயர் கல்விக்கு போகாமல் வடிகட்டும் இக்கொள்கைதான் முற்போக்கு என்று கூறப்படுகிறது.
நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் இந்துத்துவா கருத்தியலைத் திணித்து சமஸ்கிருதம், இந்தி மொழிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்டவை புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
நாடு முழுவதும் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை ஒரே மாதிரியான பாடத்திட்டம் உருவாக்கப்படும். பாடத்திட்டம் தொடர்பான எந்த முடிவும் மாநில அரசுகள் மேற்கொள்ளக்கூடாது என்பது மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கும் முயற்சியாகும். கல்வித்துறையில் மத்திய அரசு ஏகபோக அதிகாரம் செய்ய முனைவது கூட்டாட்சி முறைக்கு எதிரானது ஆகும்.
பல்கலைக் கழக மானியக் குழுக்களை முற்றாகக் கலைத்து விடுவதும், அந்நிய நாட்டு பல்கலைக் கழகங்களுக்கு வரைமுறையின்றி இந்தியச் சந்தையைத் திறந்து விடுவதும், கல்வித்துறையை முற்றிலும் வணிகமயமாக்கும் முயற்சி ஆகும். அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமூக நீதி, இட ஒதுக்கீடு உரிமையை புதிய கல்விக் கொள்கை மறுக்கிறது. இதனால் ஒடுக்கப்பட்ட, பழங்குடி இன மற்றும் பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலம் இருண்டு விடும் அபாயம் ஏற்படும்.
இந்தியா முழுவதும் புதிய கல்விக் கொள்கை குறித்து முழுமையான விவாதங்களும், கருத்துக் கேட்புகளும் இன்றி மாநில அரசுகளின் கருத்துக்களையும் அலட்சியப்படுத்திவிட்டு, புதிய கல்விக் கொள்கையை பா.ஜ.க. அரசு திணிக்க முனைந்து செயலாற்றி வருவதைக் கண்டித்தும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவிக்க வலியுறுத்தியும் மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி சார்பில், ஆகஸ்டு 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை -மத்திய சுங்கத்துறை அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமை வகிக்கிறார். மாணவர் அணி மாநிலச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாநில அமைப்பாளர் பால.சசிகுமார் உள்ளிட்ட மாணவர் அணி நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்டக் கழகச் செயலாளர்கள் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், சு.ஜீவன், தி.மு.இராசேந்திரன், கே.கழககுமார், வழக்கறிஞர் ப.சுப்பிரமணி, டி.சி.இராஜேந்திரன், ஆர்.இ.பார்த்திபன், இ.வளையாபதி, மா.வை.மகேந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றுகின்றனர்.
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் கல்விக் கொள்கையில் இந்துத்துவா சக்திகள் ஊடுருவுவதையும், சமூக நீதி உரிமை பறிக்கப்படுவதையும், கல்வி வணிக மயம் ஆவதையும் கண்டித்து நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும், பெற்றோர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment