மறுமலர்ச்சி தி.மு.க., இளைஞர் அணி - மாணவர் அணி - தொண்டர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் / துணை அமைப்பாளர்கள் கூட்டம், 14.08.2016 ஞாயிற்றுக்கிழமை தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது.
மாநில இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், மாநில தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர்கள் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், சு.ஜீவன், தி.மு.இராசேந்திரன், வழக்கறிஞர் ப.சுப்பிரமணி, ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் 25 ஆயிரம் பேர் சீருடையுடன் பங்கேற்பு!
திராவிட இயக்க வரலாற்று பொதிமங்கள் நிறைந்த காவிரி நதி பாய்ந்தோடும் திராவிடத் திருநகராம் திருச்சி மாநகரில் செப்டம்பர் 15 -இல் அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 108 ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் புத்தெழுச்சியோடு நடத்திடத் தயாராகி வருகிறது.
இம்மாநாட்டில் இளைஞர் அணி - மாணவர் அணி - தொண்டர் அணி ஆகிய கழகத்தின் மூன்று அணிகளின் சார்பில் 25 ஆயிரம் பேர் சீருடையுடன் பங்கேற்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.
2. உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம்!
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் வைகோ அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியின் மகத்தான வெற்றிக்குக் கட்டியம் கூறிடும் வகையில் தீவிரமாக உழைப்பது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
3. உள்ளாட்சிக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்!
தமிழகத்தில் திட்டமிட்டபடி அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தபோது தமிழக அரசு சட்டமன்றத்தில் அறிவித்தது. பெண்களுக்கு ஐம்பது விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் பேசப்பட்டது. ஆனால், இதுவரை உள்ளாட்சிப் பதவிகளுக்கhன இட ஒதுக்கீடு இனம் காணப்பட்டு அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இதனால் மக்களிடையே இந்த அரசு மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்துவதற்கு வசதியாக உள்ளாட்சிப் பதவிகளுக்கhன இட ஒதுக்கீட்டுப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.
4. தமிழக நதிநீர்ப் பிரச்சினைகளில் நரேந்திர மோடியின் பாரா முகம்!
காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, பாம்பாறு ஆகிய நதி நீர்ப் பிரச்சினைகளில் தமிழகத்திற்கு பாதகம் நேரும்போதெல்லாம் பாரா முகம் கொண்டு மத்தியில் ஆளுகின்ற நரேந்திர மோடி அரசு கண்டும் காணாததைப் போல நடந்துகொள்வது தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற பெரும் அநீதியாகும். நடுவண் அரசின் இந்த தமிழர் விரோதப் போக்கை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
5. புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து அறப்போர் ஆர்ப்பாட்டம்பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல் உயர்கல்வித்துறை பலமுனைத் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றது. கல்விக் கொள்கையை முற்றிலும் மாற்றி அமைத்து செயல்படுத்த முனைந்துள்ளது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்துத் தந்த சமூக நீதி கொள்கைக்கு விரோதமாக அறிமுகம் செய்துள்ள புதிய கல்விக் கொள்கையை உடனடியாக மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசு திரும்பப்பெற வேண்டும்.
மதவாத பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து கழக மாணவர் அணியின் சார்பில் 27.08.2016 சனிக்கிழமையன்று சென்னையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
6. பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை விரைந்து நியமித்திடுக!
மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ஆகிய பல்கலைக் கழங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்பிட வேண்டும். இதே போல, அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை பூர்த்தி செய்திட இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
7. மாணவர் கல்விக் கடனில் வங்கிகளின் அடாவடி!
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடனை திரும்ப செலுத்துமாறு உரிய காலத்திற்கு முன்பே நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். நெருக்கடி தாங்காமல் மதுரையைச் சேர்ந்த ஏழை மாணவர் லெனின் தற்கொலை செய்துகொள்ளும் அவலம் நேர்ந்தது. இதுபோன்ற அவலநிலை மீண்டும் தொடராமல் இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடனை இரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஜெயலலிதா அதை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
மேலும், உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக தற்போது 4 இலட்சம் ரூபாய் வரையில் வழங்கி வரும் மத்திய அரசு, அதை எந்தவித நிபந்தனைகளுமின்றி, கhப்புறுதி பத்திரங்கள் (surety) இல்லாமல் 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.
8. கிராமப் புற மாணவர்களுக்கு மாலை நேர படிப்பு மையங்களை ஏற்படுத்தித் தருக!
கிராமப் புறங்களில் உள்ள பள்ளி -கல்லூரி மாணவர்கள் மாலை நேரங்களில் கல்வி பயில்வதற்கு வசதியாக மாலை நேரப் படிப்பு மையங்களை (Study Centre) ஏற்படுத்திடவும், அப்படிப்பு மையங்களில் வார விடுமுறை நாட்களில் போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்த பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கhன வசதியை ஏற்படுத்தித் தந்திடவும் தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
9. முழு மதுவிலக்கை உடனே அமுல்படுத்துக!
தமிழகத்தில் நடைபெறும் படுகொலைகள், சாலை விபத்துகள், குற்றச் செயல்கள் அனைத்துக்கும் அடிப்படை காரணமாக விளங்குவது மதுதான். இப்படிப்பட்ட குற்றச் செயல்களுக்கு காரணமாக விளங்கும் மதுவை அடியோடு அகற்றுவதற்கு தலைவர் வைகோ அவர்கள் மூன்று கட்ட நடைபயணம் மேற்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதன் மூலம் முழு மதுவிலக்கு வேண்டும் என்கிற கோரிக்கை மக்களிடம் எழுந்தது. ஆனால், தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று அறிவித்து; படிப்படியாக தமிழக மக்களின் உயிரைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. மதுவின் கோரப் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிப்பதற்கு நிரந்தரத் தீர்வு பூரண மதுவிலக்கு மட்டுமே! ஆகவே, உடனடியாக தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது என மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment