தமிழக அரசின் 2017-18 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
நடப்பு நிதி ஆண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடாக இருக்கும் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இந்த இலக்கை அடைவதற்கு தேவையான ஊக்குவிப்புத் திட்டங்கள் நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்று இருக்கின்றன.
வேளாண் துறைக்கு ரூபாய் 1,680.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. நீர்வளத்துறைக்கு ரூபாய் 4,791 கோடி, குடிநீர்ப் பிரச்சினையைச் சமாளிக்க 615 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு 6,000 கோடி ரூபாய், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூபாய் 1,000 கோடி ஒதுக்கீடு என்பது வரவேற்கத்தக்கது. பள்ளிக் கல்விதுறைக்கு 26,932 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூபாய் 3,680 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி, பல்கலைக் கழகங்களில் 200 புதிய ஆவின் பாலகங்கள் ஏற்படுத்தப்படும் என்கிற அறிவிப்பு பாராட்டத்தக்கது.
காஞ்சி மாவட்டத்தில் ரூபாய் 130 கோடியில், 330 ஏக்கரில் மருத்துவப் பூங்கா அமைக்கும் திட்டமும், தருமபுரியில் உணவு பொருள் குழுமம், இராமேஸ்வரத்தில் கடல் உணவுப் பொருள் குழுமம், திருப்பெரும்புதூரில் மின்னணு பொருள் உற்பத்தி மையம், காஞ்சிபுரம் - கரூர் மாவட்டங்களில் ஜவுளிக் குழுமம் அமைக்கப்படும் என்பவை வெறும் அறிவிப்புகளாக நின்றுவிடாமல், செயல்படுத்தினால் தமிழகத்திற்கு பெரும் பயன் அளிக்கும். அதேபோல ஈரோடு, பூதலூர், நெகமத்தில் தென்னை நார் கயிறு குழுமங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
கடுமையான நெருக்கடிக்ளுக்கு உள்ளாகி இருக்கிற சிறு, குறு, நடுத்தர தொழில்துறையை மேம்படுத்த உரிய திட்டங்கள் இல்லாமல், அத்துறைக்கு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும்,
பருவ மழை பொய்த்ததாலும், கடுமையான வறட்சியாலும் தமிழகம் முழுவதும் வேளாண்மைத் தொழில் மிகவும் பாதிக்கப்பட்தால் தற்கொலை செய்துகொண்டும், பயிர்கள் கருகியதால் ஏற்பட்ட அதிர்ச்சியாலும் இதுவரை 275 விவசாயிகள் மடிந்துள்ளனர். அதுபற்றி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாததும்,
வறட்சி நிவாரண நிதி 5 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே என்ற நிபந்தனையை இரத்து செய்யக் கோரி விவசாயிகள் வைத்த கோரிக்கையை நிதி அமைச்சர் கவனத்தில் கொள்ளாததும்,
கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு நான்கு ஆயிரம் ரூபயாக நிர்ணயிக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் கோரி வருவதையும் தமிழக அரசு செவிமடுக்காததும்,
சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தரவேண்டிய இரண்டாயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையைப் பெற்றுத் தர உறுதி தராததும் ஏமாற்றம் தருகிறது.
தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை ரூபாய் மூன்று இலட்சம் கோடி என்றும், நிதிப் பற்றாக்குறை 41,977 கோடி என்றும் நிதி அமைச்சர் கூறி இருப்பதும் கவலை அளிக்கிறது.
கடுமையான நெருக்கடிகள் மிகுந்த சூழலில், சவால்கள் நிறைந்த நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்திருக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்றைய 16-03-2017 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment