பாரதிய ஜனதா கட்சி அரசு அமைந்த பின்னர், கடந்த இரண்டு ஆண்டுக் காலமாக கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைத்து வருகின்றது.
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்னும் இந்துத்துவக் கருத்தியலை ஒவ்வொரு துறையிலும் வலிந்து திணித்து, தேசிய இனங்களின் மொழி, பண்பாடு மற்றும் சமூக, பொருளாதார அடையாளங்களை அழித்து வருகின்றது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று இமயம் முதல் குமரி வரை அனைத்து தேசிய இனங்களும் குரல் எழுப்பி வரும் நிலையில், அகில இந்திய வானொலியில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் செய்திகள் ஒலிபரப்புவது இல்லை என்று முடிவு எடுத்துள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது. மாநில மொழிகளை நசுக்கும் செயலைக் கைவிட்டு, அகில இந்திய வானொலியில் அனைத்து தேசிய இனங்களின் தாய்மொழிகளிலும் செய்தி ஒலிபரப்புச் சேவையைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
சமஸ்கிருதம் தேவமொழி; மற்ற மொழிகள் அனைத்தும் நீச மொழி என்ற இந்துத்துவ மதவாதிகளின் கருத்தையே மத்திய அரசு பிரதிபலிப்பதும், இந்தி மொழியை அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாகத் திணிப்பதும் நாட்டின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் செயல் ஆகும்.
1957 ஆம் ஆண்டு பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களும், தமிழக முதல்வர் தியாகச் சுடர் பெருந்தலைவர் காமராஜ் அவர்களும் நெய்வேலிக்கு வருகை புரிந்து தொடங்கிய மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்திற்கு ‘நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்’ என்று பெயர் சூட்டினர். தமிழக மக்களின் எதிர்ப்பையும், அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளையும் அலட்சியப்படுத்திவிட்டு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பெயரை ‘என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’ என்று மாற்றி உள்ள மத்திய அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அகில இந்திய வானொலியில் தமிழ்மொழி செய்தி ஒலிபரப்பு சேவை நிறுத்தம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயர் மாற்றம் போன்ற மத்திய அரசின் தமிழ் இன விரோத வஞ்சக நடவடிக்கைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment