தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தியதால், பெட்ரோல் விலை 3 ரூபாய் 78 காசுகளும், டீசல் விலை 1 ரூபாய் 76 காசுகளும் அதிகரித்து இருக்கிறது. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்வதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதனால் அவ்வப்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன.
கச்சா எண்ணெய் விலை 2008 ஜூலை மாதம் ஒரு பீப்பாய்147 டாலர் என்ற அளவில் உச்சத்தில் இருந்தது. அப்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 73. 2014 இல் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற போது, பன்னாட்டுச் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 112 டாலர் என்ற அளவில் இருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை 70 விழுக்காடு குறைந்துவிட்டது.
மத்திய அரசு தொடர்ந்து கலால் வரியை உயர்த்தியதால், பெட்ரோல் - டீசல் விலையும் அதிகரிக்கும் நிலை நீடிக்கிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை 55 டாலர் என்ற அளவில்தான் இருக்கிறது. கச்சா எண்ணெய் விலையோடு ஒப்பிட்டால் தற்போது பெட்ரோல் - டீசல் விலை ஒன்றரை மடங்கு குறைவாக இருக்க வேண்டும்.
இந்நிலையில், தமிழக அரசு பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 27 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடு என்றும், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை 21.43 விழுக்காட்டிலிருந்து, 25 விழுக்காடாகவும் உயர்த்தி இருக்கிறது. இதனால் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து மக்கள் மீது பெரும் சுமை ஏற்றப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் நடவடிக்கையால் விலைவாசி மேலும் உயரும். சாதாரண எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசு பெட்ரோல் - டீசல் மீதான வாட் வரியை இரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் இன்று 05-03-2017 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment