மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் இன்று 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், ஏ.கே.மணி உள்ளிடோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் எண்-1
2017 ஏப்ரல் 12 ஆம் நாள் நடைபெற இருக்கின்ற ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணிப்பது என்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானிக்கின்றது.
தீர்மானம் எண்-2
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவினை, 2017 மார்ச் 30 ஆம் தேதி வியாழன் அன்று மாலை ஐந்து மணிக்கு, சென்னை காமராசர் அரங்கத்தில் சிறப்பாகக் கொண்டாடுவது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானிக்கின்றது.
.
தீர்மானம்-3:
மார்ச் 21: மதுஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றம், 2002 ஜனவரி 29 ஆம் நாள், அதன் தலைவர் திரு. வை.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் கூடி, “நெல்லை மாவட்டத்தில் மதுபான கடை அமைக்கும் ஊர்களின் பட்டியலில் கலிங்கப்பட்டியும் இடம்பெற்று இருக்கின்றது; கலிங்கப்பட்டியில் மதுக்கடையைத் திறக்கும் முயற்சியை மாவட்ட ஆட்சியர் கைவிட வேண்டும் என கலிங்கப்பட்டி ஊராட்சி பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்’ எனக் கோரிக்கை விடுத்துத் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தது.
ஆனால் இந்தத் தீர்மானத்தை அலட்சியப்படுத்திவிட்டு, 2003 நவம்பர் 23 ஆம் நாள், இல் கலிங்கப்பட்டியில் 10862 ஆம் எண் கொண்ட டாஸ்மாக் மது விற்பனைக் கடையைத் தமிழக அரசு திறந்தது.
கலிங்கப்பட்டி மதுக்கடையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், 2015 ஆகஸ்டு 2 ஆம் தேதி கலிங்கப்பட்டியில் வைகோ அவர்களின் தாயார் நினைவில் வாழும் மாரியம்மாள் அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அணிதிரண்டு டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என்று அறப்போராட்டம் நடத்தினர். அதனால் அன்றைக்கு மதுக்கடையை மூடி விட்டனர்.
ஆனால், மறுநாள் காவல்துறையினரைக் கொண்டு வந்து குவித்து, மீண்டும் மதுக்கடையை திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. கொந்தளித்துப்போன மக்கள் அறப்போராட்டதைத் தொடர்ந்தனர். கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் பங்கேற்ற அந்த அறப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையை ஏவினர். பொதுமக்களைத் தடிகளால் தாக்கினர். பொதுச்செயலாளர் வைகோ, கலிங்கப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் வை.இரவிச்சந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமுற்றனர். கழகப் பொதுச்செயலாளர் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு இடையே பொதுமக்கள் எழுச்சியால் கலிங்கப்பட்டி மதுக்கடை சூறையாடப்பட்டது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 52 பேர் மீது, கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் 2015, ஆகஸ்டு 4 ஆம் தேதி கலிங்கப்பட்டி ஊராட்சிமன்றம் திரு வை.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் கூடி, கலிங்கப்பட்டி டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியது. மேலும் அதே நாளில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வை.இரவிச்சந்திரன் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
2015, ஆகஸ்டு 13 ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ‘கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத்தின் தீர்மானத்தை பரிசீலனை செய்து நியாயமான முடிவு எடுக்க வேண்டும்’ என்று நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
ஆனால் நெல்லை மாவட்ட ஆட்சியர் கலிங்கப்பட்டி ஊராட்சி மன்ற சிறப்புத் தீர்மானத்தை ரத்து செய்தார்.
இதனை எதிர்த்து ஊராட்சிமன்றத் தலைவர் வை.இரவிச்சந்திரன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் ரிட் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த மாண்பமை நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, 2013, நவம்பர் 5 ஆம் தேதி, ‘கலிங்கப்பட்டி டாÞமாக் மதுக்கடையைத் திறக்கக் கூடாது’ என்று இடைக்கால ஆணை பிறப்பித்தது. அந்த வழக்கு நிலுவையில் இருந்தது.
2016, நவம்பர் 16 ஆம் தேதி, நீதியரசர்கள் நாகமுத்து, முரளிதர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது ‘கலிங்கப்பட்டி டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும்’ என்று ஆணித்தரமான தீர்ப்பை வழங்கினர்.
முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைந்த பின்னர் திரு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்தும், கலிங்கப்பட்டி டாÞமாக் மதுக்கடையைத் திறக்கவும் உச்சநீதிமன்றத்தில் 2016, பிப்ரவரி 13 ஆம் தேதி மேல்முறையீடு செய்தது.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, பிப்ரவரி 27 ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சஞ்சய் கிஷன் கவுல் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அறிமுக நிலையிலேயே தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்துவிட்டனர்.
ஊராட்சி மன்றம் கொண்டு வரும் தீர்மானத்தை மாற்ற அரசுக்கு அதிகாரம் கிடையாது என்பதை அந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் உறுதி செய்து இருக்கின்றது.
இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் கலிங்கப்பட்டி ஊராட்சிமன்றத்தின் தீர்மானத்திற்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் அளித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இருக்கின்றது.
டாÞமாக் மதுக்கடையை அகற்றி நிரந்தரமாக மூடுவதற்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் வகை செய்து இருக்கின்றது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ‘முழு மதுவிலக்கே நமது இலக்கு’ என்பதை வலியுறுத்தி 3000 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டார். மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. அந்த வகையில் கலிங்கப்பட்டி மதுக்கடையை மூடிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை விளக்கிடும் வகையில், தமிழகம் முழுவதும் மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியை, மார்ச் 21 ஆம் தேதி மாலை 4 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
தீர்மானம்-4
முத்துக்கிருஷ்ணன் மரணம்: மத்திய புலனாய்வுத்துறை விசாரணை வேண்டும்!
கடந்த ஆண்டு ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் படித்துவந்த ரோகித் வெமுலா என்ற தலித் மாணவர் விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜாதிக் கொடுமையால் நிகழ்ந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அப்போது ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் படித்தவர் சேலம் தலித் மாணவர் முத்துக்கிஷ்ணன், ரோகித் வெமுலாவின் சாவுக்கு நீதி கேட்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். இவர் போராட்டக் கூட்டுக் குழுவின் உறுப்பினர்களுள் ஒருவராக இருந்து பல்வேறு போராட்டங்களில் நேரடியாகக் கலந்துகொண்டது மட்டும் அன்றி, சமூக வலைதளங்களிலும் ஆதரவு திரட்டினார்.
அதன்பிறகு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நவீன வரலாற்றுத் துறையில் ஆய்வு (எம்.~பில்.,) படிப்பை மேற்கொண்டு வந்த முத்துக்கிருஷ்ணன் பல்கலைக் கழகத்தில் நிலவும் பாரபட்சமான போக்குகளைத் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அவர் மார்ச் 12 ஆம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சாதிக் கொடுமைகளால் நிகழும் இத்தகைய மர்மச் சாவுகள் மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். தமிழ்நாட்டு மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிட்டு, அவரது மரணத்துக்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும், இக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.
தீர்மானம்-5
அத்திக்கடவு -அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை உடனடியாகத் தொடங்குக!
தமிழக அரசின் 2017-18 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அத்திக்கடவு -அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூபாய் 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்ற அத்திக்கடவு -அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம்-6
சிங்கள அரசின் வஞ்சகத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது
இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனத்தைப் பூண்டோடு ஒழிக்கத் திட்டமிட்டு, இந்தியா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் ஆயுத உதவியுடன் சிங்கள இனவாத அரசு கோரமான இனப்படுகொலையை நடத்தியது. பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், ஆயுதம் ஏந்தாத நிராயுதபாணியான தமிழர்கள் அனைவரையும் இலட்சக்கணக்கில் கொன்று குவித்தது. அப்போது, அனைத்துலக நாடுகளில், பெரும்பாலான நாடுகளின் கண்கள் குருடாகிவிட்டன; காதுகள் செவிடாகிவிட்டன; வாய்கள் ஊமையாகிவிட்டன.
ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில், ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் 34 ஆவது அமர்வுக் கூட்டத்தில் தமிழனுக்கான நீதியை நிரந்தரமாகக் குழிதோண்டிப் புதைக்க சிங்கள அரசு செய்யும் சதிக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, வடஅயர்லாந்து, மாசிடோனியா ஆகிய நாடுகள் வஞ்சகமான தீர்மானத்தை முன்வைத்துள்ளன.
சிங்கள அரசின் சம்மதத்தோடுதான் எந்த விசாரணையும் நடைபெற வேண்டும் என்பதோடு, விசாரணைக்கு இரண்டு ஆண்டுக் கால அவகாசமும் கொடுத்து நிரந்தரமாக இனக்கொலைக் குற்றத்தை மூடி மறைக்க ஏற்பாடு செய்துள்ளன.
இலங்கை அரசுக்குக் கால அவகாசம் கொடுக்கக் கூடாது; ‘இலங்கை அரசின் சம்மதத்துடன்’ என்ற வாசகங்களை நீக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை இந்திய அரசு ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், இலங்கை அரசுக்கு ஆதரவான நயவஞ்சகத் தீர்மானத்தை எதிர்த்து வாக்கு அளிக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது என் தலைமை கழகமான தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment