கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களின் வாழ்வாதாரமாகத் திகழும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர் மின் உற்பதி திட்டத்திற்கான மதிப்பீட்டு நிபுணர் குழு, தொழில்நுட்ப இசைவு அளித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கின்றது.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து, கேரள மாநில அரசின் நீர் வளத்துறை , தமிழக அரசுக்கு மே 4 ஆம் தேதி கடிதம் எழுதி உள்ளதாகவும், தமிழக அரசின் பதில் கிடைக்காததால் ஆகஸ்டு 11
மற்றும் 12 தேதிகளில் நடந்த நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் உற்பத்தி திட்ட மதிப்பீட்டு நிபுணர் குழு இத்திட்டத்தைத் தொடர மேல்நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளித்துள்ளது.
கேரள அரசு கடிதம் எழுதியும் தமிழக அரசு கண்டுகொள்ளாததால்தான், மத்திய அரசு சிறுவாணியின் குறுக்கே அணைகட்ட ஒப்புதல் தந்துள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
2002 ஆம் ஆண்டு பவானி ஆற்றின் குறுக்கே முக்காலி எனுமிடத்தில் அணை கட்டக் கேரளம் முயற்சித்தபோது, தமிழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அத்திட்டம் நிறுத்தப்பட்டது.
2002 ஆம் ஆண்டு நான் வேலூர் சிறையில் இருந்தபோது, பவானி நதியின் குறுக்கே அணை கட்ட கேரளாவுக்கு அனுமதி தரக்கூடாது என்று பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தினேன்.
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் பவானி படுகையில் கேரள அரசுக்கு ஒதுக்கீடு செய்துள்ள 6 டி.எம்.சி. நீரில் இத்திட்டத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கேரள மாநிலம் கூறுகிறது. எனினும் கேரள அரசு உத்தேசித்திருந்த இத்திட்டத்தின் மொத்த நீர் உபயோகம்
4.5 டி.எம்.சி. என்பதற்குப் பதிலாக
2.87 டி.எம்.சி. எனக் குறைத்து காவிரி நடுவர் மன்றம் இத்திட்டத்திற்கு நீர் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அட்டப்பாடி பள்ளத்தாக்கு நீர்ப்பாசனத் திட்டம் என்று கேரள அரசு -பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு வட்டம் சித்தூர் எனும் இடத்தில் சிறுவாணியின் குறுக்கே புவி ஈர்ப்பு அணை ஒன்றைக் கட்டத் திட்டமிட்டு வருகின்றது. இதன் மூலம்
2.29 டி.எம்.சி. நீரை 4900 ஹெக்டேர் பாசனத்திற்கும் 3 மெகாவாட் நீர்மின் உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தவும் கேரள அரசு முனைந்துள்ளது.
5.2.2007 இல் வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஆணையை எதிர்த்து கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் உச்சநீதிமன்றத்தில் சிவில் மேல் முறையீட்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளன. தமிழக அரசும் ஒரு சில அம்சங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் சிவில் மேல்முறையீட்டு வழககை தாக்கல் செய்து இருக்கின்றது. மேலும் தொடர்புடைய அனைத்து மாநிலங்களும் காவிரி நடுவர் மன்றத்தின் முன் விளக்கங்கள் கோரும் மனுக்களை
1956 ஆம் ஆண்டு நதிநீர்த் தாவா சட்டப் பிரிவு 5(3)இன் கீழ் தாக்கல் செய்துள்ள வழக்குகள் அனைத்தும் இன்னமும் நிலுவையில் உள்ளன.
காவிரிப் படுகை அல்லது அதன் துணை நதிநீர்ப் படுகைகளில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்துவது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு ஆணைக்குப் புறம்பானது ஆகும்.
இரு மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்ற நதிநீர்ப் பிரச்சினையில் தமிழக அரசின் கருத்தைப் பெறாமலேயே, கேரள அரசின் அக்கிரமமான நடவடிக்கைக்கு ஒத்துழைத்து தமிழகத்திற்குக் கேடு செய்யும் வகையில் மத்திய நரேந்திர மோடி அரசு செயல்பட்டு இருப்பது தமிழ்நாட்டுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் எனக் கண்டனம் தெரிவிக்கின்றேன்.
தமிழ்நாட்டை வஞ்சிப்பதில் அண்டை மாநிலங்களுக்குத் துணை போகும் மத்திய அரசின் துரோகத்தை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று எச்சரிக்கை செய்கின்றேன். தமிழக அரசு உடனடியாகச் செயல்பட்டு, சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள மாநிலத்தின் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி, கொங்கு மண்டலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment