தமிழ்நாட்டின் மழை அளவு வழக்கமாக 440.4 மில்லி லிட்டராக இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு 168.3.மில்லி லிட்டர் மழைப் பொழிவுதான் இருந்தது. மொத்த மழை அளவில் 62 விழுக்காடு குறைவாகவே மழை பெய்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பின்படி ஜூன் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலத்தில் கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு 179 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். ஆனால், வெறும் 66.55 டி.எம்.சி. நீரை மட்டுமே கர்நாடகம் திறந்துவிட்டது. தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததாலும், காவிரியில் போதிய அளவு நீர் திறக்கப்படாததாலும் சம்பா, குறுவை பயிர் சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் நிலவும் வரலாறு காணாத வறட்சி குறித்து தமிழக அரசு நடத்திய ஆய்வில் மொத்தமுள்ள 16,682 வருவாய் கிராமங்களில், 13,305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், 15 முக்கிய பாசன நீர்த் தேக்கங்களில் நீர் இருப்பு மிகவும் குறைந்துவிட்டதால், விவசாயத் தேவைகள் மற்றும் குடிநீருக்குக்கூட தண்ணீர் தட்டுப்பாடு உருவாகி விட்டதாகவும் தமிழக அரசின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. எனவே தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களையும் வறட்சி பாதித்ததாக தமிழக அரசு அறிவித்தது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்தில்கொண்டு மத்திய அரசு ரூ.39,565 கோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலையை ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு, தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் வசுதா மிஸ்ரா தலைமையில், மத்திய செலவினத்துறை மற்றும் நிதி அமைச்சகம் சார்பில் பீனாநாத், மத்திய மின்சாரத்துறை சார்பில் அமித்குமார் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தது. இந்தக் குழு 2017 ஜனவரி 22 முதல் 25 ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டது.
தமிழக அரசு ரூ.39,565 கோடி வறட்சி நிவாரண நிதி வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள நிலையில்,தமிழகத்தில் வறட்சி நிலையை நேரில் ஆய்வு செய்த மத்தியக் குழு, யானைப் பசிக்கு சோளப் பொரி போன்று வெறும் 2096.80 கோடி ரூபாய் வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பது வேதனை தருகிறது. இது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.
தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயிகள் 275 பேர், தற்கொலை செய்துகொண்டும், அதிர்ச்சியாலும் உயிரிழந்துள்ளனர். கால்நடைகளைக்கூடப் பராமரிக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் குடிநீருக்காக மக்கள் அல்லல்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி வருமானம் இழந்து நிர்க்கதியாகிவிட்டனர். கடுமையான கடன் சுமையால் விவசாயக் குடும்பத்தினர் செய்வதறியாமல் திகைத்து கண்ணீரும் கம்பலையுமாக புலம்புகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக்குழு ஆகியவற்றை அமைத்து, காவிரி நீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமையைச் செய்யாமல் வஞ்சித்த மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு வறட்சி நிதி அளிப்பதில் பாரபட்சம் காட்டுவது அநீதியாகும். மத்தியக் குழுவின் பரிந்துரையை பரிசீலனைக்கு ஏற்காமல், உடனடியாக தமிழக அரசு வைத்த கோரிக்கையின்படி ரூ.39,565 கோடி வறட்சி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தனது 23-03-2017 அன்றுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment